

எஸ்.எஸ்.ராஜகோபாலன், சென்னை
கல்வித் துறை, இத்தகைய நிகழ்வுகளை அணுகும் விதம் கவலை அளிக்கிறது. ஓலைக் கொட்டகையில் பள்ளி செயல்பட்டதால்தான் கும்ப கோணம் பள்ளித் தீ விபத்து ஏற்பட்டது என்று வழக்கை மாற்றிவிட்டனர்.
அரசு உதவி பெறும் பள்ளிகள் இரண்டும், ஆங்கில வழிப் பள்ளிகள் இரண்டும் ஒரே கட்டிடத்தில் எப்படி அனுமதிக் கப்பட்டன என்ற கேள்விக்குப் பதில் இல்லை.
இந்தத் தீ விபத்திலிருந்து உயிர் தப்பிய குழந்தைகளுக்கு ஆயுள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய காயங்கள் உள்ளன. சிகிச்சையும் பெயரளவுக்கு நடந்தது. ஆனால், அவையெல்லாம் மறக்கப்பட்டுவிட்டன. அதன் விளைவுகள் சமூகத்தில் என்ன என்பதையும் யாரும் அறியத் தயாராயில்லை. வரவிருக்கும் தீர்ப்பு இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
பேராசிரியர் அ. மார்க்ஸ், கும்பகோணம்:
இது வெறும் விபத்து கிடையாது, படுகொலை! ‘லஞ்சம் மக்களைக் கொல்லும்’ என்பதற்கு இது எடுத்துக்காட்டு. அடுக்குமாடிக் கட்டிடங்கள் இடிவதும், பள்ளிக்கூடங்கள் தீ விபத்தில் எரிவதும் சகஜமாகிக்கொண்டுவருகிறது. அடிப்படையில் சட்டங்கள் இல்லாமல் இல்லை. கல்வித் துறை, உள்ளாட்சி, நகராட்சி, பொதுப்பணித் துறை போன்ற பல்வேறு அமைப்புகள்தான் அனுமதி சான்றளிக்கின்றன. இருந்தும் இப்படி நடக்கிறது. உரிய அனுமதி பெறாத பள்ளிகள் மூடப்படும் என்று அரசு சொன்னாலும் நிறைய பள்ளிகள் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
எங்கள் அனுபவத்திலேயே இது நடந்துள்ளது. சென்னையில் பிரபல நிறுவனமொன்று ‘ஏ ஸ்கூல்’ சிபிஎஸ்இ பாடத்திட்டம் என்ற முழக்கத்துடன் மிகப் பெரிய அளவில் பண வசூலுடன் நடத்திவந்த 36 ‘நர்சரி- பிரைமரி’ பள்ளிகளில் கழிவறை வசதி, குடிநீர், விளையாட்டுத் திடல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்ததை, கடந்த மாதம் களஆய்வில் கண்டறிந்தோம். இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைச் சந்தித்தபோது, இப்படி ஒரு பள்ளி செயல்பட்டது யாருக்கும் தெரியவில்லை என்பது தெரியவந்தது. இப்போது அந்தப் பள்ளியில் படித்தவர்களெல்லாம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதுகுறித்து யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.
பள்ளிக்கூடங்களில் கழிவறை, குடிநீர், சாப்பிடும் இடம், விளை யாட்டு மைதானம், நூலகம் இருக்கிறதா என்பதைக் கல்வித்துறை ஆய்வுசெய்வது மட்டுமல்லாமல், இதற்காக, கல்வியாளர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை அந்தக் குழு கூடி, பள்ளிகளை நேரில் ஆய்வுசெய்து பரிந்துரைகள் அளிக்க வேண்டும். அந்தப் பரிந்துரைகளை அரசு கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும்.
இந்தத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு கொஞ்சம் நிவாரணம் தந்துள்ளது. தீர்ப்பு, ஏதோ அகப்பட்டுக்கொண்டவர்களுக்கு மட்டும் தண்டனை என்பதாக இருக்கக் கூடாது. சிட்டிபாபு கமிஷன், சம்பத் கமிஷன் அளித்த பரிந்துரைகளை உள்ளடக்கி, ஒட்டுமொத்தமாக நிரந்தரத் தீர்வு ஏற்படும் வகையில் இருக்க வேண்டும்.
பேராசிரியர் வெ. சுகுமாரன் (தமிழ்நாடு அறிவியல் இயக்கம்), தஞ்சை:
கல்வியைத் தனியார்மயமாக்கும் கொள்கை, தனியாரின் லாபவேட்டை, பெற்றோரின் பேராசை, எத்தகையை கல்வியை எந்தச் சூழலில் பெறுவது என்பதில் சமூகத்தில் நிலவும் குழப்பம் இவை யெல்லாம்தான் இந்த விபத்துக்கான காரணங்கள். ஆகவே, வரக்கூடிய தீர்ப்பு, தனியார்மயக் கொள்கைக்குச் சவுக்கடியாகவும், தனியாரின் லாப வேட்டைக்கு மரண அடியாகவும் இருக்க வேண்டும்.
பேராசிரியர் மோகனா சோமசுந்தரம் (சமம் பெண்கள் அமைப்பு), பழனி:
தனியார் கல்வி ஒழுங்காற்றுச் சட்டத்தின்படி மழலையர் பள்ளி, தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளை முறையாக வகைப்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில், காற்றோட்டம், விளை யாட வசதி, விபத்து நடந்தால் தடுக்கும் வசதி, எளிதில் வெளியேறுவதற்கு ஏற்ற அமைப்பு போன்றவற்றையும் தகுதியான ஆசிரியர்கள், பாதுகாவலர்களையும் அந்தப் பள்ளிகள் கொண்டிருக்கின்றனவா என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
முக்கியமாக, பொதுப்பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டும். அவற்றை மேம்படுத்தி அனைவரும் படிக்கும் பள்ளிகளாக உருவாக்க வேண்டும். இவற்றை வலியுறுத்தும் வகையில் தீர்ப்பு இருக்க வேண்டும்.
- தொகுப்பு: சி. கதிரவன், தொடர்புக்கு: kadhiravan.c@thehindutamil.co.in