

இயக்குநர் ஜான் ஆபிரகாமின் ‘அக்ரஹாரத்தில் கழுதை’ என்கிற படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று. இந்தப் படம் 1977இல் வெளிவந்து, அந்த ஆண்டுக்கான சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதையும் பெற்றது. இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் இந்தப் படத்துக்குத் திரைக்கதை எழுதியிருந்தார். ‘வித்யார்த்திகளே இதிலே இதிலே’, ‘அம்ம அறியான்’ ஆகிய மலையாளப் படங்களையும் ஜான் ஆபிரகாம் இயக்கியிருக்கிறார். கூட்டு நிதி திரட்டல் மூலம் படம் எடுத்துக் காண்பித்தவர் ஜான். இதற்காக ஓடேஸா என்கிற இயக்கத்தை நிறுவி நடத்தியவர். எழுத்தாளர் என்ற வகையில் ஜானின் கதைகளும் குறிப்பிடத்தக்கவை. தமிழிலும் அவை மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. இவரைப் பற்றிய படத்தைப் பத்திரிகையாளர் பிரேம் சந்த் இயக்கியிருக்கிறார். இதற்கான திரைக்கதையை திதி தாமோதரன் எழுதியிருக்கிறார்.
இந்தப் படத்துக்கு ஆவணப்படத்தன்மை உண்டு. என்றாலும் இது ஆவணப்படம் அல்ல. ஜானைப் பற்றிய முழுநீளப் படமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஜான் என்கிற கதாபாத்திரம் இல்லை என்பதுதான் வேறுபாடு. கழுதைகள் இடம்பெறும் காட்சியோடு இந்தப் படம் ஆரம்பிக்கிறது. பிணவறையில் ஜானின் சடலம் ஒருநாள் இரவு முழுக்க, யாரும் அவர் உடம்புக்குக் கோரிக்கை விடுக்காததால் அப்படியே கிடக்கிறது.
இந்தப் படத்தில் இன்னொரு காட்சியில் தள்ளுவண்டியில் ஒருவர், ஜான் ஆபிரகாமின் சடலம் என்று சொல்லி வெள்ளைத் துணியால் மூடப்பட்டதைக் காட்டுகிறார். கடந்த ஒருநாள் இரவு முழுக்க ஜான் அனாதையாகக் கிடந்ததாகச் சொல்கிறார். இன்னும் அந்த உடம்பின் சூடு ஆறவில்லை என்று கதறுகிறார். இது அவரின் ரத்தம்; இது அவரின் மாமிசம் என்கிறார். 1987, மே 30இல் ஜான் காலமானார்.
கேரள-தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள பிளாச்சிமடம் பகுதியில் கொக்ககோலா நிறுவனத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களைக் காவல் துறையினர் அடித்தனர். பிளாச்சிமடத்தில் குளிர்பானத் தயாரிப்புக்காகத் தொடர்ந்து தண்ணீர் எடுக்கப்பட்டதால், குடிநீருக்கே சிரமப்பட்ட மக்கள், அதை எதிர்த்துப் போராடினர். பல நாள் பட்டினியுடன் மக்கள் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அந்தப் போராட்டத்தை ஜான் படமாக எடுத்திருக்கிறார். அங்கே தீக்குளிக்கும் பெண்கள், மறியலில் ஈடுபடும் பெண்கள், காவல் துறையினரிடம் அடி வாங்கும் பெண்கள் என எல்லாவற்றையும் நுணுக்கமாகப் படத்தில் காட்டி வன்முறை பற்றிப் பேசுகிறார்.
‘என்னுடைய சினிமாவின் ஹிட்லர் நான்’ என்று அவர் சொல்லிக்கொள்கிறார். மன நல மையத்தில் அவர் இருந்துள்ளார். அப்போது ஜன்னல்களும் கதவுகளும் அடைக்கப்பட்ட நிலையில் ‘கதவைத் திறங்கள்.. நான் வெளியே வானத்தைப் பார்க்க வேண்டும்’ என்று கதறும் அவரின் குரல் படத்தில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஜன்னலைத் திறக்கும்போது கண்களைக் கூசச் செய்யும் வெளிச்சம் அவரைப் பயமுறுத்துகிறது. வெளியில் எரிந்துகொண்டிருக்கும் சடலங்கள் காட்டப்படும் காட்சி அதிர்ச்சியளிக்கிறது.
அவருடன் திரைப்படங்களில், நாடகங்களில் நட்பு முறையில் பழகிய ஆண்களும் பெண்களும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் ஜானை அவர்கள் வீட்டுக்கு வரவழைப்பதுபோல் பாவனை செய்து, கேமராவைப் பார்த்து ‘ஜான் வாருங்கள்.. எப்படி இருக்கிறீர்கள்?’ என்று முகமன் கூறி வரவேற்று அவருடைய பாவனைகளோடு பதிவுசெய்கிறார்கள். இந்த முயற்சி புதுமையாக இருக்கிறது. ஜான் வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களை ஆவணப்படம் வெளிப்படுத்துகிறது. ஜான் ஆபிரகாம் ஒரு திரைப்பட இயக்குநர் மட்டுமல்ல என்பதை இந்தப் படம் பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறது.