

கல்லணையிலிருந்து வங்கக் கடல்வரை காவிரிப் படுகையை நான்கு அங்கணமாக்கினால் திருத்துறைப்பூண்டி மூன்றாவது அங்கணத்தில் இருக்கக்கூடும். அங்கே பரப்பாகரம் கிராமத்தில் தண்ணீர் இல்லாமல் கருகும் தன் குறுவைப் பயிரை ஒரு விவசாயி உழுது அழித்ததாகச் செய்தி (‘இந்து தமிழ் திசை’, 23.07.23) வெளியாகியுள்ளது.
மேட்டூர் திறந்து நாற்பத்தோரு நாள்களில் ஒருமுறை வயலுக்குத் தண்ணீர் வந்ததாம். ஒரு கிராமத்தில் நடந்ததை நான் பொதுவான பிரச்சினை ஆக்குவதாக நினைக்க வேண்டாம். பரப்பாகரம் போன்ற நேரடி விதைப்புப் பகுதிகளில் தண்ணீர் இல்லாவிட்டால் காலத்தோடு களைக்கொல்லி தெளிக்க முடியாது என்பது பெரும் பிரச்சினை. காவிரி, வெண்ணாறு ஒவ்வொன்றிலும் பத்து நாள்களுக்காவது முறை வைக்காமல் தண்ணீர் விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள்.
நிலைத்துவிட்ட சோகம்: இரண்டு சங்கதிகள் தெளிவாகத் தெரிகின்றன: ஆற்றில் வரும் தண்ணீர் பெரும்பாலும் வயலுக்கு எட்டுவதில்லை. ஆற்றின் வயிறு குழிந்து மிகவும் பள்ளமாகிவிட்டது. இது முதல் சங்கதி. முறைப் பாசன ஏற்பாட்டிலும், விடுவிக்கும் தண்ணீரின் அளவிலும் கறாராக இல்லாமல் நிலைமைக்கும் இடத்துக்கும் ஏற்ப அவற்றில் நெகிழ்ச்சி வர வேண்டும். இது இரண்டாவது சங்கதி. ஆனால், அவ்வப்போது இதற்கான தகவல் சேகரிப்பும் முனைப்பான நிர்வாக ஏற்பாடும் எளிதில் பூர்த்தியாகும் தேவைகள் அல்ல.
ஆற்றில் வரத்து அதிகரிக்கும்போதுதான் வாய்க்காலுக்குத் தண்ணீர் ஏறுகிறது என்றால் சிலருக்குப் புரியாது. வாய்க்கால் மட்டத்துக்கும் ஆற்று மட்டத்துக்கும் காலம் காலமாக இருந்த இசைவு கடந்த 40 ஆண்டுகளில் வெகுவாகக் குலைந்துவிட்டது என்று புது மொழியில் சொன்னால் புரியக்கூடும். காவிரிப் படுகையில் இது நிலைத்துவிட்ட சோகம். சில நாட்களுக்கு முன்னர் சுவாமிமலையிலிருந்து ஒரு செய்தி. நாம் முன்பு கூறிய காவிரிப் படுகையின் நான்கு அங்கணங்களில் அந்த ஊர் இரண்டாவது அங்கணத்தில் இருப்பதாகக் கொள்ளலாம்.
300 மீட்டர் தொலைவில் உள்ள காவிரியிலிருந்து சுவாமிநாத சுவாமி கோயில் தெப்பக் குளத்துக்குத் தானாகவே வரும் தண்ணீர், ஆறு பள்ளமாகிவிட்டதால் இப்போது வருவதில்லை. குழாய்கள் பதித்து மின் மோட்டாரால் குளத்துக்குத் தண்ணீர் இறைக்கிறார்கள் (‘இந்து தமிழ் திசை’, 16.07.23). இத்தனைக்கும், வெண்ணாறுபோல் அல்லாமல், காவிரி ஒரு கரை போன்ற மேட்டில் ஓடுவதாகத்தான் புவியியலர்கள் சொல்கிறார்கள்.
நினைத்துப் பார்க்காத நிலைமை: சுவாமிமலை குளம் காவிரியிலிருந்து 300 மீட்டர் தள்ளி இருப்பதுபோல் கிராமங்களில் வாய்க்கால் தலைப்பு இருக்காது. வயல்வெளியிலிருந்து வாய்க்கால் தலைப்பு இரண்டு, மூன்று கி.மீ. தொலைவில் இருக்கும். அந்த இடத்தில்தான் ஆற்றின் நீர் மட்டம் வாய்க்காலுக்கு எட்டுவதாக அமைந்திருக்கும்.
இது இயற்கையாக அமைந்தது. இந்தத் தொலைவைக் கடந்து, பின்னர் வயல்வெளியிலேயே இரண்டு, மூன்று கி.மீ. கடந்து கிராமத்தின் கடைமடைக்குத் தண்ணீர் எட்ட வேண்டும். முறைப் பாசனத்தில் ஆறு நாள்கள் பாய்வதும் அடுத்த ஆறு நாள்கள் காய்வதுமாக இருந்தால் தண்ணீர் இந்தத் தொலைவை எப்படிக் கடக்கும்? சுவாமிமலையில் செய்வதுபோல் அந்தந்தக் கிராமத்துக்கு மோட்டார் வைத்துத் தண்ணீர் இறைக்க இயலாது.
இயலக்கூடிய மாற்று ஏற்பாடாக வாய்க்கால் தலைப்புக்கும் சற்றுக் கீழே சில இடங்களில் படுக்கை அணைகள் உள்ளன. இவை ஆற்றின் நீர் மட்டத்தை உயர்த்தித் தண்ணீரை வாய்க்கால் வாய்க்கு எட்டச் செய்யும். இன்றைய நிலைமையில் ஒவ்வொரு கிராமத்தின் வாய்க்கால் தலைப்பிலும் இப்படிப் படுக்கை அணை கட்ட வேண்டியிருக்கலாம்.
ஆற்றின் நீர் மட்டத்துக்குப் பொருந்தும் இடத்தில் வாய்க்கால் தலைப்பு அமைந்த காலம் கழிந்து, இப்போது அதே இடத்தில் வாய்க்கால் வாய் மட்டத்துக்கு ஆற்றின் நீர் மட்டத்தைச் செயற்கையாக உயர்த்த வேண்டியுள்ளது. ஆக, காவிரியின் கிளைகள் எல்லாமே பள்ளமாகி பாசனத் திறனை வேகமாக இழந்துவருகின்றன.
ஆறுகள் ஏன் பள்ளமாகின்றன என்று ஒரு செய்தியாளர் கேட்டார். பொருளாதார வளர்ச்சி வேகத்தில், கட்டுமானப் பெருக்கத்தின் மணல் தேவையை அவை பூர்த்திசெய்வதால் என்று குறிப்பாகச் சொன்னேன். காவிரிப் படுகை ஆறுகளுக்கும் வளர்ச்சிக்கும் தண்ணீர் மூலம் மறைமுகமாக அல்லாமல், இப்படி ஒரு நேரடித் தொடர்பு உருவாகும் என்று அப்போது நினைத்திருக்கவில்லை.
பாசனம் எங்கே தொடங்குகிறது? - காவிரிப் படுகையில் எங்கள் கிராமத்தின் பாசனம் எங்கே தொடங்குகிறது? காலனிய ஆட்சிக்கு முன்னால் கேட்டிருந்தால் அது எங்கள் ஊர் வாய்க்கால் தலைப்பில்தான் என்று சொல்லியிருப்பேன். அப்போது ஆற்றில் தண்ணீர் வந்தால், அது தன்னாலேயே வாய்க்காலிலும் வரும். காலனிய ஆட்சிக் காலத்தில் அது கல்லணையில் தொடங்கியது என்று சொல்வது சரியாக இருந்திருக்கும். இப்போது அது மேட்டூரில் தொடங்குகிறது என்பது பொருத்தமாக இருக்கலாம். இல்லை, எங்கள் கிராமத்தின் பாசனம் கர்நாடக அணைகளில் தொடங்குகிறது என்று சொல்வதுகூடப் பொருந்தும் என்பது துயரமே.
நீர்த்தேக்கம் என்று வந்த பிறகு அசலான ஆற்றுப் பாசனம், ஏரிப் பாசன மாதிரிக்கு மாறிக்கொண்டது. வரத்து நீரைச் சேமித்து, வேண்டும்போது வேண்டிய அளவுக்கு விடுவிக்கிறோம். மறுகால் பாயும் ஏரி போலவே ஒரு அணையிலிருந்து அடுத்த அணைக்குத் தண்ணீர் வருகிறது. இது வளர்ச்சிப் பண்பாட்டின் அங்கம். ஆறு பள்ளமானது நிரந்தரப் பிரச்சினை என்றால், முறைப் பாசனமும் நீர் விடுவிப்பு அளவும் அதைத் தீவிரப்படுத்துகின்றன. ஆற்று மட்டத்துக்கும், வாய்க்கால் தலைப்புக்கும் முன்பு இருந்த இசைவை இன்று மீட்க இயலாது.
காவிரிப் படுகையின் புவியியல் அமைப்பை காவிரியின் இயற்கையான போக்கு தீர்மானித்த காலம் இனி மீளுமா? ஒரு தீர்வாக சாகுபடி முறை, பயிர் வகை, பயிரிடும் பருவம், பாசன முறை என்று தெரிந்த வகைகளில் முயன்று முயற்சியின் எல்லைக்கே வந்துவிட்டோம். இனி நாம் செய்யக்கூடியது காவிரிக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு பற்றிய சிந்தனைக் கலாச்சாரத்தில் மாற்றம்தான். காவிரி ஓடுகால் அல்ல, ஆறு என்பதை மறந்துவிடக் கூடாது, இல்லையா!
- தொடர்புக்கு: profjayaraman@gmail.com