Published : 29 Jul 2014 12:00 AM
Last Updated : 29 Jul 2014 12:00 AM

வந்தேறிகளால் வந்த கேடு

ஒரு பகுதியில் புதிதாக அறிமுகப்படுத்தும் உயிரினத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் என்னென்ன?

எல்லா நாடுகளிலும் அயல்நாட்டினர் வந்து குடியேறுவது காலங்காலமாக நடந்துவருவதே. அதனால் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. எந்தவொரு நாட்டிலும் சுத்த சுதேசிகள் மட்டுமே இருப்பது தற்காலத்தில் சாத்தியமில்லை. இது மனிதர்களுக்கு மட்டுமின்றி, வேறு பல உயிரினங்களுக்கும் பொருந்தும். நாடுவிட்டு நாடு செல்லும் ஆய்வாளர்களும் பயணிகளும் குடியேறிகளும் மாலுமிகளும் அறிந்தும் அறியாமலும் தமது சொந்த ஊரிலிருந்து உயிரினங்களை எடுத்துவந்து புது இடங்களில் குடியேற்றிவிடுகிறார்கள். கோதுமை, தேயிலை போன்ற நன்மைதரும் பயிர்களும், வேலிகாத்தான், ஆகாயத் தாமரை, பார்த்தீனியம் போன்ற கேடு செய்யும் பயிர்களும் இவ்வாறே உலகெங்கிலும் பரவின.

ஆஸ்திரேலியாவில் குடியேற முனைந்த விதேசிகள் உணவுக்காக முயல்களை எடுத்துவந்து வளர்த்தார்கள். அங்கு அவை கட்டுக்கடங்காமல் பெருகி, நிலத்தில் ஒரு செடிகொடி இல்லாமல் தின்று தீர்த்துவிட்டன. இறுதியில், மிக்சோமடாசிஸ் என்ற நோயை உண்டாக்கி, முயல்களின் பெருக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள்.

இப்போதெல்லாம் அரசுகள் விழிப்பாக உள்ளன. நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதிக்காது என்று உறுதி செய்துகொண்ட பின்னரே, விதேசிப் பிராணிகள் அனுமதிக்

கப்படுகின்றன. அதே போலத் தமது நாட்டின் தனித்துவமான பிராணிகளை ஏற்றுமதி செய் வதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை அரசுகள் விதிக்கின்றன. ஆஸ்திரேலியா, தனது நாட்டின் தனி அடையாளமான கங்காரு, கோலா கரடி, பிளாடிபஸ் போன்ற விலங்குகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்குத் தடைவிதித்துள்ளது. இந்தியாவும் நட்சத்திர ஆமை போன்ற அழிந்துவரும் பிராணிகளின் ஏற்றுமதியைத் தடைசெய்திருக்கிறது.

கண்காணாத் தீவுகளிலும்…

கண்காணாத் தீவுகளாக இருந்தவற்றில் நவீனப் போக்குவரத்து வசதிகள் மூலம் குடியேற்றங்கள் ஏற்பட்டபோது, கால்நடைகளும் குடியேற்றப்பட்டதற்கு உணவுத் தேவை ஒரு காரணம். தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படும் உள்ளூர் உயிரினங்களை ஒழிக்கவும் சிலவகை உயிரினங்கள் நுழைக்கப்பட்டு, எதிர்பாராத தீங்குகள் அவற்றாலும் விளைந்திருக்கின்றன. பல தீவுகளில் ஆடுகளை அறிமுகப்படுத்தியபோது அவை அங்கிருந்த செடிகொடிகளையெல்லாம் தின்றுதீர்த்து, சுதேசிப் பிராணிகளுக்கு உணவு கிடைக்காமல் செய்திருக்

கின்றன. கலபாகோஸ் தீவுகளிலும் செய்ஷல் தீவுகளிலும் வசித்த ராட்சச ஆமைகளும் இகுவானாக்களும் பூண்டற் றுப்போனதற்கு ஆடுகளே காரணம்.

எட்டாக்கையான தீவுகளுக்கும் எலிகள் அழையாத விருந்தாளிகளாகக் கப்பல்களில் ஏறிவந்துவிடும். அவை, பல்கிப்பெருகிச் செய்யும் அட்டகாசங்களைப் பொறுக்காமல் அடுத்து வருகிறவர்கள் பூனைகளைக் கொண்டுவந்து விட்டார்கள். அந்தப் பூனைகள் எலிகளை விட்டுவிட்டு, உள்ளூர்ப் பறவைகளைப் பிடித்துத் தின்னத் தொடங்கின. பறக்கும் திறனற்ற டோடோ போன்ற பறவைகள் முற்றாக அழிந்துபோகப் பூனைகளும் ஒரு காரணம்.

துருவங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

ஒரு காலத்தில் நில ஆய்வர்களும், கடல்நாய்கள் (ஸீல்) மற்றும் திமிங்கிலங்களை வேட்டையாடுகிறவர்களும் மட்டுமே வந்துபோய்க்கொண்டிருந்த அண்டார்க்டிகாவின் தீவுகள் இன்று அறிவியல் ஆய்வுக்காகப் பலரும் செல்கிற இடங்களாகிவிட்டன. அங்கு நிலவும் கடும் குளிரும் பனிப்புயல்களும் பெருமளவிலான குடியேற்

றங்களுக்கு உகந்ததாக இல்லை. அதன் காரணமாக அதன் சுற்றுச்சூழலும் குலைக்கப்படாமல் இருக் கிறது. அனைத்து நாடுகளும் அப்பகுதியை அறி வியல் ஆய்வுகளுக்கு மட்டுமே பயன்படுத்துவது என்றும் கனிவளத் தேட்டைக்கோ காலனிகளை அமைக்கவோ முனைவதில்லை என்றும் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கின்றன.

அங்கு மிகச் சில சிற்றினங்களே வாழ்கின்றன. எல்லாத் தீவுகளுமாகச் சேர்த்து 72 சிற்றினங்களைச் சேர்ந்த பெரணிகள், பாசிகள் போன்ற பூக்காத தாவரங்கள் மட்டுமே உண்டு. வண்டுகளைவிடப் பெரிய தாவர உண்ணிகள் ஏதுமில்லை. எல்லாத் தீவுகளிலும் கடல்நாய், பென்குவின், கடல் பறவைகள் ஆகியவை பெரும் எண்ணிக்கையில் உள்ளன. அங்கும் சில விதேசி உயிரினங்கள் நுழைந்துள்ளன. அங்குள்ள சுற்றுச்சூழல் அமைப்பு மிகவும் மென்மையானதும் எளியதும் பலவீனமானதுமாகும். அதை அயல் நாட்டினங்கள் எளிதாகச் சீர்குலைத்துவிட முடியும். நல்ல

வேளையாக அறிவியலார் அப்பகுதியின் முக்கியத் துவத்தைப் புரிந்துகொண்டுவிட்டனர். தென்துருவ அறிவியல் ஆய்வுக்குழு, இயற்கைப் பாதுகாப்புக்கான அனைத்து நாட்டுக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் தென் துருவத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேற்

பார்வையிடுகின்றன.

அப்பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட அயலக உயிரினங்கள் பல அங்கு நிலவும் கடுமையான சூழலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்துள்ளன. எனினும் முயல், எலி, பூனை, கலைமான் (ரெயின்டீர்) ஆகிய இனங்களால் அங்கு தப்பிப் பிழைக்க முடிந்திருக்கிறது. அவற்றின் வாழ்வு உத்திகளைப் பரிசீலித்த பின் அயலக உயிரினங்களை முற்றாயொழிக்க முயலுவதைவிட வேறு தக்க சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை ஏற்பாடு செய்வதே புத்திசாலித்தனம் என்பது தெளிவாயிருக்கிறது.

தாவரவியல் வல்லுநர்கள் தாவரங்களைப் பாதுகாப் பதிலும் பறவையியல் நிபுணர்கள் பறவைகளைப் பாதுகாப்பதிலும் மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள். வந்தேறிகளுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று சிலர் வாதிடுகிறார்கள். ஓர் அயலக உயிரினத்தை என்ன செய்வது என்று முடிவெடுக்கிறபோது, அது உள்ளூரில் மட்டுமே காணப்படும், உலகில் வேறெங்கும் இல்லாத சிறப்பினங்களை முற்றாக அழித்துவிடக்கூடிய சாத்தியக்கூறு உள்ளதா இல்லையா என்பதை முழுமையாக ஆராய வேண்டும். உள்ளூர் இனங்களில் கணிசமான அளவைப் பாதுகாக்கிற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அயலகச் சிற்றினங்களின் உணவுப் பழக்கங்களும் அவற்றின் எண்ணிக்கை எட்டியுள்ள கட்டமும் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய காரணிகள்.

அண்டார்க்டிகாவின் எல்லாத் தீவுகளிலும் கருப்பு நிற எலிகள் பரவியுள்ளன. தெற்கு ஜார்ஜியா தீவில் மட்டும் பழுப்பு நிற எலிகள் உள்ளன. மக்வாரி தீவின் எலிகள் சைவம். பழுப்பு நிற எலிகள் பெட்ரல் குஞ்சுகளையும் தின்றுவிடுகின்றன. எலிகளை முழுமையாக ஒழிப்பது அசாத்தியம். இதுவரை எலிகள் வராமல் இருக்கும் தீவுகளுக்கு அவை வந்துவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மட்டுமே தீவிரமாக்கப்பட்டுள்ளன.

1911-ம் ஆண்டில் நார்வே நாட்டுத் திமிங்கில வேட்டைக்காரர்கள் தெற்கு ஜார்ஜியா தீவில் கலை

மான்களை அறிமுகப்படுத்தினார்கள். 1956-ல் பிரான்ஸ்காரர்கள் கெர்க்கூலன் தீவுகளில் கலை மான்களைப் புகுத்தினார்கள். அங்கிருந்த பல தாவரங்களை அவை தின்று அழித்துவிட்டன. பெரும் முயற்சிகளுக்குப் பின் அந்தத் தாவர இனங்களை மீண்டும் உயிர்ப்பித்தார்கள். எனினும், முதலில் இருந்தது போன்ற தாவரப் பன்மைத் தன்மையை மீட்டுவர முடியவில்லை. கலைமான்கள் பெட்ரல்களுக்கு விந்தையான வகையில் உதவி செய்கின்றன. பெட்ரல்கள் புல்புதர் அடர்ந்த தரையில் கூடுகட்டும்போது, எலிகள் புல் மறைவில் நடமாடி பெட்ரல் பறவையின் முட்டை களையும் குஞ்சுகளையும் தின்றுவந்தன. கலைமான்கள் புல்லை மேய்ந்துவிட்டதால் எலிகளுக்கு மறைவிடம் இல்லாமல் போனது. பெட்ரல்களும் எலிகளைக் கண்டால் துரத்தியடிக்கத் தொடங்கின.

காடு யாருடையது?

இந்தியாவிலும் காடுகளை ஒட்டிய பகுதிகளில் ஆடு, மாடுகளை வளர்ப்பதால் காடு அழிக்கப்படுகிறது. காட்டு விலங்குகள் ஆடு, மாடுகளை வேட்டையாடுவதற்காகக் குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்துவிடுகின்றன. ஓரிடத்தில் அயலக உயிரினங்களை அறிமுகப்படுத்தும்போது பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதன் பிறகு அவற்றை முற்றிலுமாக அழித்தால் மேலும் புதிய பிரச்சினைகள் தோன்றும்.

காடுகளைப் பொறுத்தவரை நம்மைப் போன்ற மனிதர்களும் அந்நிய உயிரினங்கள்தான். காடுகள் விலங்குகளுக்கும், காட்டில் வசிக்கும் பழங்குடியி னருக்கும் மட்டுமே சொந்தம். அவற்றில் வெளிமனிதர்கள் ஆக்கிரமிப்புச் செய்யும்போது மோதல்கள் ஏற்படு கின்றன. காட்டில் வசிக்கும் பழங்குடியினத்தவர் தமது எல்லைகளை நன்கு அறிந்துவைத்திருந்தனர். தப்பித் தவறி காட்டு விலங்கு ஒன்று தம்மில் ஒருவரைத் தாக்கிக் கொன்றுவிட்டால்கூட அதைப் பெரிது படுத்தாமல் விட்டுவிடுவார்கள். ஆனால், இன்று ஒரு சிறுத்தையோ கரடியோ கிராமத்தின் ஓரத்தில் தென்பட்டாலும் மக்கள் காவல் துறையினரையும் வனத் துறைக் காவலர்களையும் அழைத்து அந்த விலங்கைப் பிடித்துக் கொல்லவோ, வேறு காட்டுப் பகுதியில் கொண்டுவிடவோ கட்டாயப்படுத்திவிடுகிறார்கள். அரசும் லாப நஷ்டங்களை அறிவியல்ரீதியில் சீர்தூக்கிப் பார்த்துக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையோ ஒழிப்பு நடவடிக்கைகளையோ எடுக்க வேண்டியிருக்கிறது.

- கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு).

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x