

மாலை நேர ஒளியில், தலைமுடியின் விளிம்பு தங்கக் கம்பிகளாக மின்ன, மலர்ந்த முகத்துடன் நிற்கும் ஒரு பெண்ணின் உருவத்தை, திறமைவாய்ந்த எந்த ஓவியராலும் வரைந்துவிட முடியும்தான். ஆனால், அது மாருதியின் ஓவியத்துக்கு நிகராகிவிட முடியாது. கல்லூரி மாணவி, பணிக்குச் செல்லும் பெண், கல்யாணக் கனவுகளுடன் காத்திருக்கும் இளம் பெண், ஈரம் சொட்டும் தலையில் சுற்றப்பட்ட துண்டுடன் வெட்கப் புன்னகை விரிக்கும் புதுமணப் பெண் என மாருதி வரைந்த பெண்களின் முகங்கள், ஏராளமான பெண்களின் அழகு ரகசியத்துக்கும், ஆண்களின் திருமண ஆசைகளுக்கும் தூண்டுதல்களாக, வடிகால்களாக இருந்திருக்கின்றன.
ஆழ்ந்த அவதானிப்பின் மூலம் வெவ்வேறு விதமான முகங்களை நினைவின் அலமாரிக்குள் அடுக்கிவைத்திருக்கும் ஓர் ஓவியன், தனக்கு உணர்த்தப்படும் சூழலுக்கு ஏற்ற ஒரு முகத்தை, மெலிதாகக் கொய்யப்படும் பூவைப் போல தூரிகையில் ஏந்தித் தர வல்லவன். அப்படியான கலைஞர்களின் தலைமகன் மாருதி. வரையப்படும் உருவம் எந்த இடத்தில், எந்த நேரத்தில், எந்தப் பின்னணியில், என்ன மனநிலையில் இருக்கிறது என்பதை, ஒரு நொடியிலேயே பார்வையாளனுக்குக் கடத்தும் திறன் கொண்டிருந்த மகா கலைஞன் அவர்.
ஏகலைவன்
புதுக்கோட்டையில் பிறந்து, படிப்பில் பிடிப்பில்லாத மாணவனாக வாழ்நாளைக் கடத்திய ரங்கநாதன், பின்னாள்களில் தமிழ் வாசகப் பரப்பை வசீகரித்த ஓவியர் மாருதியாக நிலைபெற்றது, கலை நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்று. ஓவியம்தான் தன் எதிர்காலம் என்பதை முடிவுசெய்துகொண்ட அந்தச் சிறுவன், கண்காட்சி ஓவியராக உருவெடுப்பதைக் காட்டிலும் பத்திரிகைகளுக்கு வரைவது எனத் தீர்மானித்துக்கொண்டது ஒரு தீர்க்கதரிசனம். ஆரம்பத்தில் அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து இரவலாகப் பெற்ற பத்திரிகைகளின் ஓவியங்களைப் படியெடுத்து வரையக் கற்றுக்கொண்ட மாருதி, அவற்றில் இருந்த நுணுக்கங்களைக் கிரகித்துக்கொண்டார்.
சென்னையில் ஒரு சினிமா விளம்பர நிறுவனத்தில் தொடங்கிய அவரது ஓவியப் பயணம், தமிழின் முன்னணி இதழ்களை எழில்மிகு வண்ணக் கலவைகளால் நிரப்பியது. அதிகம் புழக்கத்தில் இல்லாத ஒரு பெயரைப் புனைப்பெயராக வரித்துக்கொண்டு அவர் தொடங்கிய அந்தப் பயணம், அதன் மகத்தான இலக்கை அடைய அயராத பயிற்சிகளையும் விமர்சனங்களையும் தாண்ட வேண்டியிருந்தது. 1959இல் ‘குமுதம்’ இதழில் வரையத் தொடங்கிய மாருதி, ‘சுதேசமித்திரன்’, ‘ஆனந்த விகடன்’, ‘கல்கி’ என்று பிற இதழ்களுக்கும் கதை, தொடர்கதைகளுக்கு வரைந்தார். ஏற்கெனவே புகழ்பெற்றிருந்த வர்ணம், மாதவன் உள்ளிட்ட பல ஓவியர்களின் படைப்புகளைப் பாடமாக ஓர் ஏகலைவனைப் போல உள்வாங்கிச் செரித்துக்கொண்ட அவர், மூத்த ஓவியர் ஆர்.நடராஜனிடம் நேரடியாக ஓவிய நுட்பங்களைக் கற்றுக்கொண்டு தன்னைச் செதுக்கிக்கொண்டார்.
பெண் மைய ஓவியர்
ஓவியக் கலையின் வெவ்வேறு வகைமைகளில் தன் திறனை வளர்த்துக்கொண்ட மாருதி, கால மாற்றத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் தன்னைத் தயார் செய்துகொண்டவர். வரலாற்றுப் பின்னணி கொண்ட கதைகளுக்கு மணியம் செல்வன், க்ரைம் த்ரில்லர் கதைகளுக்கு அரஸ், அந்தரங்கம் பேசும் கதைகளுக்கு ஜெயராஜ் என நீளும் பட்டியலில் பெண்களை மையமாகக் கொண்ட குடும்பக் கதைகளுக்கு மாருதி என்று உறுதியாகச் சொல்லலாம்.‘கண்மணி’ உள்ளிட்ட மாத நாவல்கள், பிரபல வார இதழ்களின் சிறப்பு மலர்கள் என அட்டைப்பட ஓவியங்களும், சிறுகதைகள், கவிதைகளுக்கு அவர் வரைந்த ஓவியங்களும் அதற்கு அத்தாட்சிகள். பெண் எழுத்தாளர்கள் தங்கள் கதைகளுக்கு மாருதி வரைய வேண்டும் எனப் பரிந்துரைக்கும் அளவுக்குப் பெண் மைய ஓவியராக அவர் திகழ்ந்தார்.
இறுதிவரை யதார்த்த பாணி ஓவியராகவே தனது அடையாளத்தைத் தாங்கியிருந்த மாருதி, நல்ல வாசகரும்கூட. கடந்த சில காலமாக ஃபேஸ்புக்கில் தனது புதிய ஓவியங்களைப் பதிவிட்டுவந்தார். ஓவியம் ‘வரைவது’ என்பதை, அந்தக் கால பாணியில் ‘எழுதுவது’ என்றே குறிப்பிடுவார் மாருதி. அவரது கையொப்பமே ஓவியத்தின் ஒரு கூறு போல இருக்கும். அதையும் ஓவியத்துக்குரிய கவனத்துடன் ‘எழுதுவது’ அவரது பாணி. பத்திரிகை ஓவியராகப் புகழ்பெற்றுவிட்ட மாருதியின் ஓவியங்கள், அவர் தன் இளம் வயதில் கணித்ததுபோலவே சாகாவரம் பெற்றுவிட்டன.