

எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர் சாரோன் எழுதியிருக்கும் ‘கரியோடன்’ சிறுகதைத் தொகுப்பு, பேரணாம்பட்டுப் பகுதியின் வாழ்க்கை முறையைப் பேசுகிறது. பேரணாம்பட்டுப் பகுதி வாழ்க்கை முறையை உருவாக்கி, அதில்வாழ்ந்துகொண்டிருக்கிற மக்களைப் பற்றிய பதிவு இது. இந்த வாழ்க்கை முறை தமிழ்ச் சிறுகதைகளுக்குப் புதியது; அதிகமாக அறியப்படாதது. இந்தப் பகுதியின் காடும் மலையும் தாவரங்களும் நுணுக்கமாக அறிமுகமாவது இதுவே முதன்முறை. சூழலியல் பண்பாட்டைக் காட்டும் படைப்புகள் தமிழில் எழுதப்பட்டிருந்தாலும் ‘கரியோடன்’ தொகுப்பில் தீவிரமாகவும் விவரணைகளோடும் எழுதப்பட்டிருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.
புதிய அனுபவங்கள், ஆர்வத்தைத் தூண்டும் நிகழ்வுகள், முன் படித்திராத வர்ணனைகள் ஆகியஇந்த அம்சங்கள் மண்ணை அப்படியே கண்முன் நிறுத்துகின்றன. இக்கதைகளின் மக்கள் எல்லாநாள்களிலும் காடேறும் வாழ்க்கையை லயிப்புடன் வாழ்பவர்கள். ஓய்வு ஒழிச்சல் இல்லாத நெருக்கடி வாழ்வு தந்த தனித்திறமையில் பெருமிதம் கொண்டு அலைபவர்கள். இவர்கள் வாழ்க்கையில் மாறாமல் இருந்த காலகட்டங்களையும் மாறுதல்களால் சிக்கல்கள் ஏற்படும் காலகட்டங்களையும் இக்கதைகள் பேசுகின்றன.
இம்மக்களின் வாழ்க்கைமுறையை ‘ஈசல் வேட்டை’, ‘ஈத்தை’ ஆகிய கதைகளில் முழுமையாகக் காண முடிகிறது. ஆண்களில் காளியையும் பெண்களில் தைலுவையும் இப்பகுதி மக்களின் அசல் பிரதிநிதிகளாகச் சாரோன் காட்டியிருக்கிறார். ஒட்டுமொத்தமாக இப்பகுதி மக்களின் திறனையும் உழைப்பையும் துயரத்தையும் மகிழ்ச்சியையும் வெற்றியையும் தோல்வியையும் இவர்கள் இருவரைப் பற்றிய படைப்பு மூலம் உணர முடிகிறது.
காளி எலியையும் பாம்பையும் விளைநிலத்திலிருந்து அகற்றி, விளைச்சலைப் பாதுகாத்துக் கொடுக்கும் காவலாளி. அவன் மனைவி வள்ளி அவனுடைய வேலைகளில் துணையாள். அவள் பாம்புக்கடி விஷத்தை இறக்கி உயிர் தருவதில் வல்லவள். இவர்களுக்குக் கூலியாகக் கிடைப்பது கொஞ்சம் தானியம்தான். ஆனால், அன்றாடச் சொந்த வேலைகள் போன்றே செய்கின்றனர். சில சமயங்களில் காட்டில் தங்கி அங்கிருந்து மான்கொம்பு, மயில் தோகை, பாம்புத் தோல்என்று பலவற்றைக் கொண்டுவந்து ஊர் மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தருவார்கள். அவர்கள்தரும் கொஞ்சம் தானியம், காசு எனக் கிடைப்பவற்றை வாங்கிக்கொள்வார்கள். விலை பற்றிய அக்கறைகள் அவர்களுக்கு இல்லை. மக்களுக்குத் தங்களால் முடிந்ததைக்கொடுக்கிறோம் என்ற பெருமிதம் மட்டுமேஇருக்கும். தமிழ் வட்டாரச் சிறுகதைகளில் பலசெய்திகள் இப்படி இடம்பெற்று இருப்பினும்,இந்த நுணுக்கம் தமிழ்ப் படைப்பில் புதிய வரவு. மேலும், கரியோடன் தொகுப்பில் இடம்பெறும் நுணுக்கம் ஆழப்பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
‘ஈத்தை’ கதையின் நாயகி தைலு அதீத ஆற்றல் உள்ளவள். பெரிய மலைப்பாம்பைப் பாறையால் அடித்துக் கொல்கிறாள். தன் ஆட்டைக்கடிக்கவரும் ஓநாயை ஒரே வீச்சில் வெட்டி ஊனப்படுத்துகிறாள். எவ்வளவு உயரமான மலையானாலும் மரமானாலும் விரைந்து அநாயாசமாக ஏறுகிறாள். ஆணுக்கும் மேலான ஆற்றல் உள்ளவள் தைலு. கரியோடன் கதையில் வரும் பிச்சோடன் ஒரே நேரத்தில் இரண்டு ஆடுகளுக்குப் பிரசவம் பார்த்து, ஆறு குட்டிகளை வெளியே எடுக்கிறான். காட்டில் கண்ட யானைக் குட்டியை அது என்னவென்று தெரியாமலேயே ஆடுகளுடன் பட்டிக்கு ஓட்டி வருகிறான். ஊரே அதிர்கிறது; வனத் துறை தண்டிக்கிறது. அது என்ன தவறு என்று அவனுக்குப் புரிவதில்லை. அத்தனை அப்பாவி. மக்கள் பிச்சோடனைக் ‘கரியோடன்’ என்று பெயர் வைத்து அழைக்கத் தொடங்குகிறார்கள்.
காட்டை மையமிட்ட கதைகளில் காடு பாத்திரமாக ஆக்கப்பட்டிருக்கிறது. இதன் உச்சத்தைக் ‘காட்டோடையை உடுத்தியவள்’ கதையில் காண முடியும். அதில் காட்டப்படும் ஓடை பற்றிய குறிப்பு இயற்கைக்குள்ளே நம்மை மூழ்கடிக்கிறது.
வருணிக்கும் வேகத்தில் சாரோனின் நடை கவிதையாகிவிடுகிறது. புதிய புதிய உவமைகள் நம் புலன்களை நிரப்புகின்றன. கதாபாத்திரப் பேச்சுகள் மண்வாசம் மிக்கவை. தமிழும் தெலுங்கும் கலந்த வட்டார நடைக் கதைகளுக்கு உண்மைத் தன்மையை ஏற்றுகிறது. இக்கதைகளை வாசிக்கும்போது காட்டின் பச்சை மணம் நாசியில் ஏறுகிறது.
புதிய ஒரு பகுதியின் வாழ்வை, புதிய பயிர்களை, உயிர்களை இன்றைய சமூகம் அறிந்து அதிசயப்படும் வகையில் சாரோன் படைத்திருக்கிறார். இக்கதைகளைப் படிக்கையில் காணாத ஒரு புதிய உலகத்தில் வாழ்ந்த அனுபவத்தைப் பெற முடிகிறது. தமிழகம் பற்றியும் தமிழர் வாழ்க்கை முறை பற்றியும் அறிய நிறைய உள்ளது என்ற உணர்வைக் ‘கரியோடன்’ தொகுப்பு ஏற்படுத்துகிறது.
கரியோடன் (சிறுகதைகள்)
சாரோன்
எதிர் வெளியீடு
விலை: ரூ.250
தொடர்புக்கு: 04259 226012, 99425 11302