

நான் எழுதிய முதல் கவிதை,சிறுகதை எது? தெரியவில்லை. ஆரம்பத்தில் கவிதைகள்தான் எழுதினேன். அடுத்ததாக, சிறுகதைகளை எழுத முயன்றேன். ‘விடியல்’,‘புரட்சி’, ‘திரள்வோம்’ போன்ற வார்த்தைகளுடன்தான் என்னுடைய அப்போதைய கவிதைகள் முடியும். 1985 காலகட்டத்தில் தமிழில் எழுதப்பட்ட பெரும்பாலான கவிதைகளின் முடிவு அப்படித்தான் இருக்கும். புனைபெயர் வைத்துக்கொள்வதும் அப்போது ஒரு போக்காக இருந்தது. உருப்படியாக ஒரு வரிகூட எழுதாத நான் ‘இமையம்’ என்று வைத்துக்கொண்டதும் அப்படித்தான். இமயம் அல்ல; இமையம்; எல்லாம் கிறுக்குத்தனம்தான்.
நான் எழுதிய கவிதைகள் கிறித்துவ மிஷனரிகள் நடத்திய ‘அன்னை வேளாங்கன்னி’ போன்ற இதழ்களில் மட்டுமே வெளிவந்தன. அந்தப் பத்திரிகைகள் எதுவும் என்னிடம் இப்போது இல்லை. இரண்டு சிறுகதைகள் நினைவில் இருக்கின்றன. வரதட்சிணைக் கொடுமை பற்றிய ஒரு கதை. மற்றொன்று, திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள கிறிஸ்துவ இடுகாட்டில் இருக்கும் காவலாளியைப் பற்றிய கதை. அந்தக் கதை குறித்து இலக்கிய நண்பர்கள், ‘வெரி குட் அட்டம்ட்’ என்று சொன்னார்கள். அந்தக் கதைகளும் இப்போது என்னிடம் இல்லை. ‘நாடக வெளி’ இதழில் மூன்று நாடகங்கள் வெளிவந்தன. நான் நாடகங்கள் எழுதியிருக்கிறேன் என்பதுஎனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. என்னுடைய நாடகங்களை வெளியிட்ட வெளி ரங்கராஜனைப் பாராட்டத் தோன்றுகிறது. என்னை ஊக்கப்படுத்தவே வெளியிட்டார் என்று இப்போது தோன்றுகிறது.
‘ங்’ இதழில் ஒரு சிறுகதை எழுதியதாக நினைவு. கவிதைக்கான கட்டமைப்பு, சிறுகதையின் வடிவம், நாடகம் குறித்த தெளிவோ புரிதலோ எனக்கு இருக்கவில்லை. அப்போது நான் அதிகமாகப் படித்திருக்கவும் இல்லை. விளையாட்டாகச் செய்கிற சில காரியங்கள் நன்மையாகமுடிவதுபோல்தான் என்னுடைய எழுத்து, இலக்கிய வாழ்க்கை அமைந்தது.
ஆரம்பத்தில் நான் எழுதிய கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள் – எதுவும் தரமான, முழுமை பெற்ற படைப்புகள் என்று சொல்வதற்கில்லை. அவையெல்லாம் சிறு பிள்ளை போட்ட கோலங்கள்தான். அதே நேரத்தில் கவிதையின் லட்சணம், சிறுகதையின், நாடகத்தின் அழகியல் குறித்தெல்லாம் கவலைப்படாமல் எழுதிய எழுத்துகள்தான் பின்னாளில் நான் எழுத்தாளனாக மாறுவதற்கு உறுதுணையாக இருந்தன; எழுதுவதற்கான பயிற்சிகளாக அமைந்தன.
நான் முழுமையாக ஒரு படைப்பை உருவாக்கினேன் என்றால், அது ‘கோவேறு கழுதைகள்’ நாவல்தான். அந்த நாவலைக் கையாலேயே ஐந்து முறை எழுதினேன். அப்படி எழுதும்போதுதான் படைப்பில் செறிவும் செழுமையும் கூடுவதை அறிய முடிந்தது.
என்னை எழுத்தாளனாக்கியது ‘கோவேறு கழுதைகள்’ நாவல்தான். நாவலின் மையம், முக்கியக் கதாபாத்திரமான ஆரோக்கியம் என் மனதுக்குள் வந்திருக்காவிட்டால், அவர் வாழ்ந்த வாழ்வை நான் அறிந்திருக்காவிட்டால், நான் எழுத்தாளனாக மாறியிருக்கவே முடியாது. ஒரு கதை, ஒரு எழுத்தாளனை உருவாக்கியிருக்கிறது. அந்த நாவலை எழுதும்போதுதான் என்னைப் பற்றி, என்னுடைய ஊரைப் பற்றி, அங்கு வாழும் மனிதர்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். சமூகத்தைப் பற்றி, வாழ்வைப் பற்றியும்தான். அதற்கு முன் எதைப் பற்றியும் நான் சிந்தித்ததில்லை. மனித உறவுகளை, சமூக உறவுகளை, உணர்ச்சிகளை, உறவுகளின் சிடுக்குகளை, குடும்ப, சமூக வன்முறைகளை, கீழ்மைகளைப் புரிந்துகொண்டதில்லை.
‘கோவேறு கழுதைகள்’தான் சமூகத்தைப் பற்றி மட்டுமல்ல, ஒரு இலக்கியப் படைப்பின் வடிவம், உள்ளடக்கம், மொழிக் கட்டுமானம், படைப்புக்கான உயிர் எது, இலக்கியப் படைப்பு என்பது எது, எழுத்தின் வலிமை எது என்பதை உணர வைத்தது. எழுதுவதற்கு மட்டுமல்ல, சிறந்த படைப்புகள் எது என்று கண்டறிவதற்கும் ‘கோவேறு கழுதைகள்’ நாவல்தான் உதவியது. நாவலுக்கு முழுமையாக என்னை ஒப்புக்கொடுத்தது மட்டும்தான் நான் செய்த ஒரே வேலை. எழுத ஆரம்பித்தது மட்டும்தான் நான் செய்தது. பிறகு, நாவல் தானாகத் தன்னை எழுதிக்கொண்டது. நான் ஒரு கருவிதான். என்னை எழுதிய நாவல் ‘கோவேறு கழுதைகள்’.
எழுதுவதற்குத் தைரியம் வேண்டியதில்லை. மாறாக, எழுதி முடித்த பிறகு சம்பந்தப்பட்ட படைப்பில் தேவையில்லாதவற்றை வெட்டியெடுப்பதற்கான தைரியம்தான் முக்கியம். நான் எழுதிவிட்டேன் என்பதற்காக, என்னுடைய படைப்பு என்பதற்காகச் சில சலுகையைக்கூடக் காட்டக் கூடாது என்பதையும் அந்த நாவலை எழுதும்போதுதான் கற்றுக்கொண்டேன். அத்துடன் எழுதுதல் என்பது அறிவுச் செயல்பாடு, அரசியல் செயல்பாடு என்பதையும் அறிந்துகொண்டேன். ‘கோவேறு கழுதைகள்’ நாவலை எழுதிய பிறகுதான் எழுதுதல் என்பது வாழ்தல் என்றும், வாழ்தல் என்பது எழுதுதல் என்றும் எனக்கு ஆனது. நாம் வாழும் வாழ்க்கைதான் நமக்கான இலக்கியத்தை, மொழியைக் கற்றுத் தருகிறது.
ஒரு கதையின் மையம், அல்லது ஒரு கதாபாத்திரம், ஒரு எழுத்தாளனை உருவாக்கும், வாழ்க்கையை, சமூகத்தைப் படிக்க வைக்கும் என்பதற்கு ‘கோவேறு கழுதைகள்’ நாவல் ஒரு சிறந்த உதாரணம். பிற எழுத்தாளர்களால் உந்தப்பட்டு, புத்தகங்களைப் படித்ததால் உந்தப்பட்டு, சங்கங்கள், அமைப்புகள், பத்திரிகைகள் உருவாக்கிய எழுத்தாளன் அல்ல நான்... ‘கோவேறு கழுதைகள்’ நாவல் உருவாக்கிய எழுத்தாளன்.
- எழுத்தாளர், தொடர்புக்கு: imayam.annamalai@gmail.co