

தான் நிகழ்த்திய கொடூரங்களை எல்லாம் ஒரு சின்னஞ்சிறிய பெண் உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவார் என்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருந்த ஹிட்லர் ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்!
கடந்த 78 ஆண்டுகளாக வதைமுகாம்களிலிருந்து மீண்டவர்கள் மூலம் ஹிட்லரின் கொடூரங்கள் வெளிவந்துகொண்டே இருந்தாலும், ஒரு சிறுமியின் டயரிதான் இந்த உலகத்தை முதலில் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பிறகே ஹிட்லரின் கொடுமைகளை உலகம் முழுமையாக அறிந்துகொண்டது எனச் சொல்லலாம். ஜெர்மனியில் பிறந்து, நெதர்லாந்தில் வளர்ந்தவர் ஆன் ஃபிராங்க். யூதர்களை ஒடுக்கும் விதத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்தார் ஹிட்லர். யூதர் என்பதைத் தெரிவிக்கும் விதத்தில் நட்சத்திரம் அணிந்துகொண்டுதான் வெளியே செல்ல வேண்டும். யூதர்கள் நடத்தும் பள்ளிகளில் மட்டுமே அவர்கள் படிக்க வேண்டும். சில மணி நேரமே திறக்க அனுமதிக்கப்படும் யூதர்களின் கடைகளில் மட்டுமே பொருள்களை வாங்கிக்கொள்ள வேண்டும். சைக்கிளை உருட்டிக்கொண்டுதான் செல்ல வேண்டும். வாகனங்களில் பயணிக்கக் கூடாது; விளையாடக் கூடாது எனப் பலப் பல கட்டுப்பாடுகள்.
இத்தனை கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்துகொண்டிருந்த ஆனின் 13ஆவது பிறந்தநாளுக்கு ஒரு டயரி பரிசாகக் கிடைத்தது. படிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்ட ஆன், அன்றாட நிகழ்வுகளை அந்த டயரியில் எழுத ஆரம்பித்தார். அந்த டயரிக்கு ‘கிட்டி’ என்று பெயரும் சூட்டினார். திடீரென்று ஒருநாள் ஆனின் அக்கா மார்கோட்டுக்கு அரசுத் தரப்பிலிருந்து ஆஜராகும்படி ஆணை வந்தது. குடும்பம் பதறிவிட்டது. இப்படி ஆணை அனுப்பப்பட்டவர்களை வதைமுகாமுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். ஆனின் தந்தை ஆட்டோ ஃபிராங்க், தன் அலுவலக மாடியில் தலைமறைவாகத் தங்குவதற்கான ஏற்பாடுகளை ஏற்கெனவே செய்திருந்தார். மிகக் குறைவான பொருள்களை எடுத்துக்கொண்டு குடும்பம் அங்கே குடிபோனது. ஆட்டோ ஃபிராங்கின் நண்பர் குடும்பமும் அங்கு வந்துசேர்ந்தது. அங்கே 8 பேர் தலைமறைவாக வாழ்ந்தனர். அலுவலகம் இயங்கும் நேரத்துக்கு முன்பே வேலைகளை முடித்துவிட வேண்டும். பகல் முழுவதும் சிறு சத்தமும் வராதவாறு அமைதியாக அவரவர் வேலைகளைப் பார்க்க வேண்டும். மாலை அலுவலகம் மூடப்பட்ட பிறகு, மெதுவாகப் பேசிக்கொள்வார்கள்; சமைப்பார்கள்; துவைப்பார்கள்; வானொலி மூலம் செய்திகளை அறிந்துகொள்வார்கள்.
பகலில் ஆனும் மார்கோட்டும் பாடம் படிப்பார்கள். சுருக்கெழுத்துப் பயிற்சியை மேற்கொள்வார்கள். மீதி நேரம் கதைப் புத்தகங்களைப் படிப்பார்கள். வாரம் ஒருமுறை நண்பர்கள் மூலம் உணவுப் பொருள்களும் புத்தகங்களும் வந்துசேரும். ‘தலைமறைவு வாழ்க்கையில்தான் புத்தகத்தின் அருமையை உணர்ந்துகொள்ள முடியும்’ என்று கூறும் ஆன், நாள் தவறாமல் டயரி எழுதினார். எந்த நேரம் பிடிபட்டாலும் வதைமுகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பதால், நிச்சயமற்ற வாழ்க்கையை ஒவ்வொருவரும் வாழ்ந்துவந்தனர். ஆனாலும், சிறிய அளவில் பிறந்தநாள், திருமணநாள் கொண்டாட்டங்களும் இருந்தன. ஒரு மாதம் முழுவதும் சர்க்கரையும் வெண்ணெயும் சாப்பிடாமல் சேர்த்துவைத்து, அம்மாவின் பிறந்தநாளுக்கு இனிப்பு செய்து கொடுத்திருக்கிறார் ஆன்.
அப்பாவின் நண்பர் மகன் பீட்டர் மீது ஆனுக்கு ஈர்ப்பு வந்தது. ஆனாலும், தன் அளவுக்கு பீட்டர் புத்திசாலி இல்லை என்றும் தங்கள் இருவரின் சிந்தனைகளும் ஒத்துப்போகாது என்றும் ஆன் நினைத்தார். இருந்தாலும் தலைமறைவு வாழ்க்கையில் சிறிதேனும் மகிழ்ச்சியைக் கொடுப்பவனாக பீட்டர் இருந்தான் என்பதையும் சொல்கிறார் ஆன்.
எதிர்காலத்தில் தான் என்னவாக வர வேண்டும் என்கிற சிந்தனையும் ஆனுக்கு இருந்தது. பலவற்றை யோசித்து, இறுதியில் தான் ஓர் எழுத்தாளராக வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தார். ஏன்? ஓர் எழுத்தாளரால் மட்டுமே தான் இறந்த பிறகும் எழுத்தின் மூலம் வாழ முடியுமாம்!
நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்தது. சரியான உணவு இல்லை. கிழியாத ஆடைகள் இல்லை. குளிருக்கு இதமான கம்பளி இல்லை. வதைமுகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பற்றியும் வதைமுகாம்களில் கொல்லப்பட்டவர்கள் பற்றியும் செய்திகள் வந்துகொண்டேயிருந்தன. டயரியின் இறுதிப் பகுதியில், ‘நாங்கள் செய்த பாவம் என்ன? எங்களுக்கு அதிகாரம் கிடைத்தால், ஹிட்லரைக்கூட நாங்கள் மன்னிப்போம்’. ‘இந்தப் போருக்கு அரசியல்வாதிகளும் பெருமுதலாளிகளும் மட்டுமே காரணம் அல்ல. மக்களுக்கும் பங்கிருக்கிறது. இந்தப் போருக்கு எதிராக மக்கள் புரட்சி நடத்தியிருக்க வேண்டாமா?’ என்றெல்லாம் தன் வயதையும் மீறிய சிந்தனைகளை டயரிக் குறிப்புகளில் கொட்டியிருக்கிறார் ஆன்.
யாரோ ஒருவர் இவர்களைக் காட்டிக்கொடுக்க, நாஜிப் படையினர் ஆண்களை ஒரு வண்டியிலும் பெண்களை ஒரு வண்டியிலும் அழைத்துச் சென்றனர். வதைமுகாமில் ஆனின் அப்பாவைத் தவிர அனைவரும் இறந்துபோனார்கள். குடும்ப நண்பர் மையீப் கையிஸ், ஆனின் டயரியைப் பத்திரப்படுத்தி, ஆட்டோ ஃபிராங்கிடம் ஒப்படைத்தார். 1945, ஜூன் 25 அன்று டச்சு மொழியில் ‘ஆன் ஃபிராங்க் டயரி’ வெளிவந்தது. 1952ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்து உலகத்தை உலுக்கிய டயரி, இன்று 60க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவந்து, 3 கோடிப் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியிருக்கிறது. இறந்த பின்னும் வாழும் ஆனின் லட்சியம் நிறைவேறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்!
ஜூன் 25, ஆன் ஃபிராங்க் நாள்குறிப்பு முதன்முதலில் வெளியான நாள்