அஞ்சலி: பேராசிரியர் இம்தியாஸ் அகமது (1940-2023) - மதச்சார்பற்ற கொள்கையாளர்

அஞ்சலி: பேராசிரியர் இம்தியாஸ் அகமது (1940-2023) - மதச்சார்பற்ற கொள்கையாளர்
Updated on
1 min read

புகழ்பெற்ற சமூகவியலாளரும் பேராசிரியருமான இம்தியாஸ் அகமது (83), உடல்நலக் குறைவால் ஜூன் 19 அன்று காலமானார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சமூகவியல், மானுடவியல், அரசியல் அறிவியல், இஸ்லாம் தொடர்பான படிப்புகள் எனப் பல துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் இம்தியாஸ் அகமது; அவரது மறைவு, கல்வி, ஆய்வுப் புலங்களில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

லக்னோ பல்கலைக்கழகத்தில் பயின்ற இம்தியாஸ், டெல்லி, சிகாகோ பல்கலைக்கழகங்களில் ஆய்வு மேற்கொண்டார். 1960இல் லக்னோ பல்கலைக்கழகத்தில் ‘பண்டிட் ஜக்பால்கிருஷ்ணா’ தங்கப் பதக்கத்தை வென்ற அவர், பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் உறுப்பினராக (Fellow) இருந்தவர்.

இஸ்லாம் மதத்தில் சாதிகளின் இருப்பு குறித்த அவரது ஆய்வு மிக முக்கியமானது. 1973இல் ‘இந்திய முஸ்லிம்களிடையே சாதி-சமூகப் படிநிலை’ (Caste and Social Stratification among Muslims in India) என்னும் தலைப்பில் தனது ஆய்வு முடிவுகளைப் புத்தகமாக வெளியிட்டார்.

யுனெஸ்கோ ஆய்வு மையத்தில், மூத்த ஆய்வாளராகப் பணியாற்றிய பிறகு, டெல்லி கல்லூரியில் சமூகவியல் துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். பின்னர், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் சமூகவியல் துறைப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

அமெரிக்காவில் மிசெளரி பல்கலைக்கழகம், பாரிஸில் உயர் படிப்புகளுக்கான கல்வி நிறுவனம், கனடாவில் யார்க் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் அகதிகள் தொடர்பான படிப்புகளுக்கான கல்வி நிறுவனம், ஷெர்ப்ரூக் பல்கலைக்கழகம், இத்தாலியில் உள்ள அமைதிக்கான மக்கள் முன்னெடுப்புகளின் சர்வதேசப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார்.

ஆய்விதழ்களில் மட்டுமல்லாமல், வெகுஜன இதழ்களிலும் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவரது ஆய்வுகள் அறிவுப்புலத்தில் பெரும் தாக்கம் செலுத்தியவை. கள ஆய்வுகளே உண்மை நிலையை வெளிக்கொணரும் என்பதில்அவர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

இம்தியாஸ் அகமது மதச்சார்பற்ற கொள்கையாளர். இந்துத்துவ அரசியலின் வளர்ச்சி குறித்த காத்திரமான விமர்சனங்களை முன்வைத்த அவர், சிறுபான்மைச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதை எதிர்கொள்ளும் விதத்தையும் விமர்சித்தார். ஆய்வு மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக அவர் திகழ்ந்தார்.

புகழ்பெற்ற அறிவுஜீவிகள் பலர் அவரது மாணவர்கள். நட்பார்ந்த முறையில் பழகுவதுஅவரது தனித்தன்மை என அவருடன் பணிபுரிந்த சக பேராசிரியர்களும், அவரிடம் பயின்ற மாணவர்களும் நினைவுகூர்ந்திருக்கின்றனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in