அஞ்சலி: பிந்தேஷ்வர் பாடக் | பொதுக் கழிப்பறைகளைப் பரவலாக்கிய முன்னோடி

அஞ்சலி: பிந்தேஷ்வர் பாடக் | பொதுக் கழிப்பறைகளைப் பரவலாக்கிய முன்னோடி
Updated on
1 min read

இந்தியாவில் பொதுக் கழிப்பறைகள் பரவலாக்கம் பெறுவதற்குக் காரணமாக விளங்கிய சமூக சேவகர் பிந்தேஷ்வர் பாடக் (80), செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 15) காலமானார். பிஹாரில் பிறந்தவரான பிந்தேஷ்வர், தலித் மக்களின் முன்னேற்றத்துக்கான காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.

தனது முனைவர் பட்ட ஆய்வுக்காக நாடு முழுவதும் அவர் பயணித்து கையால் மலம் அள்ளும் பணியாளர்களுடன் தங்கினார். இந்த இழிவான வழக்கத்தை ஒழிக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்டப்பட வேண்டும் என்பதை உணர்ந்தார்.

1970இல் ‘சுலப் இன்டர்நேஷனல்’ என்னும் சமூக சேவை அமைப்பைத் தொடங்கினார். 1973 இல் பொதுக் கழிப்பறை கட்டும் திட்டத்துக்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் கவனத்தை ஈர்த்தார் பிந்தேஷ்வர். பிரதமரின் தலையீட்டின் மூலம் பிஹாரில் உள்ள ஆரா என்னும் சிற்றூரின் நகராட்சி அலுவலகத்தில் இரண்டு கழிப்பறைகளைக் கட்ட ரூ.500 ஒதுக்கப்பட்டது.

இந்தத் தொகையில் பிந்தேஷ்வர் கட்டிக்கொடுத்த ‘சுலப்’ கழிப்பறைகள் அரசு அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்ததால், பிற பகுதிகளுக்கும் அத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்தியாவின் பிற பகுதிகளில் அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் சுலப் கழிப்பறைகள் கட்டப்பட்டன. இந்தத் திட்டம் இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழிப்பது, கையால் மலம் அள்ளுதல் ஆகிய வழக்கங்களைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியது.

1991இல் மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷண் விருதை வழங்கியது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறு பணிகளில் 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து ஊக்கத்துடன் ஈடுபட்டுவந்த பிந்தேஷ்வர், இந்தியாவின் 77ஆம் விடுதலை நாள் அன்று தேசியக் கொடியை ஏற்றிவிட்டு மரணமடைந்திருக்கிறார். கையால் மலம் அள்ளும் வழக்கத்தை முற்றிலும் ஒழிப்பதும் துப்புரவுப் பணியாளர்கள் அனைவருக்கும் கண்ணியமான வாழ்க்கையை உறுதிசெய்வதுமே அவருக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in