

ஒரு நியாயமான வக்கீலின் புறக்கணிக்க முடியாத கூர்மையான வாதங்களைப் போலக் கதாபாத்திரங்களின் உரையாடலில் ஒரு செறிவான தர்க்கத்தைக் கவித்துவமாகக் கட்டியெழுப்பிய ஜெயகாந்தன், பாரதி சொன்னதைப் போலப் புனைகதையின் உரைநடையிலும் தமிழை வெடிப்புறப் பேச வைத்தவர்.
சப்த சங்கீதம் என்ற சொல்லால் அவரைப் புரிந்துகொள்வது பொருத்தமானதாகலாம். வெளியிரைச்சல்களைத் தாண்டி உள்ளமைதியைச் சாத்தியப்படுத்துவதில் ஜெயகாந்தனின் எழுத்து ஒரு நூதனத்தன்மையைத் தன்னியல்பாகக் கொண்டிருக்கிறது. இதற்கான அசைக்க முடியாத உதாரணம்தான் - ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’. நாவலிலிருந்து ‘கதை’யை வெளியேற்றுவது பற்றிப் பின்நவீனத்துவர்கள் தமிழில் பேசத் தொடங்கிய 1990களுக்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே அந்தப் படைப்புச் சாதனையை மேற்சுட்டிய தம் நாவல்வழி சிறப்பாகச் சாதித்துவிட்டவர் ஜெயகாந்தன். ஐம்பது ஆண்டுகளைத் தாண்டிய பிறகும் அந்த நாவல் இன்றும் தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது என்பது, சாதாரணமான ஒரு விஷயமல்ல.
அசலான படைப்பு: ஒரு குட்டி ஏசுநாதர் போலத் தம் நாயகன் ஹென்றியை உருவாக்கியிருக்கிறார் ஜெயகாந்தன். நாவலை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் ஹென்றியை விடப் பேசாமடந்தையாக நாவலின் சில இடங்களில் மட்டுமே வந்துவிட்டுக் கடைசியில் வெளியேறிவிடும் அந்தப் பைத்தியக்காரப் பெண்ணின் (பேபி) சித்திரிப்பு இன்னும் ஆழமானதாக இன்றைய மறுவாசிப்பில் புலப்படுகிறது. தாம் சாதாரணமாக வாழ்ந்துகொண்டிருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் நாவலில் வரும் பல கதாபாத்திரங்களுக்கு - ஹென்றி உள்பட - ‘உண்மையில் யார் பைத்தியம்?’ என்கிற சவாலைத் தன் இருப்பின் மூலமும் வெளியேற்றத்தின் மூலமும் ‘பைத்தியக்காரி பேபி’ வலுவாக எழுப்பிவிடுகிறாள். தஸ்தயேவ்ஸ்கியின் ‘அசடன்’ நாவலின் இறுதியில், ‘மிஷ்கினா அசடன்? நாமல்லவா அசடர்கள்!’ என்கிற நுண்புரிதல் வாசகர்களிடம் ஏற்படுகிறதல்லவா? அதற்குச் சற்றும் குறையாத தரிசனமே இதுவும் எனத் தோன்றுகிறது. தாமரையிலைத் தண்ணீராகத் தப்பிக்கும் ஹென்றியையும் தாண்டிய ஓர் ஆதிப்பெரும் ஊக்கமாகப் பற்றற்ற பற்றின் ஊற்றாகப் பேபியைத் தம் எழுத்தில் ஸ்தாபித்துவிடும் ஜெயகாந்தனின் அறியப்படாத அந்த உட்கோணம், இந்நாவலில் ஒரு தெறிப்பாகத் திறந்துகொள்வதாகப் பார்க்கிறேன். ஒரு பத்து அல்லது இருபது கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு, இந்த நாவலில் ஜெயகாந்தன் ஊடாடிக் காட்டியிருக்கும் வாழ்க்கையோட்டம், அவருக்கு முன்னும் பின்னும் தமிழில் எழுதிய வேறொருவரின் சாயலும் இல்லாத ஓர் அசலான சிருஷ்டித் திறனுடையவை என்பதில் சந்தேகமேயில்லை.
ஹென்றி என்னும் உதாரணம் : ஜெயகாந்தனைப் பிற முக்கியமான தமிழ்ப் படைப்பாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது, அவரது வேறுபட்ட, தனித்துவமான பார்வைதான். இதுவே அயோத்திதாசர், பெரியார், அம்பேத்கர் போன்றோரிடமிருந்து வேறுபடுத்திச் சித்தர்கள், வள்ளலார், விவேகானந்தர், பாரதிவழிக் கருத்தியல் தளத்தில் வேறோர் உச்சியில் ஜெயகாந்தனைக் கொண்டுநிறுத்துகிறது. தன் பெயரோடு ஐயர் என்பதைத் தற்போது சேர்த்துக்கொள்ளாத போஸ்ட் ஆபிஸ் நடராஜனையும், பிள்ளைமாராகப் பிறக்காதபோதிலும் துரைக்கண்ணு தனக்குச் சூட்டிவிடும் ‘ஹென்றிப்பிள்ளை’ என்ற நாமகரணத்தை மறுக்காத ஹென்றியையும் ஒருசேரத் தம் எழுத்தில் காட்டுகிறார்
ஜெயகாந்தன். ஒரு பரியாரியுடன் தன் மனைவி ஓடிவிட்ட துக்கத்தைக் கடைசிவரை மறக்க முடியாத ஹென்றியின் பப்பாதான் ஹென்றியை எப்போதும் சந்தோஷமாயிருக்கச் சொல்கிறார். எதற்குமே எதிரியாக இருப்பது சரியல்ல என்று கருதும் ஹென்றி, ‘எனது கொள்கையே ஃபிளக்ஸிபிளாக இருப்பதுதான்’ என்கிறான். முரண்பாடுகள் இல்லாத, மோதல்கள் இல்லாத, முணு முணுப்புகள் இல்லாத, சண்டைகள் இல்லாத, குறைகள் இல்லாத, புகார்கள் இல்லாத, முறையீடுகள் இல்லாத, எதிர்பார்ப்புகள் இல்லாத, ஆக்கிரமிப்புகள் இல்லாத, அதிகாரங்கள் இல்லாத - அன்பு மட்டுமே தழைக்கும் ஒரு புனைவுலகத்தின் ஏகப்பிரதிநிதியாக ஹென்றியை உருவாக்குவதில், அவரே எதிர்பாராத வெற்றியை இந்நாவலில் ஜெயகாந்தன் பெற்றுள்ளார்.
இந்நாவலின் இரண்டாம் பாகத்தை எழுதும் ஆசை அவருக்குள்ளிருந்தும்கூட, அதை எழுதாமல் அவர் கைவிட்டதற்கு, இந்த வெற்றியின் நிறைவே காரணமாக இருக்கக்கூடும் என்றும் யூகிக்கிறேன். ‘ஒரு செடியைப் பாதுகாக்கறதும் தண்ணி ஊத்தறதும்தான் நம்ம வேலை. அதிலே என்ன காய்க்கணுங்கறதும் எப்படிக் காய்க்கணுங்கறதும் நம்ம தீர்மானம் இல்லே’ என்கிறார் ஹென்றியின் பப்பா. இதுதான் ஜெயகாந்தனின் வாழ்க்கை குறித்த பார்வையும். மரபைக் கடுமையாக விமர்சிக்கிறபோதும், அதன் செழுமையான பகுதிகளுடனான தம் தொப்புள் கொடி உறவை அவர் எப்படியோ தக்கவைத்துக் கொண்டுவிடுகிறார். பாஷை, ஜாதி, தேசம் என்ற அற்பங்களைப் பொருட்படுத்தாமல் ‘மனுஷப் பெருமிதங்கள்’ பற்றியே கவலைப்பட்டவர் அவர். மரபை அவர் எப்படிப் பார்க்கிறார் தெரியுமா? ‘தப்புப் பண்ணினவனைக்கூட ஒரு நல்ல காரியம் செய்ய வைக்கிற தண்டனை, ஒரு பெரிய நாகரிகம் இல்லியா?’ என்கிறான் ஹென்றி. இந்தப் புரிதல் எங்கிருந்து அவனுக்கு வருகிறது? ‘உண்மைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை. ஒரு நல்ல நம்பிக்கையைச் சிதைக்காமல் இருப்பதே மிகவும் முக்கியம்’ என்கிற தார்மிகம்தான் - ஹென்றியை உருவாக்கிய ஜெயகாந்தனின் அடிப்படை. இதிலிருந்துதான், ‘சாமிக்கும் மதத்துக்கும் என்னா சம்பந்தம்?’ என்கிற அடுத்த கட்டத்துக்கு ஹென்றியும் ஜெயகாந்தனும் நகர்கின்றனர்.
என்னாடா உங்க சட்டம்? வாழ்க்கையைப் பார்க்கிற மாதிரி அப்படியே நம்புகிற மனிதர்களைப் புனைந்துகாட்டி, வரலாறு பற்றிய விவகாரமான சிந்தனைகளிலிருந்து கொஞ்சம் ஒதுங்கிக்கொள்கிறார் ஜெயகாந்தன். ஒரு அனுபவம் இன்னொரு அனுபவத்துக்குத் தடையாகிப்போவதால், அது அதை அதனதன் போக்குக்கே விட்டுவிட வேண்டும் என்பதுதான் அவரின் புரிதல். சட்டமும் சமூகமும் சம்பிரதாயங்களும் சாத்திரங்களும் மனிதனைச் சிறுமைப்படுத்திவிடக் கூடாது என்பதில்தான், ஒரு படைப்பாளியாக அவருக்கு அதிகக் கவனமிருந்தது. சட்டத்தை மீறிக் குடித்த குற்றத்துக்காகப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோகப்பட்டு - அந்த அவமானம் தாங்கமாட்டாமல் தற்கொலை செய்துகொண்ட கிருஷ்ணராஜபுரம் மணியக்காரர் ராமசாமி கவுண்டரைப் பரிவுடன் மட்டும் ஜெயகாந்தன் பார்க்கவில்லை; ‘மனுஷாள் தராதரம் தெரியலேன்னா, என்னாடா உங்க சட்டம்? உங்க சட்டத்திலே போட்டு...’ எனத் துரைக்கண்ணுவின் கோபமாகவும் சீறி வெடிக்கிறார் ஜெயகாந்தன்.
இந்நாவலில் கிராமம் × நகரம் பற்றிய இருமையும் இருக்கிறது. ‘நகரத்தைவிட மின்சாரம், ரோடு, டிரான்ஸ்போர்ட் எல்லாம் கிராமத்துக்குத்தாங்க ரொம்ப முக்கியம். பயிர்த்தொழில் முழுக்கவும் நவீனமாகணும்... மில் தொழிலாளிங்க மாதிரி இவங்களுக்கு டிரஸ், எட்டு மணி நேர வேலை, குடியிருப்புக் காலனி, ஹாஸ்பிடல் வசதி, பென்ஷன், பிராவிடண்ட் பண்ட் எல்லாம் குடுக்கணும்... கிராமத்து எளிமை அது இதுன்னு பேசி நகரமும் அங்கேயிருக்கிற ஆடம்பரமும் கிராமத்தைக் கொள்ளையடிக்குது’ என்கிறான் தேவராஜன். இதற்கு மறுதரப்பை ஹென்றி பேசுகிறான். ‘இந்த உலகம் பூராவும் யந்திரங்களும் மின்சார வெளிச்சமுமாய்க் கோலாகலப்படட்டும். என் வீட்டில் எனக்கு இந்த (அகல் விளக்கு) வெளிச்சமும் இந்த அமைதியும் நிலவட்டும்’ என்கிறான் ஹென்றி. இதை எலெக்ட்ரிசிட்டிக்கு எதிரான குரலாகப் புரிந்துகொள்வது ஜெயகாந்தனைப் புரிந்துகொள்ள மறுப்பதாகும். ஏனெனில், முரண்களின் ஒருமைதான் ஜெயகாந்தனின் புனைவுலகமாகும். ‘நிச்சயம் ஒருநாள் நல்லது புரியும். கொஞ்சம் நாளாகும்’ என்கிறான் ஹென்றி. ‘காலம் கடந்து புரிஞ்சு என்னாங்க பலன்?’ என்கிறான் தேவராஜன். ஒருமுறை மேய்ந்த புல்லைப் பசு மாடு மீண்டும் மீண்டும் அசைபோடுவதுபோல, இந்த நாவலை ஒருமுறை வாசித்தவர்களும் திரும்பத் திரும்ப இதன் ருசியைச் சலிக்காது அசைபோட்டுக்கொண்டே இருக்கலாம். இந்நாவல் மூலம் ஜெயகாந்தன் நிலைபெற்றுவிட்டார்.
- கல்யாணராமன்
எழுத்தாளர், பேராசிரியர்
தொடர்புக்கு: sirisharam73@gmail.com