எழுத்தாளர் ஆனேன்: அ.வெண்ணிலா | மாதாந்திரச் சுழற்சியின் பாரம்

எழுத்தாளர் ஆனேன்: அ.வெண்ணிலா | மாதாந்திரச் சுழற்சியின் பாரம்
Updated on
3 min read

உடல் வழியாகப் பெரும் அனுபவத்தையே மனிதர்கள் பெரும்பாலும் தங்கள் அனுபவமாக, நினைவுகளாகக் கொள்கிறார்கள். எழுத்தும் கலைகளும் உடல்மூலம் மனம் பெறும் அனுபவத்தைப் பிரதிபலிப்பவை. உடலைக் கொண்டாடுவது படைப்பூக்கத்தின் மூலாதாரம். துரதிர்ஷ்டவசமாக, உடலைக் கொண்டாடுதல் என்ற பிரபஞ்ச விதி, இந்திய/தமிழ்ப் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. குறிப்பாக, முந்தைய தலைமுறை/ சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த பெண்களுக்கு. உடலைச் சுமையாக, அருவருப்பாக, வெகுஜனத்தின் பார்வையில் இருந்து பொத்திப் பாதுகாக்க வேண்டிய பொருளாகப் பார்க்கும் நிர்ப்பந்தத்தில் இருந்து வளர்ந்தவர்கள் அவர்கள்.

ஒரே வீட்டுக்குள் நான்கைந்து அடுப்படிகளை உருவாக்கி, ஐந்தாறு குடும்பங்கள் வாழ்ந்த நாள்கள். கூட்டுக் குடும்பம் என்ற சமூகவியல் வரையறையில் இது உள்ளடங்குமா என்று தெரியாது. குடும்பத்து ஆண்கள் காலையில் வீட்டை விட்டு வெளியேறி விடுவார்கள். ரெண்டுங்கெட்டானாக வேலைக்கோ, படிப்பதற்கோ சுணங்கிக் கிடக்கும் நோஞ்சான் பையன்கள் யாராவது பகலில் வீட்டில் இருக்கக்கூடும். பெண்கள் நெற்றியில் ஒரு கண்ணும், முதுகில் இரண்டு கண்களுமாக நடமாடுவார்கள். உடலுக்கான தனிமை என்பதோ, அந்தரங்கம் என்பதையோ அனுமதிக்காத சுவர்கள், மனிதர்கள். ‘தீட்டு வரலையா இன்னும்?’, ‘தீட்டுத் துணியை இப்படியா கண்ணுல பட்ற மாதிரி காயப்போடுவா?’, ‘தீட்டுத் துணியைப் பாத்தா, பால் குடிக்கிற குழந்தைக்கு வயித்துல தங்காது’ என்று விளக்கி விளக்கிப் பேசுவார்கள்.

துணி வைத்துக்கொண்டு, கால்களை அகற்றி நடக்கும் பெண்களின் நிலை பார்க்கவே பரிதாபமாக இருக்கும். இடுப்பு வலியிலும் வயிற்று வலியிலும் சுவரோரம் இரண்டு நாள்களுக்குப் பழைய துணிபோல் சுருண்டு கிடக்கும் பெண்களைக் கிழவிகள் உதடு பிதுக்கி, முகம் சுளித்துக் கடந்து போவார்கள். ‘இவ ஒருத்திக்குத்தான் உதிரம் போதா? சும்மா வேலைக்குப் பயந்துக்கிட்டு மூடாக்குப் போட்டுட வேண்டியது’ என்று வெறுப்பைக் கக்குவார்கள்.

சில குடும்பங்கள் இன்னும் கட்டுப்பெட்டித்தனம். மாதாந்திர நாள்களுக்கென்றே சாப்பிடத் தனி தட்டு. ஆண்கள் கண்ணில் படக் கூடாது. வீட்டில் விறகு போட்டு வைக்கும் இடத்திலோ, தாழ்வாரத்திலோ படுத்துக்கொள்ள வேண்டும். காலையில் யார் கண்ணிலும் படாமல், பிறர் விழிப்பதற்குள் தலைக்குக் குளித்துவிட்டு, ஒதுங்கி உட்கார்ந்துகொள்ள வேண்டும். வேறு உலகத்து மனுஷிபோல் அந்த நான்கு நாள்களில் மாதவிலக்கான பெண்களை வீடு பார்க்கும். விசேஷ நாள்களில் ஒதுங்கி நிற்க வேண்டும். கற்பூரம் ஏற்றப் போகிறார்கள் என்றாலே பின்புறத் தோட்டத்துக்கோ இருட்டறைக்கோ மாதவிலக்கான பெண் சென்றுவிட வேண்டும்.

பெண் உடலின்மீதான தீவிரக் கண்காணிப்பும், கண்காணிப்பு கொடுத்த அருவருப்புமே நான் எழுதுவதற்கான தூண்டுதலைத் தந்தன. சகல உறுப்புகளோடு நல்ல நிலையில் இருந்த உடலை, பல நேரம் வெளிக்காட்டக் கூடாத அருவருப்பான பொருளாக நினைத்து, மறைத்து வைக்க நினைத்திருக்கிறேன். உடல் பற்றிய பேச்சுகள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. உடலின் நோக்கம் பற்றிய ஆபாசமான சொல்லாடல்கள், உடலை ஒடுக்கி வைத்துக்கொள்ளும் தூண்டலைத் தந்தன. மாதாந்திரச் சுழற்சியின் நாள்கள் மனப்பாரம் சுமக்கும் நாள்களாகக் கழிந்தன. அந்நாள்கள் பற்றி சூழல் கொடுத்த நெருக்கடி, அதை மறைத்து வைக்கும் காரியமாக்கியது. மாதத்தின் 25 நாள்களும் அந்த 5 நாள்களைப் பற்றிய அச்சத்தால் நிறைந்தன. கடக்க முடியாத அச்சமாக மனத்தில் கிடந்ததை எழுதினேன். அதுவே என் முதல் சிறுகதை. ‘பட்டுப்பூச்சிகளைத் தொலைத்த ஒருபொழுதில்’ என்ற தலைப்பில் 'கணையாழி'யில் வெளியானது.

இன்றைய தலைமுறைப் பெண்களுக்கு இம்மனநிலை சிரிப்பை ஏற்படுத்தலாம். ‘இதுக்குப் போயா இவ்வளவு அலட்டிக்கணும்’ என்று தோள் குலுக்கி, கண்களை உருட்டிப் பார்க்கலாம். சிறுகதை எழுதி, இருபதாண்டுகளைக் கடந்துவிட்டாலும், அந்த நாள்களின் தழும்புகள் தந்த கசப்புகளைக் கடக்க முடியாத தலைமுறையைச் சேர்ந்தவள் நான்.

கிராமங்களுக்குள் நாப்கின்கள் நுழைந்த காலமது. பயன்படுத்திய நாப்கின்களை அப்புறப்படுத்துவது எப்படி என்பது பெரும் குழப்பம். வீட்டில் யாரிடமும் வெளிப்படையாகக் கேட்க முடியாத மன அமைப்புடன் இருக்கும் சின்னஞ்சிறு பெண். விற்கும் கடைக்காரனிடமும் கேட்க முடியாது. எடுத்துத் தாளில் வைத்துக் கட்டிக் கொடுப்பதற்குள் அவன் உடல் எட்டுக் கோணலாகும். பள்ளித் தோழிகளிடமும் பேச்சை வளர்க்கும் சாமர்த்தியம் இல்லாதவள். பயன்படுத்திய நாப்கின்களைச் செய்தித்தாளில் மடித்து, வீட்டுக்குள், புத்தகப் பைக்குள் மறைத்து வைத்துக்கொண்டாள். அதன் நாற்றத்தைத் தடுப்பது எப்படி என்பதே சதா கவலையாக அவளை அரிக்கும். யதேச்சையாக, வகுப்பறையில் இரண்டு தோழிகள் பேசிக்கொள்வதைக் கேட்பாள். கழிப்பறைக்குள் போட்டுத் தண்ணீர் ஊற்றினால் போதுமென்று.

அந்தப் பெண்ணின் வீட்டில் கழிப்பறை இருந்தது. கண்டுபிடிப்பொன்றை நிகழ்த்திய மகிழ்ச்சியில் கழிப்பறைக்குள் போட்டாள். பலநேரம் உடனே போகாமல் அவளை அச்சுறுத்தினாலும், யார் கண்ணிலும் படாமல் நாப்கின்களை அப்புறப்படுத்த முடிந்ததில் அவளுக்குப் பெருத்த நிம்மதி. நிம்மதி என்பது காற்புள்ளிதானே? அடுத்தும் பிரச்சினை வந்தது. கழிப்பறையின் தொட்டி நிறைந்துவிட்டதாகவும், ஆள்கள் சுத்தம் செய்கிறார்கள், தோட்டத்துப் பக்கம் போகாதே என்று அவள் அம்மா எச்சரிக்கவும் அவளுக்கு மயக்கமே வந்துவிடும்.

‘அச்சோ, அதில் போட்டிருக்கும் நாப்கின்கள் எல்லாவற்றையும் சுத்தம் செய்யும் ஆள்கள் பார்ப்பார்களே, என்ன நினைப்பார்களோ?’ என்று நடுங்குவாள். எப்போது வேலை முடியும் என்று காத்திருந்து, தோட்டத்துக் குப்பைப் பள்ளத்துக்கு ஓடுவாள். சிதைந்த நாப்கின்கள் பள்ளத்தில் ஆங்காங்கு கிடந்தன. தலைசுற்றுவது போலிருந்ததைச் சமாளித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினாள். அன்றைய கனவில், அவளின் உடலெங்கும் மரவட்டை ஊர்ந்து செல்லும் அருவருப்பில் ஒடுங்கிப் படுப்பாள்’ என்று கதை முடியும்.

பெண் உடல் எதிர்கொள்ளும் கண்காணிப்பு, உடலையே வெறுத்து ஒதுக்கும் நிலைக்குப் பெண்களைத் தள்ளுவதையே என் முதல் சிறுகதை பேசியிருக்கும். வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய கனவுகளில் திளைக்க வேண்டிய பருவத்தில், மரவட்டைகள் நெளியும் கனவுகளில் அதிரும் அருவருப்பு. வெளியான மாதத்தின் சிறந்த சிறுகதையாக இலக்கியச் சிந்தனை தேர்ந்தெடுத்தது. தேர்வுசெய்தவர் கவிஞர் யுகபாரதி.

உடல் பாரத்தை விடுவித்தல் என்பது ஆன்மிகத் துறவறச் சொற்றொடர், பெண்களுக்கோ லௌகீக வாழ்வுக்கான வழிகாட்டல். 

-எழுத்தாளர், தொடர்புக்கு: vennilaa71@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in