

ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த மைல்ஸ் ஃபிராங்க்ளின் இலக்கிய விருதினை இந்த ஆண்டு வெற்றிகொண்டுள்ள சங்கரி சந்திரனின் ‘சாய் டைம் அட் சின்னமன் கார்டன்ஸ்’ (Chai Time at Cinnamon Gardens) என்கிற நாவல், நவ-ஆஸ்திரேலிய சிந்தனையின் போலித்தனங்களை உடைத்துப்போட்டிருக்கிறது. சங்கரி சந்திரன், இலங்கை யாழ்ப்பாணத்தில் அளவெட்டி என்கிற கிராமத்தினைப் பூர்விகமாகக் கொண்டவர். அவரது பெற்றோர் லண்டனுக்குப் புலம்பெயர்ந்த பின்னர், அங்கு பிறந்தவர். சட்டம் படித்து, பின்னர் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தவர் இவர். இது அவர் எழுதியுள்ள மூன்றாவது நாவல்.
இந்த நாவல் வழி சங்கரி முன்வைத்திருக்கும் அதி முக்கியக் கேள்விகள்: ‘‘இந்த நாட்டில் ஆஸ்திரேலியக் குடிமகனாக வசிப்பது என்பது எவ்வாறு, அதனை யார் தீர்மானிப்பது?’’
ழுபதுகளின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயரத் தொடங்கிய பல நாட்டவர்களின் வரவால், ஆஸ்திரேலியா புதிய பரிணாமத்தை பெறத் தொடங்கியது. அதன் பிறகுதான், ஆஸ்திரேலியா பல் கலாச்சார - பண்பாட்டு விழுமியங்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் எனும் புதிய ஞானத்தைப் பெற்றுக்கொண்டது. ஆனாலும், சொந்த நிலத்திலிருந்து வேரறுத்து வெளியேறி வந்த சமூகங்களின் குற்ற உணர்வு - எல்லா மேலைத்தேய நாடுகளைப் போலவும் - ஆஸ்திரேலியாவுக்கு வசதியான அதிகாரத்தினைக் கையளித்தது. போகப்போக வரலாற்றுரீதியாகப் புதிய வடிவங்களிலான திமிர்களை அரசுக்கு உருவாக்கியது. அந்தத் தேசிய இறுமாப்பின் வழியாகப் பல கொடூரமான குடிவரவுக் கொள்கைகள் எழுந்து, காலப்போக்கில் அவை சட்டங்களாகவும் மாறின. அந்த வகையில், வேறு நாடுகளிலிருந்து வந்து ஆஸ்திரேலியர்களாகக் குடியுரிமை பெற்றுக்கொள்ளும் எல்லோருக்கும் இன்றுவரை அறைகூவிக்கொண்டிருக்கும் தேசிய முழக்கம்தான்: ‘இந்த நாட்டில் நல்ல ஆஸ்திரேலியனாக இரு’.
ஆஸ்திரேலியாவின் பாவனை: சங்கரி தனது நாவலில், நவ-ஆஸ்திரேலியா பெருமையாகப் பீற்றிக்கொள்கின்ற இந்த அறைகூவலைக் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருக்கிறார். ஆஸ்திரேலியா தனது பெருமைகளாகப் பேணிவைத்திருக்கும் பல்வேறு பாவனை விழுமியங்களையும் கடுமையாகக் கேள்விக்கு உட்படுத்துகின்ற இந்த நாவலை, ஆஸ்திரேலியாவில் நிச்சயமாக யாரும் பதிப்பிக்க முன்வரப்போவதில்லை என்றும் தான் முன்னமே எண்ணிக்கொண்டதாகவும் அதனால், நாவலை முழுமையாகத்தான் நினைத்தபடி எழுதுவதில் எந்த மனத்தடையும் இருக்கவில்லை என்று நாவல் எழுதிய அனுபவம் குறித்துக் குறிப்பிடும்போது சங்கரி கூறியுள்ளார்.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சிட்னிக்கு வரும் கணவனும் (ஸாகிர்) மனைவியும் (மாயா) தங்கள் வயதை ஒத்த முதியவர்களுக்கென, வயோதிகர் இல்லம் ஒன்றை நடத்துகிறார்கள். அங்கு தங்குவதற்காக வருகின்ற பல்வேறு நாட்டு முதியவர்களின் ஊடாகவும் ஆஸ்திரேலிய தேசம் என்பது அவர்களுக்கு உண்மையில் எப்படிப்பட்ட புகலிடமாக அடைக்கலம் அளித்திருக்கிறது என்பதை விரித்துச் சொல்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு முதன்முதலாக வந்து இறங்கியவர் என்று நவ-ஆஸ்திரேலியர்களால் போற்றப்படுகின்ற கேப்டன் குக் என்பவரது உருவச் சிலை, இந்த வயோதிகர் இல்ல வளாகத்தில் முன்னர் இருந்திருக்கிறது. அந்தச் சிலையை ஒருநாள் ஸாகிர் அகற்றிவிடுகிறார். அதனைப் பெருங்குற்றமாக அடையாளம் கண்டு, நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்கிறது அப்பகுதி கவுன்சில்.
இந்தச் சம்பவத்திலிருந்து இந்நாவல் முற்றிலுமான ஒரு அரசியல் பிரதியாக - ஆஸ்திரேலிய அரசின் போலியான ஜனநாயகப் பெருமிதங்களை உரித்துப்போடுகின்ற, வரலாற்று உண்மைகளை மீள ஞாபகமூட்டுகின்ற பொறுப்புள்ள நூலாக உருமாறுகிறது.
ஆஸ்திரேலியாவும் இலங்கையும்: ஆஸ்திரேலிய நிறவாத அரசியலை, இலங்கையின் இனவாத அரசியலுடன் சமாந்தரப்படுத்தி விரித்துச் சொல்லும் இந்த நாவல், வரலாற்றுரீதியாக ஆஸ்திரேலியப் பூர்விக மக்கள் முகங்கொடுத்த பேரவலங்களைத்தான் சிறிலங்காவில் தமிழர்களும் எண்பதுகள் முதல் அனுபவித்துள்ளதாக சங்கரி, உண்மைச் சம்பவங்களோடு பாத்திரங்களைக் கோத்துச் சொல்கிறார்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான வரலாறுடைய ஆஸ்திரேலியாவைப் பின் தள்ளிவிட்டு, ஆஸ்திரேலிய வரலாறு என்பது கேப்டன் குக் வந்து இறங்கிய காலத்துடன் ஆரம்பிப்பது என்று புனைந்து, வரலாற்றின் மீது நின்று பொய்யுரைக்கும் நவ-ஆஸ்திரேலியச் சிந்தனையில் கிடக்கின்ற அதே கேவலத்தைத்தான், மஹாவம்சத்திலிருந்து இலங்கை வரலாறு தோன்றியதாக இலங்கை அரசாங்கம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது என்று தனது பூர்விக நிலத்தினதும் புகலிட தேசத்தினதும் வரலாற்றுப் பெருங்குற்றத்தினை ஒருபுள்ளியில் இணைத்திருக்கிறார்.
நவ-ஆஸ்திரேலிய நிறவாதம் எனப்படுவது மிகவும் நுட்பமானது. சாமர்த்தியமாக சனங்களுக்குள் நுழைத்து, தனது அரசியல் நிகழ்ச்சி நிரல்களைச் சமன் செய்யக்கூடியது. அந்த வகையில், சட்டங்களை முன்வைத்து சனங்களுக்குப் பயம்காட்டுவது என்பது அந்நிய நாடுகள் அனைத்திலும் சம்பிர தாயமான சாகசங்களில் ஒன்று. ஆனால், சங்கரி தொழில்ரீதியாக ஒரு சட்டத்தரணி (வழக்கறிஞர்) என்ற காரணத்தினால், நாவலின் முக்கிய இடங்களில், அஞ்சலி என்ற பாத்திரத்தின் வழியாக, ஒரு சட்டத்தரணியாகவே மாறிவிடுகிறார். தங்களது அரசியல் நிகழ்ச்சி நிரல்களைச் சட்டங்களுக்குள் சடைந்து வைத்திருக்கும் லாகவங்களைத் தனது தர்க்கங்களால் உடைக்கிறார்.
அன்றாடத்தின் வழி அரசியல்: முற்று முழுதாக இது ஓர் அரசியல் நாவல் என்றாலும், இலங்கைக் குடும்பம் ஒன்றின் அன்றாட ஆஸ்திரேலிய வாழ்க்கையின் வழியாகப் புலம்பெயரிகள் மீதான நுட்பமான தனது அவதானிப்புகளைச் சுவைபடப் பதிவுசெய்திருக்கிறார். சன் டி.வி-யுடன் லயித்திருக்கும் சிட்னி வயோதிகர் இல்லம் ஒன்றின் அன்றாடங்கள் எப்படியான புதிரான நிகழ்வுகளால், உரையாடல்களால், துயரங்களால், எதிர்பார்ப்புகளால் நிறைந்துகிடக்கிறது என்பதைப் பல இடங்களில் அங்கதச் சுவையோடு எழுதியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய அரசினைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, அதன் அடிப்படைகளையே கேள்விக்கு உட்படுத்துகின்ற எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்படுவது இது முதல் தடவை அல்ல. ஆஸ்திரேலிய அரசினால் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, நீண்ட காலமாகக் குடிவரவு அமைச்சகத்தின் தடுப்பிலிருந்த ஈரானிய எழுத்தாளர் பெஹ்ரூஸ் பூச்சானி, தடுப்பில் இருந்துகொண்டு ஆஸ்திரேலிய அரசு தனக்கு இழைத்துள்ள கொடுமைகளை ‘No Friend But the Mountains’ என்ற பெயரில் எழுதிய நூலுக்கு 2019ஆம் ஆண்டு விக்டோரிய அரசாங்கத்தின் இலக்கியத்துக்கான உயரிய விருது வழங்கப்பட்டது. அப்போதுகூட, அவர் தடுப்பிலிருந்து விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கரியின் இந்த நாவல், வெறுமனே ஆஸ்திரேலிய அரசின் பல்வேறுபட்ட முரண்பாடான குடிவரவு அணுகுமுறைகளை, அடிப்படை அரசியல் சிந்தாந்தங்களை, பாவனை ஆட்சிமுறையைக் கேள்விக்கு உட்படுத்துவது என்பதற்கு அப்பால், சங்கரி என்கிற புலம்பெயர்வின் எந்த வலியையும் அனுபவித்திராத ஒரு எழுத்தாளர், மிகக் கூர்மையான அரசியல் பிரதியொன்றை எழுதுவதற்கான களத்தை எவ்வாறு ஏற்படுத்தியிருக்கிறது என்கிற பின்னணியையும் இது வெளிப்படுத்தியிருக்கிறது.
- தெய்வீகன்
ஆஸ்திரேலிய வாழ் ஈழ எழுத்தாளர்
தொடர்புக்கு: theivigan@gmail.com