

மக்கள் மாற்றத்துக்காக வாக்களித்தார்கள், வளர்ச்சியை விரும்புகிறார்கள், ஏழைகள் வறுமையிலிருந்து வெளிவரத் துடிக்கிறார்கள், வெளியே வந்தவர்கள் வாழ்க்கைத் தரத்தை மேலும் உயர்த்திக்கொள்ள முயல்கிறார்கள் என்று உரத்த குரலில் ஆரம்பிக்கும் 2014-15 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் உரை, இதற்கான அடித்தளத்தை அமைக்காமல், பொருளாதாரக் கொள்கையில் எவ்வித மாற்றத்தையும் செய்யாமல் வெற்றுத் தம்பட்டத்தோடு முடித்துக்கொண்டிருக்கிறது.
2010-11 ஆண்டுக்கு பிறகு, மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை யைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்று பழைய அரசு முடிவுசெய்தது. நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டு மெனில், ஒன்று, அரசின் வரி வருவாயை உயர்த்த வேண்டும் அல்லது செலவுகளைக் குறைக்க வேண்டும். முந்தைய அரசு வரி வருவாயை உயர்த்தாமல், செலவுகளைக் குறைத்து, பற்றாக் குறையைக் குறைத்தது. இந்த அரசும் இதையேதான் செய்கிறது.
முந்தைய 2013-14 ஆண்டின் பட்ஜெட்டுடன் இப்போதைய 2014-15 ஆண்டின் பட்ஜெட்டை ஒப்பிடும்போது கீழ்க்காணும் விவரங்கள் தெரிகின்றன:
1. அரசின் நிதிப் பற்றாக்குறை நாட்டின் மொத்த உற்பத்தியில் 4.6% லிருந்து 4.1%ஆகக் குறையும். இது எப்படிச் சாத்தியமானது?
2. அரசின் சொந்த வருவாய் 19% வளர, அரசின் செலவுகள் 13% மட்டுமே உயரும். செலவு வளர்ச்சி நாட்டின் உற்பத்தி வளர்ச்சியைவிடக் குறைவு. வருவாயை உயர்த்த முயன்ற இந்த அரசு, செலவுகளையும் குறைத்திருப்பது தெரிகிறது.
3. 19% உயரும் அரசின் சொந்த வருவாயில், வரி வருவாய் 17% மட்டுமே உயர்ந்து, வரி சாராத வருவாய் 25% என்ற அதிக அளவில் உயரும் என்று கூறுகிறது. இதில் பெரும் பகுதி பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது, பொது துறை நிறுவனங்களின் லாபம், கனிமங்கள், அலைக்கற்றை விற்பனை மூலம் பெறப்படும் ராயல்டி தொகைகளாக இருக்கும்.
4. வரி வருவாய் உயர்வில் பெரும் பகுதி சேவை வரியிலிருந்து பெறப்படும். சேவை வரி வருவாய் இந்த நிதி ஆண்டு 30% வளரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நேரடி வரிகளான வருமான வரி, கார்ப்பரேட் வரிகளை உயர்த்தாமல், மறைமுக வரியை உயர்த்தி வருவாயைத் தேட இந்த அரசு முயற்சிக்கிறது.
பற்றாக்குறைக்கு எது காரணம்?
அரசின் பற்றாக்குறைக்குக் காரணமாகப் பலரால் சுட்டிக்காட்டப்பட்ட ஒரு காரணி மானியம் ஆகும். மத்திய அரசு இரண்டு முக்கிய மானியங்களைக் கொடுக்கின்றது. ஒன்று, பெட்ரோல், டீசல், எரிவாயு, ரசாயன உரங்கள் போன்றவற்றுக்கு. மற்றொன்று, உணவு தானியங்களை வாங்க அதிக ஆதார விலைகளை நிர்ணயித்து, பொது விநியோகக் கடைகளில் குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்குவதால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யும் உணவு மானியம். இந்த இரண்டு மானியங்களும் ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போவதால், அரசுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படுவதாக அரசும் நம்பி, இந்த மானியங்களைக் குறைக்க ஆரம்பித்தது.
ஒவ்வொரு ஆண்டும் பல காரணங்களுக்காக அரசு பல துறைகளுக்கு வரிவிலக்கு அளிக்கின்றது. குறிப்பாக, கார்ப்பரேட் வரி, சுங்க வரி, கலால் வரி போன்றவற்றிலிருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும். வரிவிலக்கு பெற்ற நிறுவனங்கள் தங்கள் பொருட்களைக் குறைந்த விலைக்கு விற்று வியாபாரத்தை, பொருளின் தேவையை உயர்த்த முடியும். இதனால் உற்பத்தி பெருகி, வேலைவாய்ப்புகளும் பெருகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. வரிவிலக்கு என்பது ஒருவித அரசு செலவுதான், நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட மானியம் என்றும் கூறலாம். 2006-07 முதல் வரிவிலக்கு அளிப்பதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு விவரங்களை அரசு கொடுக்கிறது. வரிவிலக்கு, மானியம், நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றின் ஒப்பீடு கீழே உள்ள அட்டவணையில் உள்ளது.
இந்த அட்டவணையி லிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது. தொடர்ந்து நிதிப் பற்றாக்குறையைவிட, வரிவிலக்கினால் ஏற்படும் வருவாய் இழப்பு அதிகமாக இருக்கிறது. மேலும், அரசு நேரடியாக வழங்கும் மானியங்கள் வரிஇழப்பைவிடக் குறைவுதான். இவை இப்படியிருக்க, நமக்கு எழும் கேள்வி ஒன்றுதான்.
உணவு மானியம், உர மானியம் போன்றவை தேவைப் படும் மக்களுக்குச் சென்றடைவ தில்லை என்றெல்லாம் ஆராய்ந்து, அதனைக் குறைக்க வேண்டும் என்று சொல்லும் அரசும், பொருளியல் ஆய்வாளர்களும், வரிவிலக்கினால் யாருக்கு என்ன பயன், அதனால், அந்தத் துறை எதிர்பார்த்த வளர்ச்சியை அடைந்ததா என்ற ஆராய்ச்சிகள் எங்கே? இல்லை எனில், ஏன் ஆராயவில்லை? விடைதான் உங்களுக்குத் தெரியுமே? கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு, வரிஇழப்பைக் குறைக்கலாமே. இந்த ஆண்டும் வரிவிலக்கு தொடர்கிறது. ஆட்சி மாறினாலும் பொருளாதாரப் பாதையின் திசை மாறவில்லை!