

‘ஆண்டுக்கு ஆண்டு, தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுபதினம்’ என்றொரு திரைப்படப் பாடல் உண்டு. அந்தப் பாட்டு வந்த பிறகு இன்னும் எத்தனையோ ‘தினங்கள்’ அதனுடன் சேர்ந்துவிட்டன. உலகமய ஊடகங்களின் வருகையோடு அதன் உடனிகழ்வாக வந்த தினங்கள் பல; அதில் முதலாவதாக இடம்பிடித்தது: காதலர் தினம்.
பிப்ரவரி 14 அன்று காதலர்கள் தங்களுக்குள் பரிசுகளைப் பகிர்ந்துகொண்டு மகிழ்வது; பூங்கா, கடற்கரை போன்ற பொது இடங்களுக்குச் சென்று களித்திருப்பது எனக் கொண்டாடத் தொடங்கினர். சமூக வலைதளங்களின் பெருக்கத்தோடு இன்னும் பல ‘தினங்கள்’ நம் வாழ்வில் குறுக்கிட்டன. தந்தையர் தினம், அன்னையர் தினம், இசை தினம் போன்ற தினங்களில் உருக்கமான பதிவுகளால் வலைதளங்கள் நிரம்பிவழியத் தொடங்கின.
கலாச்சார குண்டர்கள்: ஆனாலும், இந்தியாவில் எல்லா ‘தினங்க’ளையும் எல்லோரும் இஷ்டப்படி கொண்டாடிவிட முடியுமா? காதலர் தினத்தால் கடுப்பான இந்துத்துவக் கலாச்சாரக் குண்டர்கள், சுற்றித் திரியும் ஜோடிகளைப் பிடித்து, அந்த இடத்திலேயே தாலியைக் கட்டச்சொல்லிக் கட்டாயப்படுத்தினர்; பெண்ணின் பெற்றோருக்கு போனைப் போட்டுப் ‘போட்டுக்கொடுப்பது’ போன்ற ‘கலாச்சார நடவடிக்கை’களில் இறங்கினர்.
எதிர்ப்புகள் இருந்தாலும், மறுபுறம் ‘வாலன்டைன்ஸ் டே’ என்பது ஒரு வாரம் கொண்டாடப்படும் திருவிழா ஆனது. 12ஆம் தேதி அணைக்கும் நாள். 13ஆம் தேதி முத்த நாள் என்று பொதுவெளிகளில் காதலர்கள் கட்டிப்பிடிக்கவும் முத்தமிட்டுத் தங்கள் காதலை வெளிப்படுத்தவும் தொடங்கினர். நம்முடைய ‘கலாச்சார போலீஸார்’ இன்னும் உக்கிரமடைந்தனர். கேரள மாநிலம் கொச்சியில் ஒரு ஜோடி முத்தமிட்ட ‘கஃபே’ அடித்து நொறுக்கப்பட்டது. காதலர்கள் கொதித்தெழுந்தனர். பொதுவெளியில் முத்தமிடுதல் ஒரு இயக்கமாக மாறியது.
நகை வாங்க ஒரு நாள்: எல்லா தினங்களும் முழுவீச்சுடன் மக்களால் கொண்டாடப்படுவதில்லை. சில பல பதிவுகளைப் போட்டுவிட்டு முடித்துக்கொள்ளும் தினங்களே அதிகம். பலவும் ஐரோப்பா, அமெரிக்கக் கண்டங்களிலிருந்து பிடுங்கி நடப்பட்ட தினங்கள்தாம். வடக்கே கோசலை நாட்டுக் கதை ஒன்றில் இருந்து பறித்துக்கொண்டு வந்து நட்ட தினம் ஒன்று குறுகிய காலத்தில் தமிழ் வாழ்வில் நிலைபெற்றது. அது ‘அட்சய திரிதியை’ எனப்படும் ‘நகை வாங்கும் திருநாள்’. நகைக் கடைகளுக்கு அடித்தது லாட்டரி.
அந்நாளைப் பிறருக்கு அள்ளிக்கொடுக்கும் நாளாகவும் கொண்டாட வேண்டும் என்று அதன் தோற்றக் கதை சொன்னாலும், ‘நகை வாங்க... எங்க கடைக்கு வாங்க’ என்கிற பேரழைப்புகள் பெற்ற கவனம், தானம் தொடர்பான அடிப்படை அம்சத்துக்குக் கிடைக்கவில்லை.
மறக்க முடியாத சிறப்பு தினங்கள்: எத்தனை புதிய தினங்கள் வந்தாலும் என்றென்றும் நம் வாழ்வில் நீடித்திருக்கும் சில தினங்கள் உண்டு. ஒன்று மே தினம். 1886இல் அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில், ‘எட்டு மணி நேர வேலை’ என்கிற முழக்கத்தோடு புறப்பட்ட தொழிலாளர் பேரணி, ரத்தச்சகதியில் மூழ்கடிக்கப்பட்ட தினத்தை உலகமெங்கும் உழைப்பாளர்கள் கொண்டாடிவருகிறார்கள். இந்தத் தினத்தின் முக்கியத்துவத்தை மறைக்க விரும்பிய முதலாளிகள், அதே தினத்தில் செயின்ட் ஜோசப் தினத்தையும் வசந்த காலத்தை வரவேற்கும் மே நாள் கொண்டாட்டத்தையும் பிரபலப்படுத்த முயன்றனர். அத்தனைச் சதிகளையும் முறியடித்துப் பறக்கிறது மே தினக்கொடி.
அடுத்த தினம் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8. ஐரோப்பாவில் பிறந்தாலும் உலகெங்கும் பெண்கள் இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட மகத்தான போராட்ட வரலாறு இருப்பதால், இந்தத் தினம் பற்றிப் படர்ந்து பரவிநிற்கிறது. மறைந்த எழுத்தாளர் இரா.ஜவகர் ‘மகளிர் தினம்: உண்மையான வரலாறு’ நூலில் இந்தத் தினத்தின் வரலாற்றை விளக்கியுள்ளார்.
நவம்பர் 14 பண்டித நேருவின் பிறந்த நாள்; குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறோம். சர்வதேச அளவில் நவம்பர் 20 குழந்தைகள் உரிமைகளை வலியுறுத்தும் நாளாக, குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. நேருவின் மரணத்துக்குப் பிறகு இந்தியாவில் தேதி மாற்றப்பட்டு நவம்பர் 14 என்றானது. குழந்தைகளின் கல்வி, குழந்தை உழைப்பு ஒழிப்பு, குழந்தைத் திருமணங்கள் தடை என எல்லாமே இந்தியாவில் தீர்க்கப்படாத பிரச்சினைகளாகவே நீடிக்கின்றன. போக்ஸோ சட்டம் போடும் அளவுக்குப் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. இவற்றில் முறிப்பை ஏற்படுத்தி உண்மையிலேயே குழந்தைகள் தினத்தைக் கொண்டாட்டமாக்க அனைவரும் கைகோக்க வேண்டும்.
கொண்டாட்டத்துக்குரிய தினங்கள்: சில தினங்கள் மக்கள் மனங்களில் சில வரலாற்று உணர்வுகளைக் கிளர்த்தும் வல்லமை கொண்டவை. ஆகவே, அதற்கு எதிரான சக்திகள், அந்தத் தினங்களின் மீது கருஞ்சாயம் பூச முயல்வதும் நடக்கும். மே தினம் பற்றிப் பார்த்தோம். அதே போன்ற ஒரு தினம்தான், அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினமான டிசம்பர் 6. அம்பேத்கரின் சிந்தனைகள்-செயல்பாடுகளால் ஆத்திரம் கொண்ட சக்திகள் அந்தத் தினத்தின் முக்கியத்துவத்தைக் குறைக்க முயன்றன. டிசம்பர் 6 இன்று அம்பேத்கர் தினமாக மட்டும் இல்லை; பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமாகவும் மாற்றப்பட்டுவிட்டது.
என்சிஇஆர்டி பாடப் புத்தகத்திலிருந்து டார்வின் நீக்கப்பட்டது போல மக்கள் நினைவுகளிலிருந்து சில தலைவர்களை, சில தினங்களை நீக்கிவிட சில சக்திகள் தொடர்ந்து முயன்றாலும், சில தினங்களை யாராலும் அசைக்க முடியாது. ஏனெனில், அந்தத் தினங்களுக்குப் பின்னால் ஒடுக்கப்பட்ட/ உழைப்பாளி மக்களின்/ பெண்களின் ஏக்கங்களும் பெருமூச்சுகளும் கண்ணீரும் கோபாவேசமும் எழுந்து நிற்கின்றன.
எல்லா தினங்களையும் ஃபேஸ்புக் பதிவுகளில் கடந்துவிடுவதைப் போலச் சில தினங்களை நாம் கடந்து போய்விடக் கூடாது. மே தினம், மகளிர் தினம், அம்பேத்கர் தினம், பெரியார் தினம், அறிவியல் தினம் (பிப்ரவரி 28) போன்றவை நம் சமூக வாழ்வின் திசைவழியைத் தீர்மானிக்கும் தினங்கள். அவற்றை நாம் அர்த்தபூர்வமாகவும் உளப்பூர்வமாகவும் எப்போதும் கொண்டாட வேண்டும்!
எத்தனை புதிய தினங்கள் வந்தாலும் என்றென்றும் நம் வாழ்வில் நீடித்திருக்கும் சில தினங்கள் உண்டு. ஒன்று மே தினம்.