

நான் கல்லூரிப் படிப்பு முடிந்து முழுச் சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டிருந்தேன். காடு, ஆறு, வயல், வரப்புகளில் புத்தகங்களுடன் திரிந்தேன். நகர நூலகத்தில் கைக்குக் கிடைத்தவற்றைப் படித்தேன். யாரெனத் தெரியாமலே புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், அசோகமித்திரன், தி.ஜானகிராமன் போன்றவர்களை அடைந்தேன். பல வண்ண இதழ்களின் நடுவில் ‘கணையாழி’ இதழ் வித்தியாசமாயிருந்தது. அதன் வாசிப்பு அனுபவம் ஆழமாயிருந்தது.
எனக்குக் கால் கட்டுப் போட, வேலைக்கு அனுப்ப வீட்டார் விரும்பினார்கள். உறவினர் ஒருவர் தோல் தொழிற்சாலைக்குப் பரிந்துரைத்தார். காலை ஒன்பதிலிருந்து இரவு பன்னிரண்டு மணி வரை கணக்காளர் வேலை. பேருந்தில் சென்று சில கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும். வழியில் தோல் தொழிற்சாலைகள் செறிந்த இடத்தில் தொடர்பில்லாமல் புறாக் கூண்டு நின்றிருந்தது. பரபரப்பின் நடுவில் புறாக்கள் அமைதியாக அமர்ந்தும் பறந்தும் கொண்டிருந்தன. தொழிற்சாலையில் கணக்கெழுதுவது குறைவு.
ஆனால், வேலை முடிகையில் தொழிலாளர்களுக்குக் கூலி கழிக்க வேண்டும். அவர்கள் பல ஆண்டுகளாகப் பணியாற்றுபவர்கள். பதிவேடுகளில் பெயர்கள் இருக்காது. சம்பளம் கொடுத்தால் தொழிலாளர்களுக்கான உரிமைகள் கிடைக்கும். அதைத் தவிர்க்கத் தினக் கூலி வழங்கினார்கள்.
நள்ளிரவில் நேரம், கூலிக் கணக்கிட்டுப் பணம் தர வேண்டும். நோட்டில் கையெழுத்துக் கிறுக்கல்கள் அல்லது கைநாட்டுகள் வாங்க மறக்கக் கூடாது. தூக்கத்தாலும் பசியாலும் எனக்குக் கணக்கும் காசு எண்ணிக்கையும் தவறும். ஆனால், தொழிலாளர்களுக்குத் தெளிவான மனக் கணக்கு உண்டு. அதிகமாயிருந்தால் திருப்பித் தருவார்கள். நான் நள்ளிரவில் சோர்ந்து வீடு திரும்புவேன். வழியில் ஆற்றில் சடலங்கள் கொழுந்துவிட்டெரியும்.
பேய் நம்பிக்கை இல்லையெனினும் பயத்தில் மனம் பதறும். அகால வேளையில் உண்ண முடியாமல் வீட்டுப் படுக்கையில் விழுவேன். ஒரு நாள் வேதனையாலும் வலியாலும் அழுதேன். வேலைக்குச் செல்ல வேண்டாமென அம்மாவும் கண்ணீர் சிந்தினார். என் முதல் சம்பளத்தை வாங்கினேன். தொழிற்சாலை உரிமையாளரிடம் விடைபெற்றேன்.
நான் தொழிற்சாலைக்குப் போகும் வரும் வழியில் ஒரு பெயர்ப் பலகை கண்ணில் பட்டுக் கொண்டிருந்தது. தோல் தொழிலாளர்கள் சங்கம் என்று சிவப்பு வண்ணத்தில் எழுதியிருந்தது. இதுவரை உள்ளே செல்ல நேரமில்லை. வேலையைத் துறந்ததும் தயங்கியபடி நுழைந்தேன். சுவரில் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் படங்கள் வரிசையாகத் தொங்கின. கீழே சங்கத் தலைவர்கள் அமர்ந்திருந்தார்கள். தீவிரமான ஸ்டாலின் சாயலோடிருந்தார் அ.வெங்கடேசன். அமைதியாக எங்கெல்ஸ் போலிருந்தார் சா.இராமமூர்த்தி. அவர்களைக் கல்லூரிக் காலத்திலிருந்து தமிழ்ப் பேராசிரியர்கள் வழியாகத் தெரியும். சமூக நோக்கிலான கவிதைகள், கதைகள் எழுதுவார்கள். அக்காலத்தில் தொழிலாளர்களுக்குச் சொற்பக் கூலி கொடுக்கப்பட்டது. இரண்டு தலைவர்களும் தொழிற்சங்கம் கட்டித் தொடர்ந்து போராடினார்கள். தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்கப்பட்டது. இப்போது அவர்களால் சமூகத்தில் கௌரவமாக வாழ முடியும்.
இருவரும் என்னை எவ்விதப் பேதமும் இல்லாமல், இயக்கங்களுக்கே உரிய தோழமையுடன் விசாரித்தார்கள். நான் அப்போதுதான் வேலையிலிருந்து நீங்கியதைச் சொன்னேன். மிகவும் மகிழ்ந்தார்கள். தொழிற்சங்கம் கூலி உயர்வுக்கு மட்டும் போராடுவது அல்ல, தொழிலாளர்களை அரசியல்படுத்துவதும்தான் என்று சிறு வகுப்பெடுத்தார் அ.வெங்கடேசன். அதற்காக நீண்ட நாள் கனவான ‘வேர்வை’ என்ற சிறுபத்திரிகையைத் தொடங்க வேண்டும் என்றார். ‘கணையாழி’ போன்ற வடிவம். ஒரு ரூபாய் விலை. அதற்கு என்னைத் துணையாசிரியராக நியமித்தார்.
அச்சில் வெளியான முதல் கதையை ‘வேர்வை’ முதல் இதழில் எழுதினேன். ‘ராஜா என்கிற புறா’ என்று தலைப்பு. அதற்கு முன் கையெழுத்துப் பத்திரிகையில் நிறைய சிறுகதைகளை எழுதியிருந்தேன். இக்கதையைத் திட்டமிட்டு எழுதவில்லை. அது தானாக என் தோல் தொழிற்சாலை வேலை அனுபவத்தையொட்டி எழுதிக்கொண்டது. அதில் நான் சிறுவனாக மாறியிருந்தேன். குழந்தைத் தொழிலாளியாக நாளெல்லாம் வேலை செய்தேன்.
தொழிற்சாலை, தோல்கள் ஊறும் பெரும் இயந்திரமாயிருந்தது. அது ஓயாமல் சுழன்றுகொண்டிருந்தது. கீழே கழிவுநீர் சிற்றலைகளுடன் ஆறாகப் பாய்ந்தது. திடீரென இயந்திரத்தின் மேல் புறா வழி தெரியாமல் பறந்து வந்து அமர்ந்தது. அவனை உற்று நோக்கியது. பற்சக்கரங்களில் புறா சிக்கிக்கொள்ளுமெனப் பயந்து சிறுவன் துரத்துகிறான். அது சுவாரசியமான விளையாட்டாகிறது. உரிமையாளர் பார்த்துவிட்டுப் பையனை வேலையிலிருந்து நீக்குகிறார். அவன் வெளியேறிக் கூண்டருகில் நின்று புறாக்கள் பறப்பதைக் கண்ணீருடன் வேடிக்கை பார்க்கிறான்.
- எழுத்தாளர்
தொடர்புக்கு : kulasekaranvnb@gmail.com