

டிசம்பர் - 24 பெரியார் நினைவுநாள்
“தோழர்களே! பொதுவுடைமை நாட்டில் கடவுளோ, மதமோ, சாஸ்திர நம்பிக்கையோ இல்லை. அங்கு உயர்ந்தவன், தாழ்ந்தவன்; உயர்ந்த உத்தியோகஸ்தன், தாழ்ந்த உத்தியோகஸ்தன் என்கின்ற நிலையும் இல்லை. எல்லோரும் சமமானவர்கள்; எல்லோருக்கும் சம்பளம் (வாழ்க்கை வசதி) ஒன்றுதான் - வேலைதான் வேறு வேறு. அங்கு பெரிய வேலையை ஒப்புக்கொண்டால் பொறுப்புகள் அதிகம் என்று கருதுவான். எனவே, அங்கு மேல், கீழ் என்று பாராட்டப்படுவதே இல்லை. இதனால் அங்கே உற்பத்தி பெருகுகின்றது.”
சோஷலிஸத்தைத் தென்னிந்தியாவில் முதன்முதலாகப் பிரச்சாரம் செய்தவர் திராவிட இயக்கத்தின் தலைவரான பெரியார். இடதுசாரி முகாமில் இடம்பெறாத அவர், அப்பழுக்கற்ற தேசியவாதியாகவும் காந்தியவாதியாகவும் பொதுவாழ்வில் இருந்தவர். அனைத்து மக்களும் முன்னேற்றம் காண வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற தன்னுடைய கோரிக்கையை ஏற்காததையும், தலைவர்களில் பலர் சமூகரீதியாகப் பிற்போக்குவாதிகளாக இருந்ததையும் கண்டித்து, காங்கிரஸ் இயக்கத்தைவிட்டு வெளியேறினார்.
சென்னை மாகாணத்தில் நாகப்பட்டினத்தில் 1925-ல் நடந்த ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்தை நடத்திய தொழிற்சங்க இயக்கத் தலைவர்களின் தோழமையை அடுத்து, அவருடைய அரசியல் வாழ்க்கையில் புரட்சிகரமான பயணம் தொடங்கியது. வேலை நிறுத்தத்தை ஆதரித்ததற்காக அவர் கைதுசெய்யப்பட்டார். சமூகநீதிக்காக அவர் தொடங்கிய பணிகளில் ஒரு சகாவாக கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தொடங்கியவர்களில் ஒருவரான எம்.சிங்காரவேலுவை ஏற்றுக்கொண்டார். சமூகநீதி, சுயமரியாதை ஆகிய கொள்கைகளை மக்களிடையே பரப்ப அவர் தொடங்கிய ‘குடி அரசு’ இதழில் பல கட்டுரைகளை எழுதினார் சிங்காரவேலர்.
1931 அக்டோபர் 4-ம் தேதி இதழில் கம்யூனிஸ்ட் அறிக்கை பற்றிய அறிமுகக் கட்டுரை ‘குடிஅர’சில் வெளியானது. மேலும், கம்யூனிஸ்ட் அறிக்கை ப.ஜீவானந்தத்தால் மொழிபெயர்க்கப்பட்டு தொடராக வெளியானது. 1925-ல் எஸ்.ராமநாதன் தொடங்கிய சுய மரியாதை இயக்கத்தின் உறுப்பினரான ஜீவானந்தம் தொடக்க கால கம்யூனிஸ்ட் தலைவராவார். சோஷலிஸக் கருத்துகள் தோன்றி சில நூற்றாண்டு கள் ஆனாலும் கம்யூனிஸ்ட் அறிக்கை மூலம் 1847-ல் உருவம் பெற்று, 1917-ல் ரஷ்யாவில் அரசு அரசியல் வடிவம் எடுத்தது என்று ‘குடிஅர’சின் தலையங்கம் பதிவுசெய்திருக்கிறது.
“இது சம்பந்தமாக நமக்குக் கிடைத்த ஒரு அறிக்கை சரித்திரத்தில் சமதர்ம உணர்ச்சி பெற்றவர்களில் முதன்மையான முக்கியஸ்தர்கள் ஜெர்மனியர்களாயிருந்தாலும், அதற்காக மகாநாடு கூடினது லண்டன் பட்டணமாய் இருந்தாலும், அதற்கு அப்பொழுதே கிளர்ச்சி நடந்தது பிரான்சு தேசமாயிருந்தாலும், அது முதல் முதல் அனுபவத்தில் கொண்டுவர முயற்சிக்க வேண்டிய இடம் ரஷியாவாகவே ஏற்பட்டுவிட்டது சிலருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடியதாயிருந்தாலும், அந்தப்படி ஏற்படுவதற்கு நியாயம் இல்லாமலில்லை… உலக அரசாங்கங்களிலெல்லாம் ரஷிய ஜார் அரசாங்கமே மிக்கக் கொடுங்கோன்மையாக நடைபெற்று வந்திருக்கின்றது. அதனாலேயே அங்கு சமதர்மமுறை அனுபவத்திற்குக் கொண்டுவர வேண்டியதாயிற்று.
இந்த நியாயப்படி பார்த்தால், அவ்வித சமதர்ம உணர்ச்சி உலகில் ரஷிய தேசத்தை விட இந்தியாவுக்கே முதன்முதலாக ஏற்பட்டு இருக்க வேண்டியதாகும். ஆனால் அந்தப்படி ஏற்படாமல் இருப்பதற்கு இங்கு அனேகவித சூழ்ச்சிகள் நடைபெற்று வந்திருப்பதாலும், சூழ்ச்சிக்காரர்கள் இந்திய மக்களை வெகு ஜாக்கிரதையாகவே கல்வி, அறிவு, உலக ஞானம், சுயமரியாதையுணர்ச்சி முதலியவை பெறுவதற்கு மார்க்கம் இல்லாமல் காட்டுமிராண்டித்தன்மையில் வைத்து வந்ததோடு, கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் ஏற்படுத்தப்பட்ட உணர்ச்சியானது அடிமையாக இருப்பதே கடவுள் சித்தமென்றும், மோக்ஷ சாதனமென்றும் புகட்டி வந்ததாலும், அதே சூழ்ச்சிக்காரர்கள் அடிக்கடி வேற்றரசர்களை அழைத்து வந்து மக்களை மிருகத்தனமான ஆதிக்கத்தால் அடக்கி ஆளச் செய்து வந்ததாலும் உலகில் சமதர்ம உணர்ச்சி முதன்முதலாக இந்தியாவிலேயே ஏற்பட்டிருக்க வேண்டியது மாறி ரஷியாவுக்கு முதல் ஸ்தானம் ஏற்பட வேண்டியதாயிற்று”.
புரட்சிகரமான மனப்பான்மைக்கும் இந்திய மக்களுக்கும் இடையில் ஒரு பிரிக்கும் கோடாக இருப்பது எது? தலையங்கம் அதைப் பின்வருமாறு விளக்குகிறது:
“ஆன போதிலும் கூட சமதர்ம உணர்ச்சி இப்போது உலகில் மற்றும் எல்லாப் பாகங்களிலும் ஏற்பட்டுவிட்டதின் காரணமாய் இந்தியாவிலும் ஏற்பட வேண்டியது தவிர்க்க முடியாத அவசியமாய்ப் போய்விட்டதால், இங்கும் தலை காட்ட ஆரம்பித்துவிட்டது. ஆனால், உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மைகளில் மற்ற தேசத்திற்கும் இந்தியாவுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்துவருகின்றது. அதென்னவென்றால், மற்ற நாடுகளில் ஒரு விஷயம்தான் முக்கியமாய்க் கருதப்படுகின்றது. அதாவது, முதலாளி (பணக்காரன்) வேலையாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால், இந்தியாவிலோ மேல் ஜாதியார் - கீழ் ஜாதியார் என்பது ஒன்று அதிகமாகவும் முதன்மையானதாகவும் இருப்பதால் அது பணக்காரன், ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றது. ஆதலால், இங்கு சமதர்மத்திற்கு இரட்டிப்பு அதிகமான எதிர்ப்பு இருந்துவருவது கொண்டு சமதர்ம உணர்ச்சி தலை தூக்க முடியவில்லை”.
இந்தத் தலையங்கமும் கம்யூனிஸ்ட் அறிக்கை தொடரும் பிரசுரமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ராமநாதன் மற்றும் இளம் உறவினரான ராமு ஆகியோருடன் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தார் பெரியார். அன்றைய சென்னை துறைமுகத்திலிருந்து 1931 டிசம்பர் 13-ல் தொடங்கிய இப்பயணம், 1932 நவம்பர் 7-ல் முடிவுற்றது. அப்போது சோவியத் ஒன்றியத்தில் மூன்று மாதங்கள் தங்கினார். அதன் பிறகு முழு சோஷலிஸவாதி யாகிவிட்டார்.
நீண்ட காலத்துக்குப் பிறகு 1972-ல் ‘உண்மை’ என்ற பத்திரிகையில் சோவியத் யூனியனில் சோஷலிஸம் சாதித்தவற்றை நினைவுகூர்ந்திருந்தார். அப்போது, பின்வரும் அவதானிப்புகளை வலியுறுத்தியிருந்தார்.
“அங்கு பிள்ளைகளைத் தாய் தந்தைதான் காப்பாற்றவேண்டும், வளர்க்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அரசாங்கமே ஏற்று வளர்த்துக்கொள்கின்றது. இங்கு நம்மவர்கள் ‘எதற்கடா குழந்தை?’ என்றால் ‘செத்த பிறகு கொள்ளிவைக்க, ஈமக்கடன் செய்ய’ என்கின்றான்; மற்றும் ‘அந்திமக் காலத்தில் எங்களைக் காப்பாற்ற, கஞ்சி ஊற்ற அவசியம் குழந்தை வேண்டும்’ என்கின்றான்; ‘என் சொத்துக்கு வாரிசாக வேண்டும்’ என்கின்றான்.”
“ரஷியாவில் அப்படியல்ல. அவன் உடலில் வலுவுள்ளவரைக்கும் உழைத்துச் சாப்பிடுகின்றான்; வயோதிகம் வந்தால், அரசாங்கம் அவனுக்கு உணவு முதலிய வேண்டிய சவுகரியங்கள் எல்லாம் செய்துகொடுத்துக் காப்பாற்றுகின்றது. அங்கு தனி மனிதனுக்குச் சொத்து வைத்துக்கொள்ள உரிமையில்லாத காரணத்தினால், தம் சொத்துக்கு வாரிசு - பிள்ளை இருந்தாக வேண்டும் என்ற அவசியமுமில்லை.”
“தோழர்களே! பொதுவுடைமை நாட்டில் கடவுளோ, மதமோ, சாஸ்திர நம்பிக்கையோ இல்லை. அங்கு உயர்ந்தவன், தாழ்ந்தவன்; உயர்ந்த உத்தியோகஸ்தன், தாழ்ந்த உத்தியோகஸ்தன் என்கின்ற நிலையுமில்லை. எல்லோரும் சமமானவர்கள்; எல்லோருக்கும் சம்பளம் (வாழ்க்கை வசதி) ஒன்றுதான் - வேலைதான் வேறு வேறு. அங்கு பெரிய வேலையை ஒத்துக்கொண்டால் பொறுப்புகள் அதிகம் என்று கருதுவான். எனவே, அங்கு மேல் கீழ் என்று பாராட்டப்படுவதேயில்லை. இதனால் அங்கே உற்பத்தி பெருகுகின்றது.”
“அங்கு ஒரு ஆள் இத்தனை மணி நேரம்தான் வேலை செய்ய வேண்டுமென்றும், இவ்வளவு வேலை செய்தாக வேண்டுமென்றும் உள்ளது. ‘டைம்’ முடிந்தால் நம் நாட்டுத் தொழிலாளர்கள் போல அவர்கள் ஓட மாட்டார்கள்; அதிகப்படியாகக் கொஞ்சநேரம் வேலை, அவனாக முன்வந்து செய்வான். இப்படிச் செய்கின்றவர்களின் வேலைகளையும் நேரத்தையும் கணக்கிட்டு, வருஷமோ, மாதமோ ஆன பிறகு அவர்களுக்குப் பட்டம் கொடுத்து மரியாதை பண்ணுவார்கள். தோழர்களே! அங்கு இந்த மரியாதையினைத்தான் எதிர்பார்ப்பானேயொழிய அதிகப்படி பணத்தை எதிர்பார்க்கவே மாட்டான். அங்கு புரட்டோ, திருட்டோ ஏமாற்றுவதோ அடியோடு கிடையாது.”
“அங்கு, நாணயம் என்பது மக்களிடம் கரைபுரண்டு ஓடும். அங்கு, நான் கூறியதுபோல - மக்களுக்கு எந்தவிதமான குறைபாடுகளோ, கவலைகளோ இல்லை. இதன் காரணமாக மக்கள் அங்கு 100 வயதிலும் 120 வயதிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் வாழ்கிறார்கள்.”
பெரியாரும் சிங்காரவேலரும் சுயமரியாதை இயக்கத்துக்காகப் புதிய திட்டத்தை வகுத்தனர். ராமநாதன் உள்ளிட்ட சில தலைவர்கள் கடுமையாக எதிர்த்தும் ஈரோட்டில் நடந்த மாநாட்டில் அது ஏற்கப்பட்டது. ‘ஈரோட்டுத் திட்டம்’ என்று அழைக்கப்பட்ட இந்தத் திட்டம், பிரிட்டிஷாரிடமிருந்தும் இதர வகை முதலாளித்துவ அரசுகளிடமிருந்தும் முழுச் சுதந்திரம் கோரியது.
தேசியக் கடன் தள்ளுபடி, அனைத்து விவசாய நிலங்களையும் வன நிலங்களையும் பொதுவுடமையாக்குவது, நீர்நிலைகள், ரயில் துறை, வங்கிகள், கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துவகை போக்குவரத்து ஆகியவற்றையும் அரசுடைமையாக்க வேண்டும்; தொழிலாளர்கள், விவசாயிகளின் கடன்களை ரத்துசெய்ய வேண்டும், தொழிலாளர்களும் விவசாயிகளும் தலைமை தாங்கி நடத்தும் அரசுக் கூட்டமைப்பில் அனைத்து சுதேச சமஸ்தானங்களையும் இணைக்க வேண்டும் என்பவை கோரிக்கைகள்.
அந்தத் திட்டங்களை மாநாடு ஏற்றுக்கொண்டது சுய மரியாதை இயக்கத்தின் அரசியல் பிரிவால் வெளியிடப்பட்டதன் மூலம் தென்னிந்தியாவின் சமதர்மக் கட்சி உதயமாகிவிட்டது. 1933 ஏப்ரலில் திருப்பூரில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாட்டில் புதிய அரசியல் முறைமை குறித்து பெரியார் விளக்கிப் பேசினார்.
“இந்த இயக்கமானது இத்தனைக் காலமாக இந்து மதம் குறித்தும் பிராமணர்களின் தந்திரம் குறித்தும்தான் பேசிவந்திருக்கிறது; பிராமணர் அல்லாத சமூகத்தவரின் பொருளாதார, அரசியல் நலன்கள் குறித்து கவனம் செலுத்தியதே இல்லை. அவர்களுடைய பொருளாதார நிலையை உயர்த்துவதன் மூலம்தான் அவர்களை முன்னேற்ற முடியுமே தவிர, பிராமணர்களின் அர்த்தமற்ற சடங்குகளை எதிர்ப்பதால் மட்டுமே முன்னேற்றிவிட முடியாது. முதலாளிகள் ஆதிக்கம் செலுத்தும் இப்போதைய அரசு முறைமை மூலம் பிராமணர் அல்லாதவர்களின் பொருளாதார நலன்களை மேம்படுத்திவிட முடியாது, தொழிலாளர்கள் சேர்ந்து உருவாக்கும் சோஷலிஸ அரசினால் மட்டும்தான் அதைச் சாதிக்க முடியும்” என்று பெரியார் பேசியதை ஈ.சா.விஸ்வநாதன் ஆய்வு நூலில் நினைவுகூர்கிறார்.
இந்தப் புதிய கண்ணோட்டத்துடன் சுயமரியாதை இயக்கத்தின் இரண்டு பிரிவுகளும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றையும் சோவியத் யூனியனின் முதலாவது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையையும் மொழிபெயர்த்து வெளியிட்டன என்கிறார் விஸ்வநாதன். புரட்சி, பகுத்தறிவு, சமதர்மம், வெடிகுண்டு என்ற பெயர்களில் வாரப் பத்திரிகைகளையும் கொண்டுவந்தார். மே தினத்தன்று பொதுக் கூட்டங்களை நடத்தினார். சுமார் 50 மே தினப் பொதுக்கூட்டங்களில் பெரியார் கலந்துகொண்டார். தமிழக மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், தனியுடைமையைக் கண்டித்தும், சோவியத் பாணி அரசை அமைக்க வேண்டியதை வலியுறுத்தியும் பேசினார்.
இது அதிகார வட்டாரங்களில் எச்சரிக்கை மணியை அடிக்கச் செய்தது. சமூகநீதிக்கான போராளியை பிரிட்டிஷ் அரசால் ஆதரிக்க முடியும், ஆனால், அவர் புரட்சிவாதியாக மாறுவதையும் சோஷலிஸ உலகை விரிவுபடுத்துவதையும் பொறுத்துக்கொள்ள முடியாது; (இந்திய) அரசாங்கத்தைத் தூக்கி எறிவது அவசியம் என்று அவர் ‘குடிஅர’சில் தலையங்கம் எழுதியதும், அரசு செயல்பட்டது. அரசுக்கு எதிராகக் கலகத்தைத் தூண்டுவதாகக் குற்றம்சாட்டி 9 மாதங்கள் சிறைத் தண்டனையையும் ரூ.3,000 அபராதத்தையும் விதித்தது.
பிரிட்டிஷ் அரசு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை 1934-ல் தடை செய்தது. பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறை தொடங்கியதும் அவருடைய புரட்சிகர திட்டங்களுக்கு சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களிலேயே ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். சுயமரியாதை இயக்கம் தொடங்கிய முதல் பத்தாண்டுகளிலேயே சாதித்த நன்மைகளை இந்த அணுகுமுறையால் இழக்க நேரிடும், தேசிய அலையால் உச்சத்துக்குச் சென்றுகொண்டிருக்கும் காங்கிரஸில் பிராமணர்களின் தலையெடுப்பு அதிகமாகிவிடும் என்று எச்சரித்தனர். சோஷலிஸ அரசா, பிராமணர் ஆதிக்கம் தடுப்பா எது முக்கியம் என்ற கேள்விக்குப் பதில் காண வேண்டிய இக்கட்டான நிலை பெரியாருக்கு ஏற்பட்டது.
‘சுயமரியாதை இயக்கத்தை ஒடுக்க பிரிட்டிஷ் அரசு உறுதிபூண்டுவிட்டதை உணர்ந்தேன், அரசின் கண்காணிப்பு, தலையீடு காரணமாக இயக்கம் ஏற்கெனவே பாதிக்கப்படத் தொடங்கியதையும் கண்டேன்; அரசின் அடக்குமுறை காரணமாக காங்கிரஸ் கட்சிகூட மறைமுக நடவடிக்கைகளுக்கு மாறிவிட்டதையும் கண்டேன். சுயமரியாதை இயக்கத்தவர்களால் சோஷலிஸ பிரச்சாரம் செய்வதை நிறுத்துவது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்’ என்று ‘குடிஅரசு’ இதழில் எழுதினார் பெரியார்.
பெரியார் அன்று எடுத்த அந்த முடிவு, தமிழகத்தின் வரலாற்றையும் அரசியலையும் பாதை மாற்றிவிட்டது!
- ஆர்.விஜயசங்கர், ‘ஃப்ரண்ட்லைன்’ ஆசிரியர்
© ஃப்ரண்ட்லைன் தமிழில்: சாரி