

கவிமணி தன் இறுதிக் காலத்தில் அவருக்கு மாணவராக, உதவி யாளராக அணுக்கத் தொண்டராக இருந்த சதாசிவத்திடம் தன் கையெழுத்துப் பிரதிகளையும் சங்க நூல்களின் ஆரம்பகாலப் பதிப்புகள் சிலவற்றையும் கொடுத்திருக்கிறார். சதாசிவம் எண்பதுகளின் ஆரம்பத்தில் கவிமணியின் கையெழுத்துப் பிரதிகளையும் மிகப் பழைய நூல்கள் சிலவற்றையும் எனக்குத் தந்தார்.
இருபதாம் நூற்றாண்டு மரபுவழிக் கவிஞர்களில் பாரதி, பாரதிதாசன், கவிமணி ஆகிய மூன்று பேரையும் கூறுவது ஒரு மரபு. இவர்களில் கவிமணி என்னும் பெயரைப் பெற்ற தேசிக விநாயகம் (1876 ஜூலை 27-1954 செப்டம்பர் 26) தரமான மொழிபெயர்ப்பாளர் (உமர் கய்யாம் பாடல்கள்), கல்வெட்டு ஆய்வாளர், கதைப் பாடல்கள் சேகரிப்பாளர், ஆங்கிலத்தில் 16க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர், பழைய ஆவணங்களை ஆராய்ந்து வெளிப்படுத்தியவர் இப்படியான இவரின் பன்முகத்தை இந்தத் தலைமுறையினர் அறிந்திருக்கமாட்டார்கள்.
1897 முதல் எழுதப்பட்டவை: எனக்குக் கிடைத்த கையெழுத்துப் பிரதிகளின் 1,200 பக்கங்களில் பெரும்பாலானவை 1897-1910-க்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை. உத்தேசமாக 120 ஆண்டுகள் ஆன பின்பும் ஓரளவு சிரமப்பட்டு இவற்றைப் படிக்க முடிகிறது. 1940-க்குப் பின் கவிமணி சொல்ல, சதாசிவம் எழுதிய சில பாடல்களும் கட்டுரைகளும் தெளிவாக உள்ளன.
கவிமணி படித்த பழம் இலக்கிய, இலக்கண நூல்களின் குறிப்புகள் எல்லாம் விரவிக் கலந்து கிடக்கின்றன. தனியாக இவற்றை முறைப்படி தொகுப்பது சிரமமான காரியம். குறிப்பாக, கல்வெட்டு கள் பற்றிய செய்திகள் கலந்து வருகின்றன. இப்படி யாகக் கல்வெட்டு குறித்து அவர் எடுத்த பல குறிப்புகள், கையெழுத்துப் பிரதிகளில் உள்ளன. இவை1920-க்கு முற்பட்டவை என்று தெரிகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் கோபுர வாசலில் உள்ள ஒரு கல்வெட்டை நேரடியாகப் பார்த்துப் படியெடுத்து இருக்கிறார். இது பற்றி ‘பூதல வீர ராமவர்மாவின் சுசீந்திரம் கல்வெட்டு’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதியிருக்கிறார். இது பற்றிய செய்திகள் கையெழுத்துப் பிரதியில் உள்ளன. ஆனால், இந்தக் கட்டுரை வெளியான விவரம் கிடைக்கவில்லை.
நாஞ்சில் நாட்டு இரவிபுதூர், காடன் குளம் என்னும் குளத்தின் மடையில் உள்ள கல்வெட்டு ஒன்றை நேரடியாகச் சென்று படியெடுத்திருக்கிறார். இதன் அடிப்படையில் ‘பன்னிரண்டாம் நூற்றாண்டு மலையாள அரசி’ என்னும் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இது ‘மலையாள மனோரமா’ இதழில் (1938, ஆகஸ்ட் 2) வெளியாகியிருக்கிறது. இக்கல்வெட்டு பற்றிய குறிப்பு கையெழுத்துப் பகுதியில் உள்ளது. ஆனால், அந்தக் கட்டுரை கிடைக்கவில்லை.
கையெழுத்துப் பிரதியில் ரங்கம், திருவாரூர், வேலூர், திருக்குறுங்குடி, வர்க்கலை, விசாகப்பட்டினம் போன்ற ஊர்களில் உள்ள கல்வெட்டுகளைப் பிரதி செய்து வைத்திருக்கிறார். இவை ஏற்கெனவே அச்சில் வந்தவை. இந்தக் கல்வெட்டுகளின் பதிப்பாசிரியர்கள் குறிப்பிடும் செய்திகளின் தவறுகளைக் குறிப்பாக எழுதி வைத்திருக்கிறார்.
ஏடுகளிலிருந்து பிரதி செய்தவை: கவிமணி தன் காலத்துத் தமிழ் அறிஞர்களைப் போலவே இலக்கிய ஏடுகளைச் சேகரித்து வந்துள்ளார். அவற்றைப் புத்தகமாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. சில ஏடுகளை மு.ராகவையங்கார், வையாபுரிப் பிள்ளை எனச் சிலரிடம் கொடுத்திருக்கிறார்.
கவிமணிக்குச் செவ்வியல் இலக்கியங்களைச் சேகரிப்பதைவிடக் கதைப் பாடல்களைச் சேகரிப்பதில் பெருவிருப்பம் இருந்துள்ளது. ‘திவான் வெற்றி’ என்கிற கதைப் பாடலைச் சேகரித்துப் பிரதி செய்து வைத்திருக்கிறார். இதன் அடிப்படையில், ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். திப்பு சுல்தான் திருவிதாங்கூரின் மீது படையெடுத்த நிகழ்ச்சி பற்றியது, இந்தக் கதைப் பாடல்.
‘ராம கீர்த்தனம்’ என்னும் வில்லுப்பாட்டு ஏட்டைத் திருவனந்தபுரம் தமிழ் ஆசிரியர் ஒருவரிடம் பெற்றிருக்கிறார். இந்த ராமாயணம் வால்மீகி ராமாயணத்திலிருந்து சற்று வேறுபட்டது. இந்த ஏட்டைச் சதாசிவத்தைக் கொண்டு பிரதி செய்து வைத்திருக்கிறார். இதை ‘ராமகீர்த்தனம்’ என்னும் தலைப்பில் நான் பதிப்பித்திருக்கிறேன் (செண்பகா பதிப்பகம்).
முதலியார் ஓலைகள்: கவிமணியின் கையெழுத்துப் பிரதிகளில் மிக முக்கியமானது முதலியார் ஓலைகள். நாஞ்சில் நாட்டு நிர்வாக வரலாறு குறித்து
1200-1810 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை. இந்த ஆவணங்கள் நாஞ்சில் நாட்டு நிர்வாகத் தலைவராக இருந்த அழகிய பாண்டியபுரம் முதலியார் வீட்டில் இருந்த 600 ஓலைச்சுவடிகளைத் திருவிதாங்கூர் தொல்லியல் துறைக்குக் கவிமணி வாங்கிக் கொடுத்திருக்கிறார். இவற்றில் 170 ஆவணங்களைப் பிரதி செய்திருக்கிறார். இந்த ஆவணங்கள் கையெழுத்துப் பிரதியில் உள்ளன. இவற்றில் 89 ஆவணங்கள் ‘முதலியார் ஆவணங்கள்’ என்னும் தலைப்பிலும் (தமிழினி பதிப்பகம், 2006); 65 ஆவணங்கள் ‘முதலியார் ஓலைகள்’ என்னும் தலைப்பிலும் (காலச்சுவடு பதிப்பகம், 2016); எஞ்சிய ஆவணங்களில் சில, ‘அடிமை ஆவணங்கள்’ என்னும் தலைப்பிலும் (காலச்சுவடு பதிப்பகம், 2021) என்னால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. கவிமணியின் கையெழுத்துப் பிரதிகள் கவிஞர் என்பதைத் தாண்டி படிப்பாளியாக, கல்வெட்டு ஆய்வாளராக, ஆவணச் சேகரிப்பாளராக அவரை இனம் காட்டுகின்றன.
(ஜூலை 27: கவிமணி தேசிக விநாயகத்தின் 147ஆவது பிறந்த நாள்)
- அ.கா.பெருமாள்
பேராசிரியர்
தொடர்புக்கு: perumalfolk@yahoo.com