

தமிழ்நாட்டில் இன்றைக்கு ஏறத்தாழ 70,000 பேர் அரசுக் கல்லூரியில் நிரந்தரப் பேராசிரியர் பணிக்காகக் காத்திருக்கிறார்கள். கௌரவ விரிவுரையாளரகளாக, தனியார் கல்லூரிப் பேராசிரியர்களாக, தனியார் பள்ளி ஆசிரியர்களாக,சுயதொழில் செய்வோராக, இன்ன பிற வேலைகளுக்குச் செல்பவர்களாக வாழ்க்கையை ஓட்டியபடி இப்பணிக்காக அவர்கள் தவம் கிடக்கிறார்கள். 2009, 2013 ஆண்டுகளின் நிரந்தரப் பணிகள் ‘சோளப்பொரி’ என்றாகிவிட்ட நிலையில், தேர்தலை முன்வைத்தாவது 2019இல் நடந்துவிடும் என்று பலரும் நம்பியிருந்தார்கள். ஆனால், பெருந்தொற்றுப் பரவலுக்குப் பின்னர் அதுவும் கானல் நீரானது.
நிரந்தரமற்ற வாழ்க்கை: எழுத்துத் தேர்வு முறையில் தான் பணி நியமனமா என மூத்தவர்கள் வருந்துகிறார்கள். இளம் பேராசிரியர்களோ எழுத்துத் தேர்வை எதிர்பார்க் கின்றனர். அதேநேரம், அவர்களிலும் பலர் ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் பணி அனுபவத்தை எட்டிவிட்டனர். அரசுக் கல்லூரிக் கௌரவ விரிவுரையாளர்களோ தங்களுக்கான நிரந்தரப் பணி கோரிக்கையை நம்பிக்கொண்டிருக்கின்றனர். பணி அனுபவ மதிப்பெண் இவர்களுக்கு மட்டுமா, அனைவருக்குமா என்றொரு கேள்வியும் நிலவுகிறது.
நிரந்தரப் பணியின்மையால் பலரின் சொந்த வாழ்க்கையில் ஏராளமான பிரச்சினைகள் நிலவுகின்றன. கரோனா காலத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டதால் வறுமையை எதிர்கொள்ள முடியாமல் கடன்பட்டவர்கள், ஊரகப் பகுதிகளில் 100 நாள் வேலைத் திட்டத்தில் சேர்ந்தவர்கள் எனப் பலர் இருக்கின்றனர்.
உயர்வில்லா ஊதியம்: 50 வயதுள்ள பேராசிரியர் ஒருவருக்கு ரூ.40,000 ஊதியம் வழங்கப்படுகிறது. அதுவும் ஒரே கல்லூரியில் தொடர்ந்து பணியாற்றினால் தான் உண்டு. பல கல்லூரிகளில் தனியார் பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளைவிடக் குறைவான ஊதியம். அதனால் கல்லூரிகளைவிட்டுப் பள்ளிகளுக்குச் சென்றவர்களும் உண்டு.
‘தேசிய மதிப்பீடு மற்றும்தரச்சான்று அவை’யின் (NAAC) தரத்துக்காகச் சில கல்லூரிகள் அந்த நேரத்துக்குச் சம்பளத்தை அதிகப்படுத்துவது உண்டு. குறைந்தபட்சம் ரூ.40,000 அல்லது ஒரு வகுப்புக்கு ரூ.1,500 என ஊதியம் குறித்து யுஜிசி அறிவுறுத்தியது; ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
ஆனால், யுஜிசி-யின் விதிகள், ISBN புத்தகம், ISSN இதழில் கட்டுரை, ‘UGC Listed Journal’ இல் கட்டுரை, பன்னாட்டு, தேசியக் கருத்தரங்கப் பங்கேற்பு உள்ளிட்ட தகுதிகளை எல்லாம் பேராசிரியர் சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். முனைவர் பட்டம் கட்டாயம் என்றும் நெட் / ஸ்லெட் இருந்தால் போதும் என்றும் தகுதிகள் ஒருபக்கம் ஆண்டுக்கு ஆண்டு மாறிக்கொண்டிருக்கின்றன.
அரசுக் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலுமே ரூ.20,000 / 30,000-க்குள் முடங்கிவிட்ட சம்பளம், எதன் அடிப்படையிலும் நியாயமில்லாதது. அதுவும்கூட குறித்த காலத்தில் வழங்கிடவில்லை என்ற சிக்கல்களும் தற்போது எழுந்துள்ளன. இந்நிலையில், தனியார் கல்வி நிறுவனங்கள் வேறு எப்படி நடந்துகொள்ளும்? செலவுகளைச் சமாளிக்க நகரத்திலிருந்து கிராமத்துக்குச் சென்றால், ரூ.12,000-க்கு ஒரு பேராசிரியர் விலை பேசப்படுகிறார்.
எதிர்காலக் கல்வி? - 2000ஆம் ஆண்டுக்குப் பிந்தைய காலத்தில், சில நிரந்தரப் பணிகள் ரூ.40 லட்சம் வரைக்கும் விலை வைக்கப்பட்டுள்ளன. கௌரவ விரிவுரையாளர் நியமனத்திலும் கணக்குப் போடப்பட்டது. இவ்வளவு தொகை கொடுத்து வகுப்பறைக்குச் செல்லும் ஒருவரால் பணியில் எப்படி நேர்மையாக இருக்க முடியும்? 45 வயதுக்குப் பின்பும் தன் பெயருக்குப் பின்னால் ஒரு நிரந்தர அடையாளத்தை அடைய முடியாத வாழ்க்கை என்ன பிடிப்பைத் தந்துவிடும்? தற்காலிகப் பணி, குறைவான ஊதியம், சமூக மதிப்பிழப்பு உள்ளிட்டவற்றால் பாடத்தைத் திறம்பட நடத்தும் மனப்பான்மையைப் பலர் இழந்துவிடுகின்றனர்.
பேராசிரியர் திறம்பட நடத்தாத பாடத்தால் மாணவர்கள் உயர வாய்ப்பில்லை. அரசு உதவிபெறும் கல்லூரிகளான தனியார் கல்லூரிகளில் நிரந்தரப் பணிகள் நிரப்புதல் நடைபெற்றுள்ளபோது, அரசுக் கல்லூரிகளுக்கு நிதி இல்லையா? காலம் கடந்துவிட்ட நிலையில் இனியும் தற்காலிகப் பேராசிரியர்களை நியமிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளை ஒத்திவைத்து, நிரந்தரப் பணியமர்த்துதலை அரசு விரைந்து செயல்படுத்திட வேண்டும்.
மூன்றில் ஒருபங்கு தற்காலிகப் பணி இருக் கலாம் எனும் நிலை இப்போது தலைகீழாக இருக்கிறது. பெரும் பேராசிரியர்கள்கூட இவற்றுக்கெல்லாம் குரல் கொடுப்பதில்லை. தாமதிக்கப்பட்ட நீதி அநீதியாகும் என்பதை ஆன்றோர், ஆள்வோர் நன்கு அறிவர். அவர்கள் ஆவன செய்ய வேண்டும்!
- தொடர்புக்கு: vvraa.s@gmail.com