

என் முதல் கவிதைத் தொகுப்பு 1996இல் வெளிவந்தது. ஆனால், அதில் முதலாவதாக உள்ள கவிதை நான் முதன்முதலாக எழுதியது அல்ல. கவிதைகளைப் பொறுத்தவரை, ஒரேயொரு படிமத்தைஎப்படிப் பூர்த்திசெய்வது என்று தெரியாமல் ஆண்டுக்கணக்காக மனதிலேயே வைத்திருந்ததெல்லாம் உண்டு.
முதல் கதை பற்றிச் சொல்வது சற்று எளிதாயிருக்கும் என்று படுகிறது. பெரும் பத்திரிகைகள், சிறுபத்திரிகைகள் என்று பலவற்றில் பல கதைகள் பிரசுரமான பிறகே, முதல் கதையை எழுதினேன் என்று தோன்றுகிறது. ஆக, என் முதல்கதையாய் அமைந்த எட்டு அல்லது ஒன்பதாவது கதை பற்றிய நினைவுகூர்தல் இது.
ஒரே சமயத்தில் ஒரு சிறுகதையும் குறுநாவலும் எழுதினேன்; ‘நச்சுப் பொய்கை’, ‘இருபத்துமூன்று காதல்கதைகள்’. ஒரே சமயத்தில் எழுதப்பட்டு,சற்று முன்பின்னாக ஒரே காலகட்டத்தில் பிரசுரமானவை. ‘ஒளிவிலகல்’ தொகுப்பில் உள்ளவை. வெவ்வேறு மொழிநடை, வெவ்வேறு கரிசனங்கள், வெவ்வேறு பகைப்புலங்கள் செயல்பட்ட கதைகள். ‘நச்சுப்பொய்கை’யில் கவிதார்த்தமான அலங்கார மொழி, மாயத்தன்மை கொண்ட களங்கள், நாலைந்து காலகட்டங்கள் செயல்பட்ட தருணங்கள் என்று இருந்தன. ‘இருபத்துமூன்று காதல் கதை’களில் நடைமுறைக் காலகட்டம், இயல்பான யதார்த்த மொழி, நேரடியான சம்பவங்கள்.
ஆனால் இரண்டிலுமே, இப்போதுவரையிலான என் கதைப் பரப்பின் குணாம்சங்கள் பொதிந்திருந்தன என்றே தோன்றுகிறது. பொதுவாக, என் கதைகளில் ‘கதைக்குள் கதைக்குள் கதை’ என்ற பாணி செயல்படுவதாக நிறையப்பேர் சொல்லியிருக்கிறார்கள்; மரபான சிறுகதை உருவத்துக்கு விசுவாசம் பாராட்டாதவை. என் மன அமைப்பே அப்படித்தான் இருக்கிறதோ என்னவோ - பாருங்கள், முதல் கதை பற்றிய கட்டுரையில்கூட ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளைப் பேசுகிறேன். ஆமாம், தனிக் கதை என்று எதுவுமே கிடையாது - தனியாகத் தெரியும் ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒரு கதைக்கொத்து இருக்கிறது என்பது என் ஆழமான நம்பிக்கை.
சிறுகதை எழுதும் ஒவ்வொருவருக்கும் ஒரு கதைக்கோட்பாடு இருக்கத்தான் செய்யும் - அவரவர் ஈட்டிய மொழித்தளம், அக்கறைகள், கற்பனை செயல்படும் விதம் போன்றவை சார்ந்து. என்னைப் பொறுத்தவரை, இப்போதைய என் இலக்கிய நம்பிக்கைகளை முறைப்படுத்திக் கொடுத்த முதல் கதை ‘நச்சுப் பொய்கை’. இந்தக் கட்டுரையை முன்னிட்டு, மீண்டும் ஒருமுறை வாசித்தேன். ஒரே கதைக்குள் எட்டுக் கதைகள். அத்தனையுமே வாய்மொழிக் கதையின் சாயல் உள்ளவை. ஒவ்வொரு கதையின் கதாபாத்திரமும் தன்மை, ஒருமையிலேயே கதை சொல்கின்றன. ஒவ்வொரு நிகழ்விலும் ஒருவித நாடகத்தன்மை. இயல்பான பேச்சுமொழியே கொச்சை கலக்காத எழுத்துத் தமிழில் பதிவாகியிருக்கிறது.
பரவலாக அறியப்படாத மதுரை மாவட்டக் குக்கிராமத்தில் தனது பெண்தன்மை காரணமாகக் கேலிக்குள்ளாகும் அப்பாவி, இரண்டு மூன்று சாமியார்கள், தேவதாசிக் குலத்தில் பிறந்த நடனமணி, மணிக்கட்டோடு முடியும் கரங்கள் கொண்ட சக ரயில்பயணி, ஆங்கிலேயர் கால வணிகர், மனைவியையும் அவள் காதலனையும் ஒரே வீச்சில் வெட்டிக் கொல்வதற்குத் தேவையான மனத் திராணி தேடி தாசி வீட்டுக்கு வந்துசேரும் ஆத்திரக்கார இளைஞன், உலகின் துக்கம் அனைத்தையும் முழநீளக் குழலின் வழி பீய்ச்சுகிற ஷெனாய்க் கிழவர், மஹாபாரதக் கதை சொல்லும் சிவாச்சாரியார் என்று ஒருவரிடமிருந்து மற்றவருக்கு உருண்டுகொண்டே போகும் கதை. ஆரம்பித்த இடத்துக்குத் திரும்பி வருவதில்லை. ஆரம்பச் சம்பவத்தைத் தவிர மற்றவை எதுவுமே தமிழ்நாட்டில் நடப்பதில்லை. மையக் கவலையைத் தொட்டும் விலகியும் தன்போக்கில் நகரும் கதை. பின்னாள்களில் என் கதைகளின் போக்குஎவ்வாறானதாக இருக்கப் போகிறது என்பதற்கான அத்தனை தடயங்களும் அந்தக் கதையிலேயே இருப்பதை, இப்போது காணுகையில் ஆச்சரியமாகக்கூட இருக்கிறது. நடைமுறை வாழ்க்கை போலவே, இலக்கிய வாழ்க்கையிலும் முன்னுணர்வு செயல்படக்கூடும் என்பதே சுவாரசியம்தானே!
சிறுகதை என்பது சமூகச் சீர்திருத்த ஆவணமோ, பொதுச் சமூகத்துக்கான அறிவுரையோ அல்ல; முதன்மையாக ஒரு கலைப்பொருள் என்று எனக்கு உணர்த்திய கதை அது. மேற்சொன்ன இரண்டு அம்சங்களும் இயல்பான பின்விளைவுகளாக இருப்பதில் யாருக்கு ஆட்சேபம் இருக்க முடியும்? ஆனால், கதைகளின் முதன்மை உத்தேசமே அவையாக இருக்கும் பட்சத்தில், கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகளின் தன்னியல்பும், பார்வைக்கோணத்தின் நூதனமும் சேதமடையத்தானே செய்யும்?
‘நச்சுப் பொய்கை’யை எழுதும்போது, எந்த ஒரு கதாபாத்திரத்தையும், நிகழ்வையும் நான் முன்கூட்டியே தீர்மானிக்கவில்லை. கதையின் போக்கும், என் மனக் குறளிகளும் இழுத்துச் சென்றவிதமாக ஆட்பட்டேன் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
- யுவன் சந்திரேசகர்
எழுத்தாளர்
தொடர்புக்கு: writeryuvan@gmail.com