Published : 02 Nov 2017 09:29 AM
Last Updated : 02 Nov 2017 09:29 AM

அரசியலமைப்பு மாற்றத்துக்கு வட கிழக்கு குரல் கொடுப்பது ஏன்?

ட கிழக்கு இந்தியாவில், குறிப்பாக மணிப்பூரில் இன்று நடந்துகொண்டிருக்கும் ஒரு இயக்கத்தைப் பற்றி தமிழர்களுக்குத் தெரிவித்தால் பலர் ஆச்சரியம் அடையலாம். ‘அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவைத் திருத்த வேண்டும் அல்லது விலக்க வேண்டும்’ என்ற இயக்கம்தான் அது!

ஒரு மாநிலத்தின் ஒப்புதலைப் பெறாமலேயே அந்த மாநிலத்தின் எல்லைகளைத் திருத்தியமைக்க மத்திய அரசுக்கு எல்லையற்ற அதிகாரத்தை வழங்கும் சட்டப் பிரிவே மூன்றாவது பிரிவு. வடகிழக்கு ஏன் இப்போது இப்படி ஒரு இயக்கத்தை நடத்துகிறது? ஏனென்றால், இங்குள்ள கிளர்ச்சிக் குழுக்களை தாஜா செய்வது என்ற மத்திய அரசின் சமீபத்திய கொள்கைகளின் விளைவாக, வடகிழக்கில் உள்ள பல மாநிலங்களின் எல்லைகள் மாற்றியமைக்கப்படும் அபாயம் இன்று ஏற்பட்டிருக்கிறது.

நாகாலாந்துக்கான தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் (இசாக்-முவியா குழு) என்ற நாகா ஆயுதக் குழுவுடன் மத்திய அரசு அமைதிக்கான பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இந்தக் குழு எழுப் பும் கோரிக்கையான ‘அகண்ட நாகாலாந்து’ என்ற கோரிக்கை மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அசாம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் எல்லைகள் மாறிப்போகும்.

சரி, அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட நேரத்தில், ஏன் இந்த மூன்றாவது பிரிவை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது? பிரிட்டிஷ் காலனி யாதிக்கத்தின் பிடியிலிருந்து வெளிப்பட்டபோது, கூட்டாட்சியில் உள்ள பிரதேசப் பிரிவுகள் அதிக அளவுக்கு வலிமை மிக்கவையாக மாறிவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்துவதில் அன்றைக்குப் போதிய காரணங்கள் இருந்தன. நாட்டின் பிரிவினையால் ஏற்பட்ட அதிர்ச்சி, நிச்சயமற்ற நிலை ஆகியவற்றோடு அவசர கதியாகச் சேர்க்கப்பட்ட இதர பகுதிகள் இந்தியா என்ற தேசத்தை விட்டு வெளியேறத் தூண்டும் நிலையும் அன்று நிலவியது.

இத்தகு சூழ்நிலையில் இந்த மூன்றாவது பிரிவு என்பது கலகக் குரல் எழுப்பும் முன்னாள் சமஸ்தானங்களுக்கான எச்சரிக்கைச் செய்தியே. அவர்கள் ஒழுங்குமுறைக்கு வராமல் இருந்தால், மத்திய அரசு அந்தப் பகுதியை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துவிடும் என்பதே அந்தச் செய்தி. சரி, அன்றைக்கு அப்படி ஒரு நிலை இருந்தது, எனவே மாகாண அரசுகளைவிட மத்திய அரசுக்கு அதிகாரம் அதிகமாக இருப்பதே நல்லது என்ற உணர்வுக்கு நியாயம் இருந்தது. நாடு தன்னம்பிக்கையும் ஆற்றலும் மிக்கதாக இருக்கும் இன்றைய சூழலில் அது தேவையா? தேவையற்ற அச்ச உணர்வு மத்திய அரசுக்கு நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, மூன்றாவது பிரிவை மாற்றலாம் என்கின்றனர் மாற்றம் விரும்புவோர்.

நாட்டின் அரசியலமைப்புச் சட்ட விற்பன்னர்களில் ஒருவரான ஃபாலி நாரிமன் கூறுகிறார்: “பிரதேசப் பகுதிகள் அதிக வலிமை பெறாமலிருப்பதை உறுதிப்படுத்த, பாதுகாப்பு ஏற்பாடுகளால் கட்டுப்படுத்தப்படுவதாகவே இந்தியாவின் கூட்டாட்சி அமைந்தது. சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதல் பெறாமலேயே எந்த வொரு மாநிலத்தின் எல்லைகளையும் திருத்தியமைக்கவும், பெயரை மாற்றவும், புதிய மாநிலங்களை உருவாக்கவும், அல்லது தற்போதுள்ள மாநிலங்களை மாற்றியமைக்கவும் மத்திய அரசுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவு அதிகாரம் வழங்கியது.

இவ்வாறு அபரிமிதமான அதிகாரத்தை மத்திய அரசிடம் கொடுத்ததன் விளைவாக, மாநிலங் கள் அதிகாரமற்ற உணர்வுடன் செயல்பட்டன. இது கூட்டாட்சி கட்டமைப்புக்கோ அல்லது உணர்வுக்கோ எந்த வகையிலும் உத்தரவாதம் தருவதாக அமையவில்லை!” கூட்டாட்சி அமைப்பையும் உணர்வையும் எப்படி நாம் பலப்படுத்தப்போகிறோம்? இந்தக் கேள்வி எழும்போதெல்லாம் எங்களுக்குத் தமிழ்நாடும் திராவிட இயக்கமும் நினைவுக்கு வரும். கூடவே, கருணாநிதியும் நினைவுக்கு வருவார்!

தமிழில் : வீ.பா.கணேசன்

பிரதீப் பாஞ்சுபாம்
மணிப்பூரைச் சேர்ந்த ஊடகவியலாளர்,
‘இம்பால் ஃப்ரீ ப்ரெஸ்’ நாளிதழின் ஆசிரியர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x