என்னவாகும் எதிர்க்கட்சிகளின் வியூகம்?

என்னவாகும் எதிர்க்கட்சிகளின் வியூகம்?
Updated on
3 min read

இந்திரா காந்தியின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில், அரசியல் அணிசேர்க்கை தொடங்கியதும், அதன் விளைவாக 1977 மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்தி அரசு படுதோல்வியடைந்ததும் இந்திய அரசியல் வரலாற்றின் முக்கியப் பக்கங்கள். கொந்தளிப்பான இந்தக் காலகட்டத்தில் பிஹார் தலைநகர் பாட்னாவில் 1974 அக்டோபரில் நடந்த பொதுக்கூட்டத்தில், “பிஹாரில் இந்திரா காந்திஅலை ஓய்ந்துவிட்டது” என்று ஜெயப்பிரகாஷ் நாராயண்பேசினார். பின்னர், அது தேசிய அளவிலும் எதிரொலித்தது.

ஏகப்பட்ட திருப்பங்களைக் கொண்ட அந்தக் காலகட்டத்தில், வெவ்வேறு சித்தாந்தங்கள் கொண்ட தலைவர்கள், ஒரே குடையில் அணிதிரண்டனர். அவர்களின் ஒரே நோக்கம், இந்திரா காந்தியை வீழ்த்துவது. ஏறத்தாழ இன்றும் அதே போன்றசூழல் நிலவுகிறது. விசாரணை அமைப்புகளை ஏவித் தங்களை அச்சுறுத்துவதாகக் குற்றம்சாட்டி, மோடி அரசை வீழ்த்த,கொள்கை வேறுபாடுகளைக் கடந்து பல முக்கிய அரசியல் கட்சிகள் அணிதிரண்டிருக்கின்றன. இந்தக் கட்சிகள் பங்கேற்ற முதல் கூட்டம் பாட்னாவில் ஜூன் 23 அன்று நடைபெற்றது.

எதிர்மறைச் செய்திகள்: பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகள் 2017லேயே தொடங்கிவிட்டன. எனினும், 2019 மக்களவைத் தேர்தலில் அது கைகூடவில்லை. இமாச்சலப் பிரதேசத்தைத் தொடர்ந்து கர்நாடக சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியைக் காங்கிரஸ் பிடித்திருக்கும் நிலையில், இனி பாஜகவோ காங்கிரஸோ இல்லாத மூன்றாவது அணி அமைவதற்குச் சாத்தியமில்லை என்பதும் தெளிவாகிவிட்டது.

அதேவேளையில், காங்கிரஸ் தலைமையை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளும் நிலையிலும் பல கட்சிகள் இல்லை. இப்படியான சூழலில் நிகழ்ந்திருக்கும் பாட்னா கூட்டம், மோடிக்கு எதிரான அரசியல் வியூகத்தின் முதல் படிதான். ஜூலை 12 அன்று சிம்லாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் இரண்டாவது கூட்டத்தில் தான் இதுகுறித்த சித்திரம் முழுமை பெறும் என எதிர்பார்க்கலாம்.

உண்மையில், பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் நிகழ்ந்த தருணத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததே ஒரு சறுக்கல்தான். ஊடகங்களில் இந்தக் கூட்டம் குறைந்த கவனத்தைத்தான் பெற்றது. போதாக்குறைக்கு, கூட்டத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் வெளிப்படுத்திய அதிருப்தி, மாயாவதி, அசதுதீன் ஒவைஸி போன்ற தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாதது, பிஹார் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியினருக்கு இடமளிக்க வேண்டும் என நிதீஷ் குமாரிடம் ராகுல் காந்தி நிபந்தனை விதிப்பதாக வெளியான காணொளி என எதிர்மறைச் செய்திகள்தான் அதிகம் வெளியாகின.

கள நிலவரம்: ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளாகப் பாஜகவைக் கடுமையாக விமர்சித்துவந்த கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ர சமிதி (பிஆர்எஸ்), கர்நாடகத் தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸைத்தான் தனது பிரதான போட்டியாளராகக் கருதுகிறது. நிதி ஆயோக் கூட்டம் உள்ளிட்ட பல கூட்டங்களைப் புறக்கணித்த பிஆர்எஸ் கட்சி, பாட்னா கூட்டத்தைப் புறக்கணித்ததும் மணிப்பூர் நிலவரம் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தனது சார்பில் பிரதிநிதியை அனுப்பியதும் பலரைப் புருவம் உயர்த்தச் செய்திருக்கின்றன. பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போன்ற கட்சிகள் நடுநிலை வகிக்கின்றன.

பல்வேறு தருணங்களில் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கும் மாயாவதிக்கு அழைப்பு விடுக்கப்படாததில் ஆச்சரியமில்லை. அவர் மீதான வழக்குகள் அவருக்கு ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடி பாஜகவின் வலுவான லகானாக இருப்பதாகக் கருதப்படுகிறது. எனினும், தேர்தல் நெருங்க நெருங்க அவரது முடிவில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்லாமல், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களிலும் கணிசமான ஆதரவுத் தளத்தை வைத்திருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியை இழக்க காங்கிரஸ் விரும்பாது என்றும் கருதலாம்.

காங்கிரஸின் நிலைப்பாடு: டெல்லி அரசு அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு அளிப்பது தொடர்பான அவசரச் சட்டம் குறித்துப் பேச நேரம் ஒதுக்க வேண்டும் என அர்விந்த் கேஜ்ரிவால் கைகூப்பி வேண்டிக்கொண்டும் ராகுல் காந்தி அதை ஏற்க மறுத்துவிட்டார் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் அங்கலாய்க்கிறார்கள். இவ்விஷயத்தில் முடிவெடுக்க காங்கிரஸுக்கு அவகாசம் தரப்படுவது நியாயம்தான் என்றே பிற கட்சிகளும் கருதுகின்றன.

உண்மையில், பல மாநிலங்களில் காங்கிரஸுக்குப்போட்டியாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டிவரும் ஆம் ஆத்மி கட்சியின் நகர்வுகளை ராகுல் காந்தி ரசிக்கவில்லை. குறிப்பாக, காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் ஆம் ஆத்மிகட்சி தீவிரமாகச் செயல்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் நம்பகத்தன்மை குறித்து ஏற்கெனவே சந்தேகத்தில் இருக்கும் காங்கிரஸ், அக்கட்சி வெளியேறினாலும் கவலைப்படாது என்றே தெரிகிறது.

தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விஷயங்களில் முன்பு இருந்ததைவிடவும் கூடுதலான நெகிழ்வுத்தன்மையுடன் காங்கிரஸ் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், கூட்டணிக் கட்சிகளுடனான முரண்களைச் சரிசெய்வதற்கு முன்னர் கட்சிக்குள் எழுந்திருக்கும் புதுப்புது சலசலப்புகள் காங்கிரஸைக் கவலைக்குள்ளாக்குகின்றன.

குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் சக்தி சிங் கோஹிலுக்குக் கட்சிக்குள்ளேயே எழுந்திருக்கும் எதிர்ப்பு, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் - மாநிலத் தலைவர் மோகன் மர்க்காம் ஆகியோருக்கு இடையிலான மோதல் என நிறைய உள்மோதல்களுக்குத் தீர்வு காண வேண்டியிருக்கிறது.

இவற்றுக்கு நடுவே, 2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகக் கருதப்படும் ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ள பாஜக இப்போதே தயாராகிவிட்டது. இன்று (ஜூன் 27) மத்திய பிரதேசத் தலைநகர் போபாலில் நடைபெறும் நிகழ்ச்சியில், 543 தொகுதிகளைச் சேர்ந்த 2,700 வாக்குச்சாவடி முகவர்களிடம் பிரதமர் மோடி பேசுகிறார்.இதில் காணொளி வழியாக லட்சக்கணக்கான பாஜக முகவர்கள்இணைகிறார்கள்.

ராஜஸ்தானில் மோடி உள்ளிட்ட பாஜகவினர் இனி அடிக்கடி முகாம் அடிப்பார்கள். வேளாண் சட்ட விவகாரத்தில் முறைத்துக்கொண்டு கூட்டணியிலிருந்து வெளியேறிய அகாலி தளம்கட்சியை மீண்டும் சேர்த்துக்கொள்ள பாஜக ஆர்வம் காட்டுகிறது.

பிரதமர் வேட்பாளர் யார்? - மோடி எனும் பெரும் பிம்பத்தைச் சிதறடிக்கப் பலம்மிக்க ஒரு தலைவர் முன்னிறுத்தப்படுவது அவசியம். அதேவேளையில், 2014, 2019 தேர்தல்களில் மோடிக்கு எதிராகப் பிரதமர் வேட்பாளர் (ராகுல் காந்தி) முன்னிறுத்தப்பட்டபோது முடிவுகள் பாஜகவுக்குத்தான் சாதகமாக அமைந்தன. இந்திரா காந்திக்கு எதிராக, காங்கிரஸிலிருந்து வெளியேறிய தலைவர்கள், பிற கட்சிகள் இணைந்து ‘ஜனதா’ உருவானது.

1977 தேர்தலில் அந்தக் கட்சிக்குக் கிடைத்த வெற்றிக்கு - தாங்கள்தான் காரணம் என நினைத்த தலைவர்களால் குழப்பம்தான் நேரிட்டது. பிரதமர் பதவிக்குப் போட்டியும் உருவானது. இறுதியில் ஒற்றுமையின்மையும் பதவி ஆசையும்தான் ஜனதாவின் இறங்குமுகத்துக்குக் காரணமானது.

நிதீஷ் குமாரைப் பொறுத்தவரை அவர் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. 2013இல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டபோது, கூட்டணியிலிருந்து நிதீஷ் வெளியேற, ‘பிரதமர் கனவு’ தகர்ந்ததும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. எனவே,காங்கிரஸ் அவரிடம் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.

எதிர்பார்ப்புகள்: சட்டமன்றத் தேர்தல்களில் அந்தந்த மாநிலப் பிரச்சினைகள்தான் மையப்புள்ளியாக இருக்கும் என்பது சமீப காலத்தில் இமாச்சலப் பிரதேசம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் பாஜகவுக்குக் கிடைத்திருக்கும் மறக்க முடியாத பாடம். அதேவேளையில், மக்களவைத் தேர்தல் என வரும்போது, மோடி எனும் பிம்பம், நாட்டின் பாதுகாப்பு, மதவாதப் பிரச்சினைகள் எனப் பல்வேறு அஸ்திரங்கள் பாஜகவின் கையில் எப்போதும் தயாராக இருக்கும்.

அவற்றை முறியடிக்க எதிர்க்கட்சிகளிடம் வலுவான வியூகம் தேவை. ராஷ்ட்ரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட ஒருசில கட்சிகளைத் தவிர பிற கட்சிகள் - திமுக உள்பட – இதற்குமுன்னர் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தவைதான். எனவே, இக்கூட்டணியின் சித்தாந்த இலக்கு கூர்ந்த கவனம் பெறுகிறது.

வெறுமனே மோடி, பாஜக குறித்த விமர்சனங்களை மட்டும் முன்வைப்பதால், வாக்குகளை அள்ளிவிட முடியாது. வாக்காளர்களுக்கு இந்தக் கூட்டணி ஏற்படுத்தவிருக்கும் நம்பிக்கையைப் பொறுத்தே இதன் வெற்றி அமையும். எதிர்க்கட்சிகளின் இணைவு குறித்து சந்தேகம் எழுப்பும் ஒவைஸி, பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ் போன்றோர் இதைப் பற்றிக் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் உணர்ந்திருப்பதாகவே தெரிகிறது. சிம்லாவில் நடைபெறவிருக்கும் இரண்டாவது கூட்டத்தில் இதுதொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும் என நம்புவோம்!

- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in