

உலகளவில் புகழ்பெற்ற சிறார் எழுத்தாளர் ரோல் தால். அவரின் ‘மட்டில்டா’, ‘சார்லி அண்ட் தி சாக்லெட் ஃபேக்டரி’ உள்ளிட்ட நூல்கள் இன்றும் குழந்தைகளால் விரும்பி வாசிக்கப்படுகின்றன; லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகின்றன. அவரின் நூல்களை மறுபதிப்பு செய்யும்போது, அதில் இருந்த பிற்போக்குக் கருத்துகள் இடம்பெற்றுள்ள பகுதிகள் திருத்தம் செய்து வெளியிடப்பட்டன. பதிப்பகத்தின் இந்தச் செயல் ‘எழுத்தாளரின் கருத்தியல் பார்வையை மாற்றி அமைப்பதாக இருக்கிறது’ என்பதாகப் புகழ்பெற்ற நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி எதிர்ப்புத் தெரிவித்தார். இது குறித்து ஃபேஸ்புக்கில் சமீபத்தில் ஓர் உரையாடல் நிகழ்ந்தது. அதில் மறைந்த மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு மீள்பதிப்பு கொண்டுவரும்போது, அவற்றைத் திருத்தம் செய்யலாமா என்கிற கேள்வி எழுப்பப்பட்டது.
எந்தவொரு படைப்பையும் வாசிக்கும்போது, அது எழுதப்பட்ட காலத்தையும் சேர்த்துப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. முற்போக்கான எழுத்தாளர்களின் படைப்புகளிலும் அவர்கள் வாழும் காலத்தில் நிலவிய சில பிற்போக்கு அம்சங்கள் இடம்பெற வாய்ப்புண்டு. உதாரணமாக, திருநங்கை என்னும் சொல் கடந்த பத்தாண்டுகளில் பரவலான புழக்கத்தில் இடம்பெற்ற ஒன்று. ஆனால், அதற்கு முன் எழுதியவர்கள் வேறு சொற்களையே பயன்படுத்தியிருப்பர். அப்படைப்புகளுக்கு மறுபதிப்பு கொண்டுவரும்போது அதை மாற்றலாமா, கூடாதா என்பதுதான் அடிப்படைக் கேள்வி.
அந்த எழுத்தாளர் உயிரோடு இருந்து அதை மாற்றினால், இக்கேள்வி எழப்போவதில்லை. ஆனால், அவர் இறந்துவிட்டிருந்தால்? பதிப்பகம் அல்லது பதிப்பாசிரியர் அதைச் செய்வது சரிதானா? இதற்கு இரண்டு வகையான பதில்கள் இருக்கின்றன. பெரியவர்களுக்கான இலக்கியப் படைப்புகளை மீள்பதிப்பு கொண்டுவருகையில் மாற்றம் செய்யாமல் இருப்பதே சரி. ஏனெனில், அந்த எழுத்தாளரின் கருத்தியலும் அப்படைப்பு எழுதப்பட்ட காலத்தின் போக்கும் வாசகர்களுக்குச் சரியாகக் கடத்தப்பட வேண்டும். படைப்பைத் திருத்தம் செய்வது அதற்கு இடையூறாக அமையும். இந்த நிலைப்பாடு சிறார் இலக்கியப் படைப்புகளுக்குப் பொருந்தாது என்பதே என் கருத்து.
ஏனெனில், ஒரு படைப்பின் உள்ளடக்கம், மொழிநடை, கருத்தியல் உள்ளிட்டவற்றை அலசி ஆராய்ந்து ஏற்கும்/நிராகரிக்கும் மனநிலையில் சிறார் வாசகர்கள் இருப்பது இல்லை. ஒரு படைப்பில் இருப்பவற்றை முழுமையாக உள்வாங்குவதே சிறாரின் இயல்பாக இருக்கிறது. அப்படியிருக்கையில், பாலினப் பாகுபாடு, சாதிய இழிநிலை, மத வேற்றுமை, நிறப் பாகுபாடு உள்ளிட்டவை அப்படைப்பின் உள்ளீடாக இருக்கும்பட்சத்தில், அவையும் சிறாருக்குள் இறங்கிவிட வாய்ப்பிருக்கிறது. இவையெல்லாம் ஐம்பதாண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை எனப் பிரித்துப் பார்க்க அவர்களால் இயலாது. எனவே, சிறார் படைப்புகளில் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால், செய்வதே சரியானதாக இருக்கும். தாம் விரும்பும் கருத்தியலைத் திணிக்க முயல்பவர்களுக்கு இந்தச் சலுகை மிகவும் வசதியாகி விடும் என்று தோன்றலாம். அதை நாம் வேறுவகையில்தான் எதிர்கொள்ள வேண்டும். திருத்தம் மேற்கொள்ளா விட்டால் புறம்தள்ளப்பட்ட பழமைவாதக் கருத்தியலை நாமே அறிமுகப்படுத்தியது போலாகிவிடும்.
தமிழின் சிறார் இலக்கியப் பிரிவில் மூத்த எழுத்தாளர்களின் ஆக்கங்கள் மீள்பதிப்பு காண்பது அரிதினும் அரிது. அப்படிச் செய்யும்போதும் அவற்றை இக்காலச் சிறாருக்கு தற்போதைய சூழல் கருதி குறைந்தபட்சத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ந.பிச்சமூர்த்தியின் ‘காக்கைகளும் கிளிகளும்’ தொகுப்பில் சில இடங்களில் வடமொழிச் சொற்கள் இடம்பெற்றிருக்கும். ‘பக்ஷிராஜா தேர்தல்’ என்பது அவர் எழுதிய ஒரு கதையின் தலைப்பு. இப்போதுள்ள சிறார் புரிந்துகொள்ளும் வகையில் 'பறவை அரசன் தேர்தல்' என்று மாற்றினால் அக்கதையை அவர்களால் புரிந்துகொள்ள முடியும்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பெரியோர்களுக்கான கதைகளில் பெரும்பாலும் கதாபாத்திரங்கள் சாதிப் பின்னொட்டுடன் இருக்கும். அவற்றை மறுபதிப்பு கொண்டுவருவதில் சிக்கல் இல்லை. அதேநேரம், கு.அழகிரிசாமி சிறார் கதைகள் எழுதியிருக்கிறார். அவற்றில், பழனிவேல் பிள்ளை, மகாலிங்கம் செட்டியார் என்பது போன்ற பெயர்கள் இடம்பெறுகின்றன. அதேபோல மயிலை சிவமுத்து உள்ளிட்டவர்களின் படைப்புகளிலும் இப்படி இடம்பெற்றுள்ளன. மறுபதிப்பில் அந்நூல்களை மாற்றம் செய்யாமல் கொண்டுவரும்பட்சத்தில் பெயரோடு சாதிப் பின்னொட்டு இருப்பதைச் சிறாருக்கு நாமே அடையாளம் காட்டியதைப் போலாகிவிடும். அதனால், அவற்றை நீக்கிவிடுவதே நல்லது.
ஏனெனில், தமிழ்நாட்டில் பெரியாரிய இயக்கம் மேற்கொண்ட நன்முயற்சிகளால் பெயர்களுக்குப் பின்னால் சாதியை இட்டுக்கொள்ளும் நடைமுறை பொதுவழக்கில் இல்லை. இந்த நடைமுறை பெரியவர்களுக்கான இலக்கியப் படைப்புகளிலும் மெல்லப் பரவியது. கதையில் கதாபாத்திரங்களுக்கான பெயர்களில் இருந்த சாதிப் பின்னொட்டுக்கு மெல்ல விடைகொடுத்தார்கள் எழுத்தாளர்கள். இக்கதைகளை முன்மாதிரியாகக் கொண்டு சிறார் எழுதப் பழகினால், சாதிப் பின்னொட்டு இல்லாமலேயே எழுதட்டுமே!
வாசிப்புலகில் சிறார் நுழைகையில் அவர்களை மகிழ்வோடு வரவேற்பது நம் கடமை. அதேபோல, அவர்களுக்கான படைப்புகளை அளிப்பதில் கூடுதல் கவனம் கொள்வதும் அவசியம். அதனால், சிறார் இலக்கியப் படைப்புகள் மீள்பதிப்பில் ‘திருத்தும்’ அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டியிருக்கிறது. வேண்டுமெனில், ஆய்வுப் பிரதியாக அப்படைப்புகளின் அசல் வடிவத்தை நூலகங்களில் வைக்கலாம். சிறார் வளர்ந்த பிறகு அவற்றைப் படித்து ஒப்பிட்டுக்கொள்ளும் வாய்ப்பு அமையும்.
- கவிஞர், சிறார் எழுத்தாளர், தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com