

தனித் தமிழ் இயக்கத்தின் முன்னோடி களில் ஒருவராக அறியப்படுபவர் மறைமலை அடிகள் (ஜூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950). இவரது இயற்பெயர் வேதாசலம்.
திருக்கழுகுன்றத்தில் பிறந்தவர். இவரது தந்தை நாகப்பட்டினத்தில் மருத்துவராகப் பணியாற்றினார். தந்தை அகால மரண மடைந்ததால் அவரது படிப்பு பாதிக்கப்பட்டது. ஆனாலும், விடாமுயற்சியால் தமிழறிஞர்களிடம் சென்று தனது அறிவை வளர்த்துக்கொண்டார்.
சென்னைக்கு வந்து கிறிஸ்துவக் கல்லூரியில் பேராசிரியர் பரிதிமாற் கலைஞ ரோடு தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1905-ல் சைவ சித்தாந்த மகா சமாஜம் என்ற அமைப்பைத் தொடங்கினார். பல ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றிய பின், பல்லாவரத்தில் 22.04.1912-ல் ‘சமரச சுத்த சன்மார்க்க சங்க'த்தைத் தொடங்கினார். பின்னர், அதன் பெயரை ‘பொதுநிலைக் கழகம்' என்று மாற்றினார்.திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திப் பல நூல்களை வெளியிட்டார். மணிமொழி நூல்நிலையத்தை உருவாக்கினார்.
மறைமலை அடிகள் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் மூன்று மொழிகளையும் நன்கு கற்றவர். அதே நேரத்தில் சமஸ்கிருதக் கலப்பு இல்லாமல் தமிழைத் தூய நடையில் எழுதினார். தனித் தமிழில் எழுதுவது என்பது ஓர் இயக்கமாக வளர்வதற்கு அவரது அணுகுமுறை ஒரு தொடக்கமாக அமைந்தது. ‘சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்', ‘திருக்குறள் ஆராய்ச்சி' உட்பட 54 நூல்களை இவர் எழுதியுள்ளார். பல்லாவரத்தில் அவர் வாழ்ந்த வீடு மறை மலை அடிகள் நூலகமாகத் தமிழக அர சால் பராமரிக்கப்படுகிறது.