Last Updated : 16 Nov, 2017 09:59 AM

 

Published : 16 Nov 2017 09:59 AM
Last Updated : 16 Nov 2017 09:59 AM

கதை சொல்லுமா கைபேசிகள்?

குழந்தைகள் பள்ளிக்கூடம் போவதற்கு முன்பே, வீட்டிலேயே கற்கத் தொடங்கி விடுகிறார்கள். குறிப்பாக, குழந்தைப் பருவத்தில் யாரிடம் அதிக நேரம் செலவழிக்கின்றார்களோ, அவர்கள்தான் முதல் ஆசிரியர்கள். அவர்கள் கற்றுக்கொள்வதில் நல்லது - கெட்டது என எல்லா விஷயங்களுமே உள்ளடங்கும்.

முன்பெல்லாம் குழந்தைகள் தாத்தா - பாட்டிகளுடன் நேரத்தைச் செலவழிக்கும் வாய்ப்பு இருந்தது. அவர்களும் குழந்தை கள் சளைக்காமல் கேட்கும் கேள்விகளுக்குத் தங்களுக்குத் தெரிந்தவரை அறிவுபூர்வமாகப் பதில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். எனக்குத் தாத்தா உடனான ஒவ்வொரு தருணமும் நிச்சயமாக சிந்தனையைத் தூண்டியிருக்கிறது. அவர் அந்தக் காலகட்டத்தின் செய்திகளையும் கூட எனக்குக் கதையாகச் சொல்லியிருக்கிறார். “ஜப்பான்காரன் ஏரோபிளேன்ல இருந்து அமெரிக்கக் கப்பல்கள் மேல குண்டு போடும்போது ஒரு கப்பலை மட்டும் நெருங்க முடியல. கடைசில ஒரு ஜப்பான்காரன் குண்டு நிரப்புன ஏரோபிளேனோட கப்பல் புகைபோக்கிக்கு உள்ள விழுந்து கப்பலை நொறுக்கிட்டான்” என்று இரண்டாம் உலகப் போரின் நிகழ்வுகளை என் தாத்தா கதையாகச் சொல்லி யிருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்புதான் அவர் சொன்னது ‘பேர்ல் ஹார்பர்’ சம்பவம் என்பது, ஆங்கிலப் படம் மூலம் எனக்குத் தெரியவந்தது. ஆனாலும், எனது குழந்தைப் பருவத்தில் கற்பனையில் உருவாக்கியிருந்த பிம்பத்தை எந்த ஆங்கிலப் படமும் காட்டிவிட முடியாது. இன்றைக்கு, 24 மணி நேர செய்தி சேனல்களும் அழுது வடிந்துகொண்டிருக்கும் தொலைக்காட்சித் தொடர்களும் தாத்தா - பாட்டிகளின் நேரத்தைத் தின்றுகொண்டிருக்கின்றன. குழந்தைகளும் கார்ட்டூன் படங்கள், தொடுதிரைக் கைபேசிகளின் விளையாட்டு மற்றும் சமூக வலைதளங்களில் மூழ்கிக்கொண்டிருக் கிறார்கள்.

பள்ளிக் குழந்தைகளின் செய்முறைக் கல்வி, பெற்றோரை ஸ்டிக்கர்கள் வாங்கவைத்து, பிள்ளைகளை அதை ஒட்டவைப்பது என்ற அளவில்தான் உள்ளது. இன்னும் ஒருபடி மேலே போய் ‘விர்ச்சுவல் லேர்னிங்’ (virtual learning) என்ற பெயரில் கிரிக்கெட் விளையாடுவது முதல் வனவிலங்குகள் சரணாலயத்தைச் சுற்றிப்பார்ப்பது வரை ஸ்மார்ட் போனிலேயே எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கிறோம்.

கிடைக்கும் நேரங்களில் திறன்வளர்ச்சி வகுப்புகளுக்குத் திணித்து அனுப்பிவிட்டால் மட்டும் நம் கடமை முடிந்துவிடுவதில்லை. கற்றல் வீட்டிலுள்ள, அக்கம்பக்கத்திலுள்ள ஒவ்வொருவரிடமும் இருந்து தான் ஆரம்பிக்கிறது. கார்ட்டூன்கள் மற்றும் வீடியோக்களில் கற்பனைக் காட்சிகளைக் கதையுடன் நேரடியாகவே வழங்கிவிடுவதால் சுயமா கக் கற்பனை செய்யும் திறன் மழுங்கிவிடும். ஆனால், கதைகளைக் கேட்கும்போது கற்பனை உலகத்தை அவர்களாகவே விரித்துக்கொள்ளும் திறன் உருவாகும்.

பக்கத்து வீட்டுப் பையன் இசைப் பயிற்சி வகுப்புக்குச் செல்கிறான் என்பதற்காக நன்றாகப் படம் வரையும் பையனை இசைப் பயிற்சிக்கு அனுப்பும் சூழலில் நாம் இருக்கிறோம். பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தேவையைத் தெரிந்துகொள்வதைவிட, தங்கள் விருப்பத்தையும் உலகின் எதிர்பார்ப்பையும் திணிப்பதையே விரும்புகிறார்கள்.

மற்றவர்களின் மனநிலை, விருப்பங்கள் மற்றும் எண்ண ஓட்டங்கள் எப்படி இருக்கிறது என்பதையும், மற்றவர்களின் மனவோட்டங்கள் தன்னைப் போலேவே இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதான புரிதல் ஐந்து வயதைத் தாண்டிய எல்லா குழந்தைகளுக்கும் இருக்க வேண்டும். இதைப் பற்றி விவரித்த புகழ்பெற்ற கோட்பாடுதான் ‘தியரி ஆஃப் மைண்ட்’ (Theory of mind). இந்த மனநிலையானது ‘ஆட்டிசம்’ மற்றும் ‘மனச்சிதைவு’ நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைபாடாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இதனால்தான் ஆட்டிசத் தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உலகத்திலிருந்து மற்றவர்களைப் பிரித்தறிய முடிவதில்லை. இன்றைக்கு ஸ்மார்ட் போன்களையும் சமூக வலைதளங்களையும் அதிக அளவில் உபயோகித்து வரும் குழந்தைகளும் இதைப் போன்ற ஒரு மனநிலைக்குத்தான் மாறிவருகிறார்கள். அவர்களது பேச்சுத் திறனிலும் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு பிரதிபலிக்கும் திறனிலும் பெரிய அளவில் மாற்றங்கள் அதை வெளிப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.

‘அந்தக் காலம் நன்றாகத்தான் இருந்தது’ என்று வாட்ஸ்அப்பில் படித்து ரசித்துவிட்டு, மீண்டும் அடுத்த நொடியிலேயே இந்தக் காலத்துக்கு மாறிவிடும் நம் மனதை ‘டிஜிட்டல் மனது’ என்றுதான் அழைக்க வேண்டும். ரோபோக்களை விஞ்ஞான பரிசோதனைக்கூடங்களில் மட்டுமல்ல, வீடுகளிலும் உருவாக்கிவருகிறோம் என்பது தான் இன்றைய தாத்தா - பாட்டிகளுக்கும், பெற்றோர்களுக்கும் மனநல மருத்துவ உலகம் விடுக்கும் ஓர் எச்சரிக்கை.

- ஆ.காட்சன், மனநல மருத்துவர்,
உதவிப் பேராசிரியர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி,
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x