பலியாடுகளா பெண்கள்?

பலியாடுகளா பெண்கள்?
Updated on
1 min read

அமெரிக்க ராணுவ வீரர்களின் சுகபோக வாழ்க்கைக்காக தென் கொரிய அரசால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள், தங்களுக்கு உரிய நஷ்ட ஈடும், இறுதிவரை அரசின் அரவணைப்பும் தேவை என்று கோரி வழக்கு தொடுத்துள்ளனர். 1960-களில், அப்பா அடிக்கிறார் என்பதற்காகக் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே இளம் பெண்ணாக வந்த சோ மியுங் ஜா (76), பாலியல் தொழில் தரகர்களிடம் சிக்கினார். அமெரிக்க வீரர்களுக்காக நடத்தப்பட்ட பாலியல் தொழில் விடுதியில் விற்கப்பட்டார்.

இரண்டாவது உலகப் போரின்போது சிறைபிடிக்கப்பட்ட தென் கொரிய மகளிரைப் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தியதற்காக தங்கள் நாட்டுக்கு உரிய நஷ்டஈட்டைத் தர வேண்டும் என்று தென் கொரிய அரசு ஜப்பான் மீது வழக்கு தொடுத்துள்ள நிலையில், தென் கொரிய அரசு மீதே முன்னாள் பாலியல் தொழிலாளர்கள் 122 பேர் வழக்கு தொடுத்துள்ளனர்.

“நமக்காகப் போரிடும் அமெரிக்க ராணுவ வீரர்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். நீங்கள் அனைவரும் நாட்டுப்பற்று மிக்கவர்கள், இந்த நாட்டின் சமாதானத் தூதுவர்கள்” என்ற சமாதான வார்த்தைகளுடன், அமெரிக்க வீரர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கற்றுத்தரப்பட்டதாகவும் தங்கள் மனுவில் கூறியுள்ளனர்.

பால்வினை நோய்க்கு ஆளான பெண்கள், குணமாகும்வரை பூட்டிய அறையில் அடைக்கப்பட்டனர். குணமடைந்தவுடன் மீண்டும் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தனர் என்று அவர்கள் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர். வயதான பிறகு, தங்களை நடுத்தெருவுக்கு விரட்டிவிட்டனர் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அரசுகள் இதற்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கின்றன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in