

காலனி ஆட்சியின்போது இந்தியாவுக்குப் பணியாற்ற வந்த பிரிட்டிஷ் அதிகாரிகளில் டபிள்யூ.டபிள்யூ.ஹண்டர், ஜே.எச்.நெல்சன் என்று சிலர், வரலாற்றுத் துறைக்கு அளப்பரிய பங்களிப்புகளைச் செய்துள்ளனர். இந்திய வரலாற்றை எழுத அவர்களது நூல்கள் முக்கியமான சான்றாதாரங்களாக இன்றும் விளங்குகின்றன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும், அந்த வரலாற்றுத் தொடர்ச்சி அறுந்துவிடவில்லை. ஆர்.பாலகிருஷ்ணன், மு.ராஜேந்திரன் என்று இன்னும் அந்தப் பாரம்பரியம் தொடர்கிறது. திண்டுக்கல்மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்தமா.வள்ளலார், அந்த மாவட்டத்தைப் பற்றி வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்து சமீபத்தில் நூலாக்கியிருப்பதோடு, அந்நூல் முழுவதையும் ஓவியங்களாலும் புகைப்படங்களாலும் பலவண்ண அச்சில் அணி செய்திருக்கிறார்.
திண்டுக்கல் மலைப் பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்ட வரலாற்றுடன் இந்நூல் தொடங்குகிறது. ஜே.எச்.நெல்சன் எழுதிய ‘மதுரா மேனுவல்’ தொடங்கி 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்புவரை தொல்லியல் கையேடுகள், தல வரலாறுகள், பயணக் குறிப்புகள், நாளிதழ்க் கட்டுரைகள் என்று பல்வகைப்பட்ட 100-க்கும் மேற்பட்ட சான்றுகளின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வரலாறு எழுதியலிலும் பண்பாட்டு மானிடவியலிலும் மா.வள்ளலாருக்குள்ள நவீன பார்வை மட்டுமின்றி சங்க இலக்கியங்களில் அவருக்குள்ள தோய்வும் இந்நூலெங்கும் வெளிப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை கண்டறியப்பட்டுள்ளவற்றில் காலத்தால் முற்பட்ட தாண்டிக்குடி மட்கலன்கள், குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கும் குன்றங்கள் என்று தொல்லியல், சூழலியல் குறித்து தற்போது எழுந்துள்ள ஆர்வங்களையும் இந்நூல் உள்ளடக்கியிருக்கிறது.
பாசறையுடன் கூடிய திண்டுக்கல் கோட்டை, அதன் சுரங்கப்பாதைகள் குறித்து நிலவிவரும் ஆதாரமில்லாத நம்பிக்கைகள், பசிப்பிணி மருத்துவன் என்று பாடப்பட்ட பண்ணனின் சிறுகுடி, ரோமானியர் காலத்துத் தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட கலையம்புத்தூர் என்று மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய இடங்கள், ஊர்கள், அவற்றின் பெயர்க் காரணங்கள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. கொடைக்கானல் குறித்து தனி அத்தியாயமே இடம்பெற்றுள்ளது.
விஜயநகர ஆட்சிக் காலத்தில் திண்டுக்கல் வரலாற்று முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. பின்பு மதுரை நாயக்கர்கள், ஆர்க்காடு நவாப்கள், மைசூர் மன்னர்கள், அவர்களிடமிருந்து ஹைதர் அலியும் திப்பு சுல்தானும், பின்பு ஆங்கிலேயர்கள் என்று வெவ்வேறு ஆட்சியாளர்களின் கைகளுக்கு மாறியது. மைசூரின் படைத்தளபதியாக திண்டுக்கல் வந்த ஹைதர் அலி இங்குதான் தனக்குள் ஓர் அரசரைக் கண்டுகொண்டார். ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து தொடர்ந்து கலகங்களை நடத்திக்கொண்டிருந்த பாளையங்கள் தங்களுக்குள்ளும் சண்டையிட்டுக்கொண்டன. இந்த வரலாற்றின் போக்கை, இந்நூல் வரிசைக்கிரமத்துடன் தெளிவாகப் படம்பிடித்துள்ளது.
மூக்கறுப்புப் போர், கால்நடைகள் எதுவும் தப்பிப் பிழைக்காத பெரும்பஞ்சம், விஷக்காய்ச்சல் தொற்றுகள், நீர் மேலாண்மை, போர் வியூகங்கள், விஜயநகர அரசின் சமயச் சார்பு என்று திண்டுக்கல் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளையெல்லாம் தேடித் தேடித் தொகுத்து வழங்கியுள்ளார் மா.வள்ளலார். திண்டுக்கல்லைச் சுற்றியிருந்த 26 பாளையங்களின் விவரணை இந்நூலை தமிழக வரலாறு குறித்து வெளிவந்த சமீபத்திய வெளியீடுகளில் முக்கியமானதாக்கியிருக்கிறது. விருப்பாட்சி பாளையக்காரரான கோபால் நாயக்கரை ஒரு கதாநாயகராக உணரவைத்திருப்பதோடு பாஞ்சாலங்குறிச்சி, சிவகங்கை போல திண்டுக்கல்லுக்கும் இந்திய சுதந்திரப் போரில் உள்ள முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. வீரமங்கை வேலுநாச்சியாருக்கு அவரது இறுதிக்காலம் வரையிலும்உறுதுணையாக நின்றது திண்டுக்கல். நேற்றைய வரலாற்றுக்கும் இன்றைய அரசியல் நிகழ்வுகளுக்கும் இடையிலான ஒப்புமைகளையும் போகிறபோக்கில் சுட்டிக்காட்டியிருப்பது நூலாசிரியரின் முத்திரை.
1985-ல் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிந்து தனி மாவட்டமானது திண்டுக்கல். இன்னும் அந்த மாவட்டத்துக்கு என்றுதனியாக மாவட்ட விவரச்சுவடி வெளிவராதநிலையில், அந்தக் குறையைப் போக்கியிருக்கிறது மா.வள்ளலார் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம். மிக முக்கியமாக, அணிந்துரையில் நீதபதி அரங்க.மகாதேவன் தெரிவித்திருப்பதுபோல, விடுதலை வேள்வியில் தமிழகத்தின் முக்கியப் பகுதியாக திண்டுக்கல் திகழ்ந்தது என்பதையும் மதநல்லிணக்கத்தின் மையமாக விளங்கியது என்பதையும் இந்நூல் எடுத்துக்காட்டியிருக்கிறது.
திண்டுக் கல்லில் எழுதிய வரலாறு
மா.வள்ளலார்
விதை வெளியீடு
விலை: ரூ.750
தொடர்புக்கு: 70100 47966