தமிழ்நாடு: மாவட்டங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகள்

தமிழ்நாடு: மாவட்டங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகள்
Updated on
1 min read

பல்வேறு சமூக, பொருளாதாரக் குறியீடுகளில் இந்தியாவின் பிற மாநிலங் களைவிட தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. பள்ளிக்குச் சென்ற பெண்களின் பங்கு, குறைவான குழந்தை இறப்பு விகிதம், வளர்ச்சி குன்றிய குழந்தைகள் குறைவாக இருப்பது ஆகிய அளவுகோல்களில் நாட்டின்சிறந்த மூன்று மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகத் திகழ்கிறது. உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் விகிதத்தில் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது.

அதே நேரம், தமிழ்நாட்டின் மாவட்டங்கள் குறித்த தரவுகள், இந்த வளர்ச்சி, மாநிலத்தின் சில பகுதிகளில் மட்டும்தான் நிகழ்ந்திருப்பதாகக் கருதவைக்கின்றன. பல்வேறு சமூக, பொருளாதாரக் குறியீடுகளில் (பெருநகரங்கள், அதிவேக நகர்மயம் ஆகியவற்றை உள்ளடக்கிய) சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி போன்ற முன்னேறிய மாவட்டங்களுக்கும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி நிலவுகிறது.

சென்னையில் 98% வீடுகளில் சுத்தமான எரிபொருள் (Clean fuel)(மின்சாரம், சமையல் எரிவாயு உள்ளிட்டவை) பயன்படுத்தப்படுகிறது. புதுக் கோட்டையில் 42%; கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய மேற்கு மாவட்டங்களிலும் 95%க்கு மேற்பட்ட வீடுகளில் சுத்தமான எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய தெற்கு/கிழக்குக் கடலோரமாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் இந்த விகிதம் 60%க்குக் குறைவாகவே உள்ளது.

மேம்பட்ட துப்புரவு (Improved sanitation) வசதிகளைப் பயன்படுத்தும் வீடுகளின் விகிதம் கன்னியாகுமரியில் 96.2%ஆக இருக்க, விழுப்புரத்திலோ 53.8%ஆக உள்ளது. அரியலூர், பெரம்பலூர், கரூர், சேலம், திருச்சி ஆகிய மத்திய மாவட்டங்களிலும் விருதுநகர், திண்டுக்கல் ஆகிய தென்மேற்கு மாவட்டங்களிலும் 70%க்கும் குறைவான வீடுகளில் மட்டுமே துப்புரவு வசதிகள் பயன்படுத்தப்படுகின்றன.

வளர்ச்சி குன்றிய (stunted) அல்லது வயதுக்கேற்ற வளர்ச்சியடையாத குழந்தைகளின் விகிதம் கரூரில் 33.6%; திருவள்ளூரில் 18%. சென்னை, காஞ்சிபுரம்,கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் இந்தஅளவுகோலில் நல்ல நிலையில் உள்ளன(கிட்டத்தட்ட 20% அல்லது அதற்கும் குறைவு). வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய வட மாவட்டங்களில் 28%க்கு அதிகமான குழந்தைகள் வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளனர்.

20-24 வயதுப் பெண்களில், பதின்பருவத்திலேயே திருமணம் செய்துவைக்கப்பட்டவர்களின் விகிதம் சேலம், பெரம்பலூர் மாவட்டங்களில் 21%;சென்னையில் 1.9%. தூத்துக்குடி,தென்காசி, திருநெல்வேலி ஆகிய தென்மாவட்டங்களில் கணினி இருக்கும் பள்ளிகளின் விகிதம் 65%; சென்னையிலும்விழுப்புரத்திலும் இது கிட்டத்தட்ட 90%.

உடல்நலம், கல்வி, வாழ்க்கைத் தரம் சார்ந்த வசதிகள் கிடைக்காமல் இருப்பவர்களைக் கணக்கிடுவதற்கான பல்பரிமாண வறுமைக் குறியீட்டில் (Multidimensional Poverty Index) சென்னையும் கன்னியாகுமரியும் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளன; புதுக்கோட்டை மிகவும் பின்தங்கியுள்ளது.

மாவட்ட மொத்த உற்பத்தியில் வட கடலோர மாவட்டங்கள் முன்னிலை வகிக்கின்றன. தெற்கு/கிழக்கு கடலோர மாவட்டங்கள் பின்தங்கியுள்ளன.

நன்றி: ‘தி இந்து’ ஆங்கிலம் - டேட்டா பாயின்ட்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in