

அறிவியலும் கவிதையும் தொடர்ந்து விரிவுகொண்டு வருபவை. உள்ளுணர்வு, அனுபூதி போன்ற தூண்டல்களில் அறிவியலும் அறிவார்த்தம், தர்க்கம், கணிதம் போன்ற உறுதிகளில் கவிதையும் ஊக்கம்பெற்ற தருணங்கள் நிகழ்ந்தது உண்டு. கவிதையில், புனைவில், அறிவார்த்தத்தின் இடம் என்பது திறந்து பேச வேண்டிய ஒரு பொருள்.
அறிவு – உணர்வு, சிந்தனை – கற்பனை, மனம் - உடல், யதார்த்தம் - புனைவு, படைப்பு - செய்நுட்பம் போன்ற காலாவதியான எதிரிடைகள் ஒரு விவாத சந்தர்ப்பம் என்றாலும் படைப்பு என்ற மொழி ஆகிருதிக்குள் இணைந்து ஒரே குருதியாகவே பாய்கிறது. ஒரு தாவரத்துக்குள், நுண்ணுயிருக்குள், ஒரு செல்லுக்குள் அறிவும் கற்பனையும், சிந்தனையும் படைப்பூக்கமும், நினைவும் சரீரமும் பிளவுபடாத ஒருமையிலிருக்கின்றன என்பதைக் கருத வேண்டும். கவிதை ஒரு தனிமனித அந்தரங்க அறிதல், உள்ளுணர்வின் வெளிச்சம், தன்னிலையின் கரைதல் என்கிற வாதங்கள் இன்று பழுப்படைந்துவிட்டவை. அனுபவத்திலிருந்து விலகி நிற்றலும், அவதானித்தலும், அறிவார்ந்த வேடிக்கையும்கூட அதன் உறுதிகள்தாம். நவீன கவிஞன் எப்போதும் கவிதையைச் செய்து பார்ப்பவனாக, கவிதைக்கு வெளியே நிற்கும் பரிசோதனையாளனாக இருக்கிறான். மனித அறிதலின் அறுதிகளை, அதன்மீது கட்டப்பட்ட ஒற்றை மெய்யை மீறிச் செல்லும், பின் நவீன அறிகளங்களுடன் ஊடாடும் இன்றைய அறிவியல், தன்னைத் தானே தாண்டிக் குதித்தும் செல்கிறது. அங்கு விஞ்ஞானம் கவிதையின் மொழிக்குள் புகுந்துவிடுகிறது.
ஒப்பன்ஹைமரும் கவிதையும்
நவீன கவிதையில் அசட்டு பாவங்களை எள்ளிய அறிவார்த்த விழிப்பின் தீவிரம் அதிரும் இடம் பிரமிள். அணுகுண்டின் படைப்புச் சூத்திரத்தை, அதன் இயற்பியல் சிருஷ்டிகரத்தை ஐன்ஸ்டைனின் மனநிழல்களுடன் மொழியும் அவரது E=mc2 கவிதை, ‘ஒப்பன்ஹைமர்’ படம் வெளியாகியிருக்கும் தருணத்தில், மீள வாசிக்கத்தக்கது.
நவீனக் கவிதையில் அறிவு நிலையின் வீச்சு எனத் தேடும்போது பிரம்மராஜனின் அதீத மொழியும் மரபுமனம் திடுக்கிடும் அயற்படிமங்களும் ஒரு தனிப்பாதை. நித்திரையற்ற இரவை ‘ரேடியம் முட்களெனச் சுடர்விடுகிறது விழிப்பு’ எனும்போதும், பிரிவின் உறைந்த தருணத்தை, ‘நீரில் மூழ்கிய கடிகார முட்களென’ எனும்போதும் பிரம்மராஜனின் தனிரசவாதம் தொடங்கிவிடுகிறது. அவர் மொழிபெயர்த்த மிரோஸ்லாவ் ஹோலூப் கவிதைகள் ஒரு முக்கிய வருகை. நமது அன்றாடம் என்னும் வாழ்க்கைப்பாட்டிலிருந்து விடுவித்துக் கவிதையை அறிவியலின் அசாதாரணமான அறிகளங்களின் மீது நிகழவைக்கிறார் ஹோலூப். மனிதார்த்தக் கூறுகளும் அறிவியல் தொழில்நுட்ப அறிதல்களும் ஊடறுக்கும் வெளிகளில் அவை வினைபுரிகின்றன. இத்தொகுப்பில், ஒரு தொற்றுயிரியின் ஆழ்நினைவிலிருந்து பீறிடும் ஒரு கவிதை மனித மைய அகங்காரத்தை மொத்தமாக அசைத்துப் பார்க்கும் ஒரு குரல்.
இயற்கையின் நிர்தாட்சண்யமான பரிணாமப் போக்கை, புலப்படா அதன் தனி சூட்சமத்தை எந்தத் தன்வயப்பாடுமின்றி இடைவெளியுடன் நின்று வேடிக்கை பார்க்கும் கவிதை தேவதச்சனின் ‘கடைசி டினோசர்’. மனித ஞாபகமற்ற தொலைவின் ஒரு தருணத்துள் அது பிரவேசிக்கிறது.
அறிவியற்புனை கவிதையின் தனித் தொகுப்பாகவே வந்த பாம்பாட்டிச் சித்தனின் ‘இஸ்ரேலியம்’ முக்கிய முயற்சி. இத்தொகுப்பில் மனித நேர்வுகளை அறிவியலின் சட்டகங்களுக்குள் பொருத்தி வேடிக்கை செய்தலின் ஒரு புறநிலைப் பார்வை உண்டு. இருப்பு/சாவு என்னும் இரண்டு சாத்தியத்திலும் கால்வைத்தபடி சாலையைக் கடக்கும் நிதர்சனப் பூனையின் முன் ஷ்ரோடிங்கரின் பூனை என்ற இயற்பியல் உருவகம் முன்னிறுத்தப்படும் ஒரு கவிதை. மூடியிருக்கும் கணத்துக்குள் எல்லாச் சாத்தியங்களும் சமனிலைப்பட்டுள்ளன.
சமகாலத்தில் வலுவான ஓர் அறிவுத்தளம் கொண்டவை சபரிநாதன் கவிதைகள். செவ்வியல், உணர்வெழுச்சி, நிதானம், மையமின்மை என மாறுபட்ட கூறுகளுடன் மனித இருப்பின் அபத்தத்தையும் அழகையும் ஒருங்கே வியப்பவை. வேற்றுக்கோள் மீவாசிகள் பூமிக்கு வர நேர்ந்தால் அவர்கள் மனிதர்களை நுண்கிருமிகளெனக் கருதி அழித்துவிடக்கூடும் என்ற ஹாக்கிங்கின் எச்சரிக்கை நினைவிருக்கலாம். பேரண்டத்தில் மனித இருப்பின் மதிப்பு என்ன, தொலைதூர விண்மீன்களின் பார்வையில் நம் கனவுகளுக்கும் மனிதனின் மகா எம்பல்களுக்கும் என்ன மதிப்பு. சபரிநாதன் கவிதை: ‘...பெரிதாகக் கனவு காண வேண்டும்/ நூறு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவது/அல்லது நாலைந்து நதிகளை இணைப்பது/ ஏனெனில், விண்ணகத்திலிருந்து காண்கையில் நம் கனவுகள் நுண்கிருமிகள் எனத் தோன்றக் கூடும்/நம் பிரார்த்தனைகள் அலுப்பு தட்டக்கூடும்/தூங்குகிறோம் நாம் விழுங்கியது மருந்துப்போலி என்ற போதும்....’.
விண்ணோடியின் நாள்
மனிதர்களைக் கடந்து மனிதர்கள் சிருஷ்டித்த அப்பட்டமான குருடுமையில் அபோதமாக இயங்கிக்கொண்டிருக்கும் இத்தனை எந்திரத் தொகைகள், மின்னணு ரூபங்கள் தங்கள் உலோக ஜீவிதத்தின் உள்ளிருந்து எழுப்பும் குரலை அவற்றின் ஆன்மிகப் பொருண்மையை அறிவியற்புனை கவிதைகள் நெருங்கி அறியக்கூடும். தொழில்நுட்ப இயந்திரப் பெருநகர வெளிகளின் அகவெளிகளை உசாவிப் பார்க்கும் ஓர் உட்தளம் சமகாலத்தின் பலரது கவிதைகளில் உண்டு.
நேசமித்திரனுடைய ஒரு கவிதை சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் வசிக்கும் விண்ணோடி ஒருத்தியின் நாளைப் பற்றியது. ‘கரணம் தப்பினால் மரணமற்ற விண்வெளி ஓடம்’ எனத் தொடங்குகிறது அக்கவிதை, தன் பாடுகள், கனவு, கவிதை, கடவுள் உள்ளிட்ட ஈர்ப்புமண்டல வஸ்துக்களாலான மனிதன், சூனிய ஈர்ப்பின் மிதவை வெளியில் கொள்ளும் கணமற்ற உள்ளீடற்ற விடுவிப்பையும் குழப்பத்தையும் குறித்தது.
சுய அனுபவச் சலிப்புக்கு அப்பால், அறிவிஜீவிதமும் கனவுத்தன்மையுமான மீவெளிகளைப் பரீட்சார்த்தம் செய்யும் பாலசுப்ரமணியம் பொன்ராஜின் ‘பிரமிடுகளை அளக்கும் தவளை’ தமிழில் புதிதான ஒரு புனைவுச் சாகசம். அதில் அறிவார்த்தமும் கவிதையும் வீரியமாக மயங்கும் பகுதிகள் உண்டு. அவரது ‘நள்ளிரவின் சொற்கள்’ இத்தொடர்பில் அணுக வேண்டிய தொகுப்பு.
இவ்விடம், தொழில்நுட்பம் என்னும் பயன்வாத நுகர்வுப் பொருள்களை அல்லாமல், எல்லையின்மையில் திறக்கும் அறிவியலின் தத்துவப் பாட்டுக்கு மெய்யும் புனைவுமான விளையாட்டுக்கு, கலையும் அறிவியலும் முயங்கும் படைப்பூக்கத் தளங்களுக்கு அறிவியல்புனை கவிதைகள் ஆயத்தப்படுகின்றன எனலாம்.
- இலக்கிய விமர்சகர்
தொடர்புக்கு: pagruli@gmail.com