

உத்தரப் பிரதேசத்துக்கு அடுத்தபடியாக அதிக உறுப்பினர்களை (48) மக்களவைக்கு அனுப்பும் மாநிலம், மகாராஷ் டிரம். உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ், பாஜக என நான்கு கட்சிகள் தொடர்ந்து தேர்தல் அரசியலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருந்தன. கடந்த பத்தாண்டுகளில், காங்கிரஸும் பகுஜன் சமாஜும் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. உத்தரப் பிரதேசத்துக்குப் பிறகு மகாராஷ்டிரம் இப்போது அந்த இடத்துக்கு வந்திருக்கிறது.
பாஜக கூட்டணியுடன் தேர்தலில் வெற்றிபெற்ற சிவசேனை, பிறகு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தது; அதற்கு ‘மகா விகாஸ் அகாடி’ என்ற பெயரும் சூட்டப்பட்டது. இதன் மூலமாக, மகாராஷ்டிர அரசியலில் நான்கு கட்சிகளில் எந்த மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்ற ஒரு புதிய அத்தியாயத்தை உத்தவ் தாக்கரே தோற்றுவித்தார்.
காங்கிரஸும் பாஜகவும் ஒரே சமயத்தில் கூட்டணி ஆட்சியில் பங்கேற்க முடியாது என்பது மட்டும்தான் ஒரே நிபந்தனை. இந்தப் புதிய அணுகுமுறையைப் பாஜக இப்போது அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. சிவசேனையுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தபோது ஒட்டிக்கொள்ளாத மதவாதம், இப்போது பாஜவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும்போது ஒட்டிக்கொண்டுவிடுமா என்று அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கேட்கிறது. இதற்கு சரத் பவாரின் பதில் என்ன?
சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பிளவுபட்டதை பாஜகவின் உடைப்பு முயற்சி என்று சுருக்க முடியாது. குடும்பக் கட்சிகளின் தலைவர்களைப் பிணைப்பது பதவியும் அதிகாரமும்தான். பதவியும் அதிகாரமும் தொடர்ந்து இல்லாதபோது, அவர்களைப்பிணைத்து வைத்திருப்பது கடினம்.
சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் என்ற இரண்டு கட்சிகளும், மற்ற பல கட்சிகளைப் போலவே, குடும்பக் கட்சிகள். கட்சியில் செல்வாக்குடன் இருக்கும் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு விருப்பமில்லாதபோது, அல்லது மற்ற தலைவர்களுக்கு அது உவப்பாக இல்லாதபோது, கட்சி பிளவுபடுவது தவிர்க்க முடியாதது. மகாராஷ்டிர அரசியல் காட்டும் இந்தத் தன்மை, இந்தியா முழுமைக்கும் பொருந்தக்கூடியது.
மகாராஷ்டிரத்துக்கே உரித்தான நிதர்சனமும்இருக்கிறது. சிவசேனையும் தேசியவாத காங்கிரஸும் முறையே பால் தாக்கரே, சரத் பவார் ஆகியோரால் தொடங்கப்பட்டிருந்தாலும், அக்கட்சிகளில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் செல்வாக்கு பெற்றவர்கள். மகாராஷ்டிர அரசியலில் பெரும் செல்வாக்கு பெற்றவர் என்று சொல்லப்படும் சரத் பவார், ஒரு முறைகூட தேசியவாத காங்கிரஸை அறுதிப் பெரும்பான்மைக்கு இட்டுச் சென்றதில்லை; பால் தாக்கரேவுக்கும் இது பொருந்தும்.
மகாராஷ்டிர அரசியலில் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள் கட்சி/ கூட்டணி மாறும்போது அவர்களது ஆதரவாளர்களும் வாக்காளர்களும் அதே திசையில் இடம்மாறுகிறார்கள். இதனால் தான் கட்சியை மீண்டும் அடிப்படையிலிருந்து பலப்படுத்துகிறேன் என்று சரத் பவார் சொல்கிறார். ஏக்நாத் ஷிண்டேவால் உத்தவ் தாக்கரேவுக்கு ஏற்பட்ட தாக்கத்தைவிட அதிக தாக்கம் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸுக்கு அஜித் பவாரால் ஏற்பட்டிருக்கிறது.
1999இலிருந்தே மகாராஷ்டிர அரசியல் விரிசல் கண்ணாடியாகவே இருக்கிறது. அது இப்போது மேலும் இரண்டு விரிசல்களைக் கண்டிருக்கிறது. காங்கிரஸ் கூட்டணியிலும் பாஜக கூட்டணியிலும் தலா ஒரு சிவசேனையும் ஒரு தேசியவாத காங்கிரஸும் இப்போது உள்ளன. மேலும், வஞ்சித் பகுஜன் அகாடி, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா, ஏஐஎம்ஐஎம் போன்ற கட்சிகளும் களத்தில் உள்ளன. இதை ஊன்றிப் பார்த்தால், மகாராஷ்டிரத்தில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் நடக்கும் நேரடிப் போட்டியாக தேர்தல் மாறும் என்றே தோன்றுகிறது.
- தொடர்புக்கு: ramakrishnan@iima.ac.in