

சமீபத்தில் உலகக் கோப்பையின் அரை இறுதியில் பிரேசிலை ஜெர்மனி 1-7 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தபோது, பிரேசிலை ஜெர்மனி ‘வல்லுறவு' (ரேப்) செய்து விட்டது என்றார்கள். வல்லுறவு செய்கிறவர், செய்யப்படுகிறவரை வெற்றிகொள்கிறாரா? விளையாட்டு தொடர்பாக மட்டுமல்ல, சாதாரணமான பேச்சு வழக்கில்கூட இந்த வார்த்தை இடையில் கையாளப்படுகிறது. இப்படியொரு சம்பவம் நடக்கும்போது அதில் சிக்கும் பெண் படும் பாடு, இங்கு சாதாரணமாக்கப்படுகிறது. இந்த மனப்போக்கும் சொல்லாடல்களும்தான் பாலியல் வன்புணர்ச்சி உணர்வை ஆண்களிடத்தில் பரப்புகிறது.
சகோதரி, அன்னை, மகள் அல்லது வளர்ப்பு நாய் என்று எதைக் குறிப்பிடுவதாக இருந்தாலும் பெண் என்றால் ஒரு இளக்காரம் அதில் தொனிக்கிறது. வீட்டில்கூட ஆண் குழந்தை, பெண் குழந்தை இரண்டையுமே போடா-வாடா என்கிறார்கள். மறந்தும் ஆண் குழந்தையைப் போடி என்று சொல்வதில்லை. அப்படிச் சொன்னால் அது அவனுக்கு அவமானமாகிவிடுமாம். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான விசா ரணைகளை எதிர்கொள்ளுங்கள் என்று பர்வேஸ் முஷாரபுக்குச் சொன்ன பாகிஸ் தான் மத்திய அமைச்சர் குவாஜா ஆசிஃப், “ஆண் பிள்ளையாக விசாரணையை எதிர்கொள்ளுங்கள்” என்றார்.
பெண்கள் என்றால் பயந்த சுபாவிகள், உண்மைகளைச் சந்திக்கும் திறனற்றவர் கள் என்று ஆண்கள் கருதுவதை உணரலாம். இந்த உணர்வு அப்படியே ஆண் பிள்ளைகளுக்கு ஊட்டப்படுகிறது. இதனாலேயே பெண் குழந்தைகள் தாழ்மை உணர்ச்சியில் சிக்கிவிடுகிறார்கள். ஆணாதிக்கச் சமுதாயத்தின் தொடக்க காலத்திலிருந்தே இது தொடர்கிறது. நீ விஞ்ஞானியாகவோ மருத்துவராகவோ பொறியாளராகவோகூட இருக்கலாம் ஆனால், நீ ஒரு பெண் என்பதை மறந்து விடாதே என்று சொல்பவைதான் இந்த வார்த்தைகளும் பேச்சுகளும்.