எழுத்தாளர் ஆனேன்: எஸ்.செந்தில்குமார் | புனைவும் நிஜமும்

எழுத்தாளர் ஆனேன்: எஸ்.செந்தில்குமார் | புனைவும் நிஜமும்
Updated on
2 min read

கதை, மடக்குவிசிறி போன்றது. ஒன்றினுள் ஒன்று மறைந்திருக்கும். பார்வைக்கு ஒன்றாக வும் வாசிக்க வாசிக்க விரியும் தன்மையில் பலவாகவும் மாறிவிடும் சாத்தியத்தைக் கதையில் கதாசிரியனாக உருவாக்க முயன்ற கதை, ‘மைக்கேல் சகோதரர்களின் இரட்டைப் பேனா’. இது என்னுடைய முதல் சிறுகதை. காலத்தை ஆச்சரியங்களாலும் மாயங்களாலும் கடந்துபோகச் செய்யும் வித்தையைக் கதையில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் நிறைந்திருந்த வேளை அது.

மதுரை, டவுன்ஹால் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ஆகிய பகுதிகளில் வெளிநாட்டினர் குறிப்பாக வெள்ளையர்கள் குடும்பம் குடும்பமாக ‘மதர’க்காரர்களைப் போல நடமாடிக்கொண்டிருப்பதைத் தினமும் பார்க்கும் சூழல் இருந்தது. வெள்ளைப் பெண், அல்வா கடை வாசலில் அமர்ந்திருக்கும் பூக்கார அக்காவிடம் மல்லிகைப் பூ வாங்கித் தலையில் சூடி, அவளும் மதரக்காரப் பெண்ணாக நடந்துபோவாள்.

இந்தியா சுதந்திரம் அடைந்து இன்னமும் நூறாண்டைக் கடக்கவில்லை. ஆங்கிலேயர் எவற்றைத் தேடி இந்தியாவுக்கு வந்தார்கள்; அலைந்தார்கள்; எதைக் கண்டடைந்து தங்களது நாட்டுக்குச் சென்றார்கள் என்று தெரியவில்லை. இங்கிலாந்திலிருந்து கனவுகளுடன் இந்தியாவுக்கு வந்த மூதாதையர்கள் வாழ்ந்த நிலத்தை அவர்கள் ஏக்கத்துடனும் வேதனையுடனும் காண்பதை உணரத் தவறுகிறோம் என்று எனக்குத் தோன்றும். டபிள்யூ.ஜேக் மைக்கேலும் டபிள்யூ.ஜான் மைக்கேலும் டவுன் ஹாலுக்குள் நள்ளிரவு நேரத்தில் இரட்டைப் போனாக்களுடன் நுழைகிறார்கள். ஒரே மாதிரியான முகமும் தோற்றமும் கொண்டவர்களிடம் இரட்டைப் பேனா இருக்கிறது. இரட்டையர்கள் இல்லாதவர்களால் அதை வைத்து எழுத முடியாது.

ஞாயிற்றுக்கிழமை டவுன்ஹால் அதிசயங்களால் நிறைந்திருக்கும். வெயில், மழை, காற்று எதுவும் அதிசயங்களைத் தடுத்து நிறுத்தியதில்லை. டிராஃபிக் கான்ஸ்டபிள்களும் அந்த அதிசயங்களுக்குக் கட்டுப்பட்டுக் கைகளைத் தங்களுடைய பேன்ட் பாக்கெட்டில் நுழைத்துக்கொண்டு நிற்பார்கள். சாலையின் இரண்டு புறமும் வியாபாரிகள் அதிசயங்களைக் கொட்டிவிட்டு சாதாரணமாகப் புகைத்துக்கொண்டிருப்பார்கள்.
அவ்விடத்தில்தான் பேனா பழுது பார்த்துத் தரும் முத்தழகுவைச் சந்தித்தேன். பேனாவும் மனிதனைப் போன்ற உடலைக் கொண்டது. மனிதனின் உடலில் எங்கு தொட்டால் உணர்வு வருகிறதோ அதேபோல் எழுதாத பேனாவில் எங்கேனும் ஓர் இடத்தில் அதன் உணர்ச்சிகள் சூட்சுமமாக மறைந்திருக்கும். அந்த இடத்தினைப் பிடித்து எழுதினாலே போதும்.. எழுதத் தொடங்கிவிடும் என்றார் பேனா பழுதுபார்த்துக்கொண்டிருந்தவர். அவருடன் டபிள்யூ.ஜேக் மைக்கேலையும் டபிள்யூ.ஜான் மைக்கேலையும் கூடவே ‘ஹிஸ்டரி ஆஃப் பென்ஸ்’ என்கிற புத்தகத்தையும் சேர்த்துக்கொண்டேன்.

இரட்டைப் பேனா ஒருவரிடமிருந்து ஒருவருக்கு மாறிமாறி பயணம் மேற்கொள்கிறது. இரட்டைப் பேனாவை இரட்டையர்களால் மட்டுமே எழுத முடியும் என்பதை முத்தழகு கண்டுபிடித்து மைக்கேல் சகோதரர்களுக்குச் சொல்கிறார். அதிசயங்கள் டவுன்ஹாலுக்குள் வெயிலும் நிழலுமாக புனைவும் நிஜமுமாக இரண்டு புறமும் நின்றிருக்கிறது.

இந்தக் கதைக்குள் வர முடியாத கதாபாத்திரங்களை ‘உலகின் கடைசி வீட்டோருக்கான கடிதம்’, ‘பகலில் மறையும் வீடு’ ஆகிய கதைகளுக்குள் அழைத்து வர முடிந்தது. சிறுகதை மதிப்புரையாளர்கள் எதற்காகக் கதை எழுதுகிறீர்கள் என்று என்னிடம் கேட்டால், ‘புனைவும் சரித்திரமும் வேறுவேறல்ல. புனைவின் முதுகில் ஒட்டியிருக்கும் சரித்திரத்தையும் சரித்திரத்தின் மார்பில் புதைந்திருக்கும் புனைவையும் எழுதுவதற்காக’ என்று நிச்சயமாகச் சொல்வேன்.

கவிஞர் ஸ்ரீஷங்கர் சிறுபத்திரிகை ஒன்றைத் தொடங்க உள்ளதாகவும், அதற்குக் கதை வேண்டுமெனக் கேட்டதற்காக 2006ஆம் ஆண்டு இக்கதையை எழுதினேன். ஷங்கர் பத்திரிகை கொண்டுவர இயலாத சூழலில் கதையை எழுத்தாளர் ஜீ.முருகனுக்கு அனுப்ப, அவருடைய ‘வனம்’ இதழில் பிரசுரமானது. என்னுடைய முதல் கதை ‘வன’த்தில் பிரசுரமானது. 

- எழுத்தாளர்
தொடர்புக்கு: ssenthilkumar.writter@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in