

உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளிலிருந்து ஒருவர் தப்ப முடியாது என்பதையே நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தீவிர வானிலை நிகழ்வுகள் (extreme weather events) உணர்த்துகின்றன. சீனாவில் வெள்ளம், அமெரிக்காவில் புயல், ஆப்ரிக்காவில் வறட்சி என நாளிதழ்களின் மூலையில் இடம்பெற்ற, நாம் எளிதாகக் கடந்துபோய்க்கொண்டிருந்த செய்திகள் இன்றைக்குத் தலைப்புச் செய்திகளாக மாறியிருக்கின்றன.
காலநிலை மாற்றம் சார்ந்த செய்தி வழங்கலில், சமீப காலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றமும் மேம்பாடும், ஊடகங்கள் இந்நிலையின் தீவிரத்தை உணரத் தொடங்கிவிட்டன என்பதையே உணர்த்துகின்றன.
மிகப் பெரிய வாசகப் பரப்பைக் கொண்டி ருக்கும் மேற்குலகின் செல்வாக்கு மிக்க ஆங்கில ஊடகங்களும் காலநிலை மாற்றம்
சார்ந்த அர்த்தபூர்வமான உரை யாடலை முன்னெடுக்கும் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது, ஒரு வரவேற் கத்தகுந்த முன்னெடுப்பு. காலநிலை மாற்றம் சார்ந்த தனிச் சிறப்பிதழ்களைச் சமீபத்திய ஆண்டுகளில் அவை வெளியிடத் தொடங்கி யிருக்கின்றன; ‘தி எகானமிஸ்ட்’ வெளியிட்ட காலநிலைச் சிறப்பிதழ் (19.09.2019) ஓர் அபூர்வ நிகழ்வு.
அதே போல, ‘நியூ யார்க்கர்’ இதழ், ஒவ்வொரு வாரமும் அதன் அட்டைப் படத்துக் காகவே கவனிக்கப்படுகிறது. சுற்றுச்சுழல் பாதுகாப்பில் உலகளாவிய கரிசனத்தை ஏற்படுத்திய ரேச்சல் கார்சனின் ‘Silent Spring’, முதலில் ‘நியூ யார்க்க’ரில்தான் (1962) தொடராக வெளிவந்தது. அன்று தொடங்கி இன்றுவரை சூழலியல்-காலநிலை மாற்றம் சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆக்கங்களை அந்த இதழ் வெளியிட்டுவருகிறது. அந்த வகையில், ஓவியர்-வரைகலைஞரான கிறிஸ்டோஃப் நீய்மான் வரைந்திருக்கும் ‘நியூ யார்க்க’ரின் இந்த வார இதழின் அட்டை, காலநிலை நிகழ்வுகளின் பின்னணியில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தப் பின்னணியில், காலநிலை மாற்றம் என்றில்லாமல் பொதுவாக வானிலை நிகழ்வுகளை முன்னணித் தமிழ் ஊடகங்கள் எப்படிச் செய்தியாக்குகின்றன என்பது ஆய்வுக்குரியது; சமீபத்திய உதாரணம் ஒன்று அதைத் துலக்கப்படுத்துகிறது: ‘சென்னை உள்பட 8 மாவட்டங்களில் நாளை பொளந்து கட்டப்போகும் கனமழை’. காலநிலை மாற்றத்தின் காலத்தில் தமிழ் ஊடகங்கள் பயணிக்கத் தீர்மானித்திருக்கும் திசை இதுதானா?