

பழந்தமிழர் பெருமைக்கு இன்றும் கட்டியம் கூறி நிற்பவை நம் சங்கப் பாடல்கள். சங்க காலப் பெண் கவிஞர்கள் பற்றிய ஆய்வினை மேற்கொண்ட ஒளவை நடராசன் 41 பேர் என்று நிறுவுகிறார். எண்ணிக்கையில் குறைவாகவோ கூடுதலாகவோ எப்படி இருப்பினும் தங்கள் படைப்பின் மூலமும் வாழ்க்கையின் மூலமும் ஆண்பால் புலவர்களுக்குச் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதையே சங்கப் பெண்கவிகள் நிரூபிக்கிறார்கள்.
சங்க காலப் பாடினிகள் அரண்மனைகளில் ஒலித்த பாடல்களை வீதியில் ஒலிக்கவிட்டனர். வீதிகளில் மட்டுமல்ல; வீடுகளிலும் இசைக்கவிட்டனர். வீடுகளில் மட்டுமல்ல, தினைப் புனத்திலும் கம்பங்கொல்லையிலும், சோளக் கொல்லையிலும்கூட ஒலிக்கவிட்டனர். குறுந்தொகையில் 23ஆம் பாட்டில் கட்டுவிச்சி மூலம் பாடுகிறார் ஔவையார்: ‘அகவன்
மகளே அகவன் மகளே / மனவுக் கோப்பு அன்ன நல் நெடுங்கூந்தல்/அகவன் மகளே பாடுக பாட்டே/இன்னும் பாடுக பாட்டே/ அவர் நல் நெடுங்குன்றம் பாடிய பாட்டே’.
பொதுவாகத் தான் பெற்ற மகள் உடல் மெலிந்து வருத்தத்தோடு இருந்தால், அவளது நிலைக்கு என்ன காரணம் என்றும் அவள் நலமடைய என்ன செய்ய வேண்டும் என்றும் தாய் யோசிப்பது ஒவ்வொரு வீட்டிலும் இன்றும் நடப்பதுதான். சங்க காலத்தில், ஒரு பெண் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருக்கும்பொழுது, தலைவனைச் சில நாள் காண முடியாத சூழ்நிலை ஏற்படும். அப்போது, அவனையே நினைத்து வருந்தி, உடல் மெலிந்து காணப்படுவாள். அதைக் கண்ட அவள் தாய், கட்டுவிச்சியை அழைத்து வந்து, தன் பெண்ணின் நிலைமைக்குக் காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள முயல்வது வழக்கம்.
கட்டுவிச்சி என்பவள் குறிசொல்லும் பெண்மணி. அவள் முறத்தில் நெல், அரிசி முதலியவற்றை இட்டும், சோழிகளை உருட்டி அதன் எண்ணிக்கையைக் கணக்கிட்டும் குறி சொல்பவள். இப்படிக் குறிசொல்லுதலைக் ‘கட்டுக் காணுதல்’ என்றும் குறிசொல்லும் பெண்களைக் ‘கட்டுவிச்சி’ என்றும் சங்க காலத்தில் அழைத்தனர். பிற்காலத்தில் கட்டுவிச்சி குறத்தி என்றும் அழைக்கப்பட்டாள். அப்படி ஒருநாள் கட்டுவிச்சி வந்தாள். அவள் குறி சொல்வதற்கு முன், முருகனையும் அவன் வாழ்கின்ற மலைகளையும் பற்றிப் பாடும் வழக்கத்தோடு பாடலை ஆரம்பிக்கிறாள்.
அதுவரை மனம் சோர்ந்திருந்த தலைவி, தன் தலைவன் வாழும் ஊரில் உள்ள மலையைப் பற்றி கட்டுவிச்சி பாடியவுடன் சட்டெனப் புன்முறுவல் பூக்கிறாள். கட்டுவிச்சி மீண்டும் அந்த மலையைப் பற்றிப் பாடினால், தலைவியின் மகிழ்ச்சியைக் கண்டு, தலைவியின் தாயும் செவிலித்தாயும் அந்த மலையில் வாழும் தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் புரிந்துகொள்வார்கள் என்று தோழி எண்ணுகிறாள். அதனால், “சங்கு மணி யினால் ஆகிய மாலை போல் உள்ள நல்ல நீண்ட வெண்மையான கூந்தலை உடைய பெண்ணே, நீ பாடிய பாட்டுக்குள் அவருடைய நல்ல நெடிய குன்றத்தைப் பற்றிப் பாடிய அந்தப் பாட்டை மறுபடி பாடுவாயா?” என்று கேட்கிறாள்.
இந்தப் பாடலில் தோழி ‘அவர் நல் நெடுங்குன்றம்’ என்று கட்டுவிச்சியைப் பார்த்துப் பாடச் சொல்வதன் மூலம் ‘அவர்’ என்கிற சொல் யாரைக் குறிக்கிறது என்று நற்றாயும் செவிலித் தாயும் யோசித்து அதைக் கண்டறிய நிச்சயமாக முயல்வார்கள். இதனால், தலைவியின் உடல் மெலிவும் மனவருத்தமும் பெற யார் காரணம் என்று தெரிந்துகொள்வார்கள் என்கிற நம்பிக்கையுடன் தோழி கட்டுவிச்சியிடம் சொல்வதுபோல் பாடலைப் பாடியிருக்கிறார் ஒளவையார்.
ஓர் உளவியல் நுட்பத்தோடு இயங்கி ‘அவர் நல் நெடுங்குன்றம்’ என்று ஒரு சிறு குறிப்பு மூலம் தலைவியின் உடல்நலம் மாறுபட்டதற்குக் காரணம் காதல் என்பதையும், அவள் மனம் கவர்ந்த தலைவன் அந்த மலையைச் சார்ந்தவன் என்பதையும், தாய்க்கு உள்ளுறையாக உணர்த்த, ‘அகவன் மகளே பாடுக பாட்டே இன்னும் பாடுக பாட்டே அவர் நல் நெடுங்குன்றம் பாடிய பாட்டே’ என்கிறாள் தோழி.
மனித வாழ்க்கைக்குப் பின்புலமாக அமைந்த இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர்கள் அக்காலத் தமிழர்கள். அந்த இயற்கையிலிருந்து பெற்ற ஒலிகளிலிருந்தும் ஓசைநயங் களிலிருந்தும் கேட்டும் கண்டுணர்ந்தும் அதைப் போலவே செய்து பாடியும் இசைத்தும் இயங்கி இயங்கி, நமக்கு ஒரு பெரும் இசைப் புதையலையே வழங்கிச் சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
சங்க காலப் பெண்பாற்புலவர்களின் பாடல்களில் காதலும் வீரமும் தனிமைத் துயரும், கைம்மை நோன்பும், இயற்கை நேயமும் மட்டுமல்ல, இசையின் கூறுகளும் அதில் விரவிக் கிடக்கின்றன. அவர்கள் கற்றிருந்த இசைத்திறமும் அது தொடர்பான நுண்ணறிவும் அசாத்தியமாகத் தோன்றுகின்றன. அடியார்க்கு நல்லார் 11,991 பண்கள் இருந்தன என்று கணக்கிடுகிறார். விஞ்ஞானத் தொழில் நுட்பத்தின், தகவல்தொடர்பு ஊடகங்களின் நிழலே பாவியிராத அக்காலத்தில், இத்தனை விதமாகப் பிரிந்திருந்த பண்களை எல்லாம் நீங்கள் எங்கே கற்றீர்கள் எம் பாட்டிகளே, எங்கே கற்றீர்கள்!