

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே பொது நூலகத்தில் சிறார்களுக்கான ஒரு பிரிவு எனத் தொடங்கி, படிப்படியாகக் குழந்தைகளுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தனி நூலகம் என்கிற சிந்தனை உதித்து விட்டது. தனி நூலகங்களும் உருவாக்கப்பட்டுவிட்டன.
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள நூலகம்தான் உலகிலேயே மிகப் பெரிய குழந்தைகள் நூலகம் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் ஆறு லட்சம் நூல்கள் இங்கு உள்ளன. கடந்த 2019இல் அந்நூலகம் பொன்விழாவைக் கொண்டாடியது. தொடக்கத்தில் எல்லா நாடுகளிலும் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு அவர்களது பாடத்திட்டத்துக்கு உதவுகிற வகையில்தான் நூலகங்கள், நூலகப் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. ஆனால், போகப் போக அம்முயற்சி கள் ஒவ்வொரு குழந்தையையும் புரிந்து கொள்வதில், ஒவ்வொருவரின் வாசிப்பு ரசனையை, ஆர்வத்தை, தனிப்பட்ட அவர் களது தேர்வினைப் புரிந்துகொள்வதில் கொண்டுவந்து நிறுத்தியது.
ஒன்று போலச் சிந்திக்கிற, அச்சு வார்ப்புகளைத்தான் பள்ளிகளில் உருவாக்க முடியும். தனித்த ஆளுமைகளை நூலகங்களில்தான் உருவாக்க முடியும். நூலகங்களில்தான் உருவாகியும் இருக்கிறார்கள். நகரமெங்கும் இருக்கிற தெரு விளக்குகளைப் போல நகரின் ஒவ்வொரு மூலையிலும் குழந்தைகளுக்கான நூலகங்களை உருவாக்க வேண்டும் என்பது ஜப்பானியர்களிடையே மிகப் பிரபலமான வாசகம். அவர்கள் தேசத்தின் மிகச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகிற பயிலரங்குகளாக நூலகத்தைக் கருதுகின்றனர்.
இத்துடன் நம் நாட்டில், தமிழகத்தில் நூலகம், நூலகத்தில் சிறாருக்கான பிரிவு, தனி அரங்கம் போன்றவற்றை நாம் ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளலாம். இந்திய அளவில் 1967இல் தனியே குழந்தைகள் நூலகம் ஒன்று உருவாக்கப்பட்டது.
புது டெல்லி ஜவாஹர்லால் மாளிகையில், குழந்தைகள் புத்தக அறக்கட்டளை (CBT) கட்டிடத்தில் மருத்துவர் பி.சி. ராய் நினைவாக கார்ட்டூனிஸ்ட் கே.சங்கரால் உருவாக்கப்பட்ட அந்நூலகம் சாதாரண ஒன்றல்ல. அன்றைய குடியரசுத் தலைவர் ஜாஹிர் உசேனால் திறந்து வைக்கப்பட்டது. சுமார் 40,000 நூல்களைக் கொண்டு மிகச் சிறப்பாகத் தற்போதும் இயங்கிவருகிறது. பள்ளியில் பயிலும் குழந்தைகள் மட்டுமே இதில் உறுப்பினராக இணைய முடியும்.
சாதாரணம், சிறப்பு, இரட்டைச் சிறப்பு என உறுப்பினர் கட்டணங்கள் மூன்று விதமாக இருக்கின்றன. சாதாரண வீட்டுக் குழந்தைகள் உள்ளே நுழைய வாய்ப்பில்லை என்றுதான் தெரிகிறது. 8 வயது வரை, 12 வயது வரை, 17 வயது வரை என நூல்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதே போல
நூலாசிரியர், தலைப்பு, வகைமை வாரியாகவும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. நூல் எடுப்பதில் பெற்றோர் / பாதுகாவலர் உதவலாம். அறையில்
குழந்தைகளுடன் உட்கார அனுமதி இல்லை.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறார் அரங்கம் உண்டு. இங்கே ஞாயிற்றுக்கிழமைகளில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. சமீபத்தில் புதுக்கோட்டையில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் சங்கத்தின் முதல் கூட்டத்தில் ‘வள்ளியப்பா பிறந்த புதுக்கோட்டையில், சிறார் நூலகம் ஏற்படுத்த வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறைந்தபட்ச அளவிலான வலியுறுத்தல். ஆனால், பெரிய அளவில் வலியுறுத்தப்பட்டால்தான் அரசு இயந்திரம் சிறிய அளவிலாவது நகரும் என்பதே அனுபவப் பாடம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகளுக்கான தனி நூலகங்கள் உருவாக்கப்பட வேண்டும். அனைத்து நூலகங்களிலும் சிறாருக்கான தனிப் பிரிவுகள், அரங்குகள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.
பள்ளிகளிலும் அதுபோல நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். குழந்தைகளின் தொடர் வாசிப்பு சார்ந்து அரசும் சமூகமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
- பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: sundar.tnsf@gmail.com