அரசியல் சட்டமும் இந்தியத் தன்மையின் அசல் கூறுகளும்!

அரசியல் சட்டமும் இந்தியத் தன்மையின் அசல் கூறுகளும்!
Updated on
5 min read

இந்தியாவின் அரசியல் சட்டத்தில் எந்த அளவுக்கு இந்தியத்தன்மை இருக்கிறது? இந்திய நாகரிகத்துக்கும் பாரம்பரியத்துக்கும் முற்றிலும் அந்நியமான அம்சங்களைக் கொண்டதாக இந்திய அரசியல் சட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாகச் சிலர் அவ்வப்போது குற்றஞ்சாட்டுவதால் இந்தக் கேள்வி எழுகிறது. இந்திய மதத்தையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் புதிய, வித்தியாசமான அரசியல் சட்டத்தை வகுக்க வேண்டும் என்று சில வட்டாரங்களிலிருந்து சமீப காலங்களில் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.

இப்போதைய அரசியல் சட்டம் நம்முடைய ‘அடிமைத்தனத்தின் புதிய ஏற்பாடு’ என்று அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் முன்னாள் உறுப்பினரும் கலைகளுக்கான இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் தலைவருமான ராம் பகதூர் ராய், ‘அவுட்லுக்’ வார இதழின் பிராக்யா சிங்குக்கு (13.06.2016) அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். 16-வது மக்களவையையே புதிய அரசியல் சட்டத்தை வகுப்பதற்கான அரசியல் சட்டப் பேரவையாக மாற்ற வேண்டும் என்றுகூட அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இப்போதைய அரசியல் சட்டத்துக்குப் பதிலாக மனு ஸ்மிருதியையே சட்டப்புத்தகமாக வைத்துக்கொள்ள ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘ஆர்கனைசர்’ 30.11.1949-ல் எழுதிய தலையங்கத்தில் இதை வலியுறுத்தியது. ‘பாரதத்தின் புதிய அரசியல் சட்டத்தின் அவலம் என்னவென்றால் அதில் எதுவுமே பாரதத் தன்மையுடன் இல்லை’ என்று அதில் கூறியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். “நம்முடைய அரசியல் சட்டத்தில் நமக்குச் சொந்தமானது என்று சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லை; ஐநா சபையின் சாரமற்ற சில கொள்கைகள், அமெரிக்க – பிரிட்டிஷ் அரசியல் சட்டங்களிலிருந்து சில என்று சேர்த்து அவசர அவசரமாக செய்த ஒட்டுவேலைதான் நம்முடைய அரசியல் சட்டம்” என்று தனது ‘பஞ்ச் ஆஃப் தாட்ஸ்’ (1966) நூலில் விமர்சித்திருக்கிறார் எம்.எஸ். கோல்வல்கர்.

1992 டிசம்பர் 6-ல் நடந்த பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்துக்கு முன்னரும் பின்னரும் வெளியிட்ட துண்டறிக்கைகளிலும் இந்திய அரசியல் சட்டம் இந்துக்களுக்கு எதிரானது என்றே இந்துத்துவவாதிகள் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் விரும்பும் அரசியல் சட்டம் எப்படி இருக்க வேண்டும் என்ற மாதிரியையும் வெளியிட்டனர். இந்தியக் கலாச்சாரத்தின் ஆன்மாவையும் அறிவு மேன்மையையும் பிரதிபலிக்கும் வகையில் புதிய அரசியல் சட்டம் எழுதப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராஜேந்திர சிங் 1993 ஜனவரி 14-ல் அளித்த பேட்டியிலும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியா என்பது வெவ்வேறு கலாச்சாரங்களின் ஐக்கியக் கலவை அல்ல என்றும் மறுத்திருக்கிறார். ஆனால், அது ஏற்கக்கூடிய வாதமல்ல!

அரசியல் சட்டத்தின் அடிநாதம்: அரசியல் சட்டத்தின் 51(ஏ) கூறில், நம் நாட்டின் வளமான பாரம்பரியம் மிக்க ஐக்கியக் கலாச்சாரத்தை மதித்து, பாதுகாப்போம் என்று நாம் எல்லோருமே அறிவித்திருக்கிறோம். 1977-ல் சட்டத் திருத்தம் மூலம் இது சேர்க்கப்பட்டது. இந்தியாவின் ஐக்கியக் கலாச்சாரத்தின் அங்கமான உலகப் பொது நோக்கங்களே இந்திய அரசியல் சட்டத்தின் அடிநாதமாக இருக்கின்றன. அரசியல் சட்டத்தை வகுக்கத் தொடங்கியபோதே நம்முடைய ஐக்கிய கலாச்சாரத்தைக் காக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டு அது ஏற்கவும்பட்டது. சில மாற்றங்களுடன் இது இந்திய அரசியல் சட்டத்தின் முகப்புரையாகவே ஏற்கப்பட்டது.

அரசியல் சட்ட நிர்ணய சபையில் இப்படிப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு 4,600 ஆண்டுகளுக்கு முன்னால், - வேத காலத்துக்கும் முன்னரே – ஆட்சி நிர்வாகத்தில் ஐக்கிய கலாச்சாரத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. தேவர்கள் - தைத்தியர்கள் அல்லது ஆரியர்கள் – அசுரர்கள் கலாச்சாரம் வாயிலாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது. நல்ல நிர்வாகத்துக்கான சீலங்களாக அகிம்சை, கருணை, தானம் ஆகியவற்றை தைத்தியர்களும் தேவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். நல்ல அரசனின் வெற்றியின் ரகசியமே சீலத்துடன் வாழ்வதுதான் என்று வலியுறுத்தப்பட்டது. மகாபாரதத்தின் சாந்தி பர்வத்தில் இதற்கான குறிப்புகள் உள்ளன.

அசுரர்களின் தலைவனான பிரகலாதன் ஆரியர்களின் தலைவனான இந்திரனுடனான யுத்தத்தில் தன்னுடைய ஒழுக்கம் – சீலம் காரணமாகவே வெற்றி பெறுகிறார். பிரகலாதரின் நற்குணங்களைப் பெற்றால்தான் இந்திரனால் வெற்றி பெற முடியும் என்ற குறிப்பும் அதில் உள்ளது. இதை திருதராஷ்டிரன் துரியோதனனிடம் கூறுவதாக மகாபாரதம் தெரிவிக்கிறது. அகிம்சை, கருணை, தானம் ஆகிய சீலங்களைக் கொண்ட மன்னன் தன்னுடைய மக்களைத் தோழமையுடனும் கண்ணியத்துடனும் நடத்த வேண்டும் என்றும் நல்லாட்சிக்கான இலக்கணம் வலியுறுத்துகிறது.

உலகின் பிற பகுதிகளில் நிலவிய நாகரிகங்களைப் போல இந்திய நாகரிகங்களும் உலகுக்கேப் பொருந்தும்படியான சில லட்சியங்களை மனித வாழ்க்கைக்கு மட்டுமல்ல; இயற்கைக்கும் பொதுவானதாகக் கடைப்பிடித்திருக்கின்றன. தர்மமே உயர்வான அறம், அது அனைவருக்கும் பொதுவானது என்றே கடைப்பிடிக்கப்பட்டது. தர்மமும் கர்மமும் அனுசரிக்கப்பட வேண்டியவை. தர்மமானது எதைச் செய்தாலும் ஒருசார்பாகச் செயல்படாமல் எது இயற்கைக்குப் பொருந்துவதோ, எது பொது நன்மைக்கு நல்லதோ அதைக் கடைப்பிடிப்பது. கர்மம் என்பது செயல்.

மத நோக்கில் கூறப்படும் தர்மம் என்பதற்கும் அரச நிர்வாகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய தர்மம் என்பதற்கும் வேறுபாடு உள்ளது. சில தர்மங்கள் உலகுக்கே பொதுவானவை, அடிப்படையானவை என்று வேத – பிராமணீயக் கலாச்சாரங்கள் வகுத்தன. சமணக் குழுக்களும் அதே போன்ற அனைவருக்கும் பொதுவான வாழ்நெறிகளை வகுத்தன. வேதத்தில் கூறியுள்ளபடி யாகங்களை வளர்ப்பதும் உயிர்களைப் பலியிடுவதும் தேவையில்லை என்ற கருத்து கொண்ட சமணமும், பொதுவான உலக தர்மங்கள் என்று அடையாளம் காணப்பட்டவற்றை ஏற்றுக்கொண்டது.

சாதுர்யாம தர்மா என்று நான்கு அறநெறிகளை அது வலியுறுத்தியது. அகிம்சை, சத்தியம், அஸ்தேயம், அபாரிகிரஹம் ஆகியவை அந்த நான்கு. (அஸ்தேயம் என்றால் பிறர் பொருளை அபகரிக்காமல் இருத்தல்; அபாரிகிரஹம் என்றால் தேவையற்றவற்றின் மீது பற்று வைக்காமல் இருத்தல்.) உபநிஷத் காலத்தில் கோர ஆங்கீரஸர் என்ற ரிஷி தேவகியின் மகனான கிருஷ்ணருக்கு அடிப்படையான நல்லொழுக்கங்களைப் போதித்தார். அதில் தியாகம் அல்லது யாகம் ஆகியவற்றின் நன்மைகளை உபதேசித்தார் என்று சாண்டோக்ய உபநிஷத் தெரிவிக்கிறது. எளிமை, தானம், நேர்மை, அகிம்சை, சத்தியம் ஆகியவை நல்லோரின் குணங்கள் என்று உபதேசிக்கப்படுகிறது. உபநிஷத்தும் சமணக் குழுக்களும் நல்லொழுக்கங்கள் என்று வகைப்படுத்துவனவற்றில் ஒற்றுமை உள்ளது.

பன்மைத்தன்மையின் பாரம்பரியம்: கி.மு. 600-ல் சார்வாகர்கள், ஜைனர்கள், ஆசீவகர்கள் இடையே நன்னெறிகளை வகுப்பதிலும் கடைப்பிடிப்பதிலும் ஆரோக்கியமான போட்டி ஏற்படுகிறது. ஜைன மதத்தை சந்திரகுப்தர் ஆதரித்தார். பிந்துசாரர் ஆசீவகர்களை ஆதரித்தார். புத்தரின் ஐந்து உபதேசங்களும் பிராமண, சிராமண மரபுகளிலும் கூறப்பட்டவையாகவே இருக்கின்றன.

வாழ்வின் பன்மைத்தன்மையால் கலாச்சாரங்கள் இணைவது மகாபாரத காலத்தில் ஏற்கப்பட்டிருக்கிறது. “தர்மம் என்பது வேதத்திலிருந்துதான் அறியப்படுகிறது என்று சிலர் கருதுகிறார்கள்; தர்மம் என்பது நன்மை-தீமைகளை ஆராய்ந்து பார்த்துத்தான் தீர்மானிக்க வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். இருவர் சொல்வதிலும் நான் தவறு காணவில்லை” என்று கீதோபதேசத்தில் அர்ஜுனனிடம் கூறுகிறார் கிருஷ்ணர்.

கி.மு. 600-ல் நல்ல அறநெறிகள் எவை என்பதை அடையாளம் காண்பதில் சார்வாகர்கள், ஜைனர்கள், ஆசீவகர்கள் இடையே ஆரோக்கியமான போட்டி நிலவியது. மவுரிய ஆட்சியாளர்களின் செயல்களில் இது எதிரொலிக்கிறது. சந்திரகுப்தர் தாங்கள் வலியுறுத்திய அறநெறிகளை ஆதரிக்கிறார் என்றனர் ஜைனர்கள். ஆசீவகர்கள் ஆதரித்தார்; பிந்துசாரர் என்பதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன. புத்தர் வலியுறுத்திய ஐந்து நல்லொழுக்க நெறிகளும் (கட்டளைகள்) பிராமணீக, சிராமணீக மரபுகளில் வலியுறுத்தப்பட்ட உலகப் பொது அறங்களாகவே இருக்கின்றன.

கி.மு. 4-வது நூற்றாண்டு காலத்தில் கவுடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் அனைவருக்கும் பொதுவான கடமைகளாக அகிம்சை, உண்மை, நேர்மை, தீயவற்றிலிருந்து விலகியிருத்தல், கருணை, பொறுமை ஆகியவை வலியுறுத்தப்பட்டுள்ளன. அசோகர் தனது ஆட்சிக் காலத்தில் அனைவரும் பின்பற்ற வேண்டிய தர்மங்களை வலியுறுத்தினார்.

நாட்டில் எல்லா தர்மசாஸ்திரங்களும் எல்லா வர்ணங்களுக்கும் பொருந்தும்படியாக பொதுவான தர்மங்களையே வலியுறுத்தி வந்துள்ளன. அகிம்சை, உண்மை பேசுதல், பிறர் பொருளைக் களவாடாமல் இருத்தல், புலனடக்கம், கருணை, அரசுக்கு விசுவாசமாக இருத்தல் ஆகியவற்றையே வலியுறுத்துகின்றன என்று பி.பி. காணே சுட்டிக்காட்டுகிறார். வெவ்வேறு கலாச்சாரம், வெவ்வேறு காலகட்டங்களில்கூட பொதுவான தர்மங்களை வலியுறுத்தப்பட்டன, கடைப்பிடிக்கப்பட்டன என்று இவற்றிலிருந்து அறிகிறோம். இந்த பாரம்பரியம் காரணமாகத்தான் நம்மால் ஐக்கிய கலாச்சாரத்தை நம்முடைய அரசியல் சட்டத்துக்கு அடிப்படையாகக் கொள்ள முடிந்திருக்கிறது.

ஐக்கியக் கலாச்சாரம்: திராவிடப் பிரதேசத்தில் மணிமேகலை என்ற காப்பியத்தில் சீத்தலைச் சாத்தனார், இந்த ஐக்கியக் கலாச்சாரம் எப்படி உருவானது என்று உதாரணங்களுடன் விளக்குகிறார். தென்னிந்திய கோயில் நாட்டிய மங்கையான மணிமேகலை, அத் தொழிலைவிட்டு பசித்தோர்க்கு உணவளிக்கும் அறத்தைத் தன்னுடைய தாய் மாதவியுடன் மேற்கொள்வதென்று முடிவெடுக்கிறார். அன்றைக்கு எல்லோரும் மத உணர்வுடன் பக்திமான்களாக இல்லாமல் லோகாயதர்களாகவும் பூதவாதிகளாகவும் இருந்தனர் என்பதை மணிமேகலை வாயிலாகவே சீத்தலைச் சாத்தனார் விவரிக்கிறார்.

நாத்திகர்கள், நிர்கிரந்தர்கள், பவுத்தர்கள் ஒரு புறமும் வைசேஷிகர்கள், சாமாக்கியர்கள் மற்றும் பிறரும் வாழ்ந்துள்ளனர். இடைக்காலத்தில் தோன்றிய பக்தி இயக்கங்கள் வடக்கிலும் தெற்கிலும் மதச்சார்பற்ற – பன்மைத்தன்மையுள்ள இந்திய சமூகத்தின் ஐக்கியக் கலாச்சாரம் உருவானதைக் காட்டுகின்றன. இவை அனைத்துமே மக்கள் இயக்கங்கள் என்று அழைக்கப்படத்தக்கவை. கோரக்நாத் என்று அழைக்கப்படும் நாத் யோகி கோரக்பூர் 11-வது 12-வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஐக்கிய கலாச்சாரத்துக்கு உதாரணராக வாழ்ந்திருக்கிறார். “பிறப்பால் நான் இந்து, பக்குவம் காரணமாக நான் யோகி, அறிவால் நான் முஸ்லிம்” என்று கூறியிருக்கிறார்.

மனித விழுமியங்களைக் காப்பாற்றும் ஐக்கியக் கலாச்சாரத்தைத் தழுவுங்கள் என்று இந்துக்களையும் முஸ்லிம்களையும் கடிந்துகொள்கிறார் கபீர் தாசர். “அல்லா, ராம், கரீம், கேசவ், ஹரி, ஹஜரத் என்று இறைவன் ஆயிரம் நாமங்களில் அழைக்கப்படுகிறான். தங்கத்தை மோதிரமாகவும் வளையலாகவும் படைத்து அணியலாம்தானே? வேறுபாடுகள் நாம் பயன்படுத்தும் வார்த்தைகளில்தானே? ஒருவர் ஆதாம், ஒருவர் பிரம்மா. யார் இந்து, யார் துருக்கர்? எல்லோரும் ஒரே உலகில்தானே வாழ்கிறோம்; எல்லா பாண்டங்களும் களிமண்ணால்தானே செய்யப்படுகின்றன” என்றெல்லாம் பலவாறாகக் கேட்கிறார் கபீர்.

யாருமே இந்து இல்லை, யாருமே துருக்கர் இல்லை என்று கூறி ஐக்கிய மனித மாண்புகளுடன் வாழுமாறு அறிவுறுத்துகிறார் சீக்கிய குருவான நானக். பத்மாவத் என்ற கவிதையை யாத்த சூஃபி கவிஞர் மாலிக் முகம்மத் ஜாயஸி, கிருஷ்ணர் மீது கணாவத் என்ற காப்பியத்தையும் இயற்றியிருக்கிறார். இந்த ஐக்கியக் கலாச்சாரம் சுதந்திரப் போராட்ட காலத்தில் அதன் உச்சத்தில் இருந்தது. அதுவே இந்திய அரசியல் சட்டத்திலும் எதிரொலித்திருக்கிறது. மனித உரிமைகளைக் காக்க வேண்டும் என்ற அக்கறையுடன் இயற்றப்பட்ட அனைவருக்கும் பொருந்தும் தன்மையுள்ளதுதான் இந்திய அரசியல் சட்டம். வெவ்வேறு சித்தாந்தங்களும் உலக நோக்கும் கொண்ட வெவ்வேறு பிரிவினரின் கருத்தொற்றுமையின் சங்கமமே இந்திய அரசியல் சட்டம் என்றும் கூறலாம்.

2002-ல் உச்ச நீதிமன்றம் 11 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வின் மூலம் இதை டி.எம். பை அறக்கட்டளை வழக்கில் மிக அழகாகத் தெளிவுபடுத்தியிருக்கிறது. “இந்தியா நூறு கோடி மக்கள், ஆறு மிகப் பெரிய இனக் குழுக்கள், 52 பெரிய பழங்குடிகள், ஆறு பெரிய மதங்கள், 6,400 சாதிகள் – துணைச் சாதிகள், 18 பெரிய மொழிகள், 1,600 சிறு மொழிகள் – பேச்சு வழக்குகள் கொண்ட அற்புதமான நாடு; மதச்சார்பின்மையே இந்தியாவின் உயிர்நாடி என்பதை வெவ்வேறு வண்ணங்களைக் கொண்ட இந்திய வரைபடம் மூலமே சித்தரிக்கலாம்” என்று கூறியிருக்கிறது.

“இந்தியா தன்னுடைய அரசியல் சட்ட விழுமியங்களை 5,000 ஆண்டு வரலாற்றுப் பாரம்பரியத்திலிருந்து தயாரித்திருக்கிறது. இந்தியாவின் மறு பிறப்புக்கு மட்டுமல்ல மனித குலத்தின் மறு வாசிப்புக்காகவும் இது அவசியம்; நம்முடைய மக்களின் வியர்வை, ரத்தம், கண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டது அது. முட்டாள்தனத்தாலோ, குறுகிய எண்ணங்களாலோ, சுயநலத்தாலோ இந்தக் கொள்கைகளை ஒரே இரவில்கூட சிலரால் நாசமாக்கிவிட முடியும். நம்முடைய முன்னோர்கள் நமக்கு அளித்த சீதனம்தான் இந்திய அரசியல் சட்டம். நாம் இதைக் காப்பாற்ற வேண்டிய அறங்காவலர்கள்” என்று சட்ட அறிஞரான நானி பால்கிவாலா கூறியிருக்கிறார்.

| கட்டுரையாளர் - உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் | சுருக்கமாகத் தமிழில்: சாரி | @ பிரண்ட்லைன் | நவம்பர் 26 - அரசியல் சட்ட தினம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in