

எத்தனையோ படைப்புகளில் கடவுள் பற்றிய குறிப்பிருந்தாலும் தமிழில் வெளியான மூன்று கதாபாத்திரங்கள் சற்று வித்தியாசமானவை. அவற்றுள் ஒன்று, கந்தசாமிப் பிள்ளை; இரண்டாவது, ரிட்டயர்டு ஆபீஸர் சீனிவாசன்; மூன்றாவது விஞ்ஞானி. இந்த மூன்று கதாபாத்திரங்களும் முறையே புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’, சுஜாதாவின் ‘கடவுள் வந்திருந்தார்’ (நாடகம்), ஜெயகாந்தனின் ‘இல்லாதது எது’ ஆகிய புனைவுகளின் மையக் கதாபாத்திரங்கள்.
இந்த மூன்று கதாபாத்திரங்களுமே கடவுளைப் பார்க்கின்றன. மூன்று பேரும் கடவுளை வித்தியாசமான தருணங்களில், வெவ்வேறு நிலைகளில் கடவுளைப் பார்க்கிறவர்கள். கந்தசாமிப் பிள்ளை முன்பு, சிவனே கதாபாத்திரமாக நேரடியாகத் தோன்றுகிறார். விஞ்ஞானி முன் தன்னைப் பரமாத்மா என்று கடவுள் அறிமுகப்படுத்திக்கொள்கிறார். சுஜாதாவின் ‘கடவுள் வந்திருந்தார்’ நாடகத்தில் கடவுள் பிரசன்னமானார் என்றோ கடவுளைப் பற்றிய வசனங்களோ கிடையாது. மாறாக, ஒருகட்டத்தில் சீனிவாசன் என்கிற மனிதரையே கடவுளின் அவதாரமாகப் பார்வையாளர்கள் பார்ப்பதே நடக்கிறது.
புதுமைப்பித்தனின் கடவுள்
புதுமைப்பித்தனின் கதையில் கடவுள் அதுவும் சாதாரண மனிதராகத் தோன்றி உலகத்தைப் பார்க்க வந்ததாகவும், கந்தசாமிப் பிள்ளையின் விருந்தினராகச் சில நாள் தங்கப்போவதாகவும் கூறிக்கொண்டு, கந்தசாமி முன் தோன்றுகிறார். கந்தசாமிப் பிள்ளையும் கடவுளின் வருகையை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், சில நிபந்தனைகளை விதிக்கிறார்: “என்னுடன் பழக வேண்டுமானால் மனுஷனைப் போல என்னுடன் பழக வேண்டும். ...மனுசாள் கூடப் பழகினால் அவர்களைப் போலத் தான் நடந்தாகணும். தூங்க இஷ்டமில்லை என்றால் பேசாமல் படுத்துக்கொண்டு இருங்கள். ராத்திரியில் நடமாடினால் அபவாதத்துக்கு இடமாகும்” என்கிறார் கந்தசாமி.
கடவுளும் நிபந்தனைகளை ஏற்கிறார். கந்தசாமிப் பிள்ளை மாதந்தோறும் வரும் ‘சித்த மருத்துவ பிகை' இதழுக்குக் கடவுளிடம் ஆயுள் சந்தா கேட்கிறார் கந்தசாமி. “ஆயுள் சந்தா என்றால் யாருடைய ஆயுள்? உமது ஆயுளா, பத்திரிகையின் ஆயுளா?” என்று கடவுள் திருப்பிக் கேட்கிறார்.
இத்துடன் நிற்கவில்லை. கடவுளும் பூலோகத்தில் பிழைப்பு நடத்தச் சில ஆலோசனைகளையும் தருகிறார் கந்தசாமி. உலகத்தில் தன்னால் வாழ்வது சாத்தியமல்ல என்பதை உணர்ந்த கடவுள் மறைந்துவிடுகிறார். கடவுள், கந்தசாமி ஆகிய கதாபாத்திரங்கள் மூலமாக நடுத்தர மக்கள் வாழ்க்கைப் போராட்டமும் கடவுளின் நிலைப்பாடும் பகடியாகச் சித்தரிக்கப்பட்டிருந்தாலும், சமுதாய நிலை குறித்த கருத்துகளையே இதன்வழி புதுமைப்பித்தன் முன்வைத்திருப்பார்.
ஜெயகாந்தனின் பரமாத்மா
ஜெயகாந்தனின் ‘இல்லாதது எது’ சிறுகதையும் இதைத்தான் முன்வைக்கிறது. இங்கும் கடவுள் வருகிறார். ஆனால் யதார்த்த வாழ்க்கையுடன் போராடும் கந்தசாமி போன்ற
ஒருவர் முன்பாக அன்றி, அறிவும் திறமையும் மிக்க விஞ்ஞானி ஒருவர் முன் தோன்றுகிறார். தன்னைப் பரமாத்மா என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். தன் பணியில் குறுக்கிடும் அந்தப் பரமாத்மாவின் பிரசன்னத்தை விஞ்ஞானி விரும்பவில்லை. “நீ போய் உனக்குத் தெரிந்த பாஷையில் பேசிக்கொண்டிரு. அல்லது ...உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆத்திகரிடம் போய்ப் பேசு. அல்லது ...நாத்திகர்களிடம் போய்ப் பேசு. நம்பிவிடுவார்கள் அவர்களின் தீராத விவகாரமாவது தீர்ந்து தொலையும்’’ என்று கடவுளிடம் விஞ்ஞானி சொல்கிறார்.
மனிதர்களின் ஆறு புலன்களில் ஒன்றைத் தான் எடுத்துக்கொள்ளப் போவதாக பரமாத்மா சொல்கிறார். அதற்கு ஒப்புக்கொள்ளும் விஞ்ஞானி, அதற்குப் பதிலாக ஒன்றைச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார். பரமாத்மா ஒப்புக்கொள்கிறார். இருக்கின்ற புலன்களில் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம். அதற்குப் பதிலாக இல்லாத புலன் ஒன்றைத் தர வேண்டும் என்கிறார் விஞ்ஞானி. இந்தக் கதை இப்படிப் போய், தர்க்கரீதியில் பரமாத்மாவிடம் கேள்விகள் கேட்கிறார் விஞ்ஞானி.
சுஜாதாவின் சீனிவாசனந்தா
பணி ஓய்வுபெற்ற அலுவலர் சீனிவாசனின் வீட்டில் நடக்கும் சம்பவங்களே இந்தக் கதை. சீனிவாசனின் மனைவியும் திருமணமாகாத மகளும் சீனிவாசனை வீட்டுக்குக் காவல் வைத்துவிட்டு வெளியில் செல்கின்றனர். ‘எதிர்கால மனிதன்’ என்கிற புத்தகத்தைப் படிக்கும்போது அது நிகழ்கிறது. எதிர்கால மனிதன் சீனிவாசன் முன்னால் தோன்றுகிறான். பயந்துபோன அவரிடம், நான் மனிதன்தான். இருபத்திரண்டாம் நூற்றாண்டு மனிதன். கால இயந்திரத்தில் பயணித்து வந்ததாகக் கூறுகிறான். குடும்பத்திலுள்ள மற்றவர்கள் அவனைக் காண முடியாது. குடும்பத்தாரும் சுற்றத்தாரும் அவனுக்கு அவர் பதிலளிப்பதைப் பார்த்து, அவரை மன நோயாளியாகப் பாவிக்கத் தொடங்குகின்றனர்.
இந்நிலையில் உதவிக்கு வரும் சுந்தர், நிலைமையைப் புரிந்துகொண்டு அந்த மனிதனை மற்றவர்களுக்குக் கடவுளாகக் காட்ட முயல்கிறான். தன்னை மற்றவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள, அந்த எதிர்கால மனிதன் மூலம், ஏற்கெனவே ரிகர்சல் பார்த்துக்கொண்டபடி சில அதிசயங்களை சீனிவாசன் நிகழ்த்திக் காட்ட, அவர் சக்திகொண்ட சீனிவாசன் ஆகிறார்.
பக்தியும் பக்திமார்க்கம் பற்றிப் புதிய புதிய கேள்விகளும் சிந்தனைகளும் இந்த விஞ்ஞான யுகத்தில் இளைஞர்கள் மத்தியில் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. இந்த மூன்று கதைகளும் வெவ்வேறு கோணத்தில் இதை விசாரிக்கின்றன.
- கமலநாபன்
தொடர்புக்கு: gpadmanabhasekar@gmail.com