எழுத்தாளர் ஆனேன்: நண்பன் மாட்டிவிட்ட வாய்ப்பு! - ராஜேஷ்குமார்

எழுத்தாளர் ஆனேன்: நண்பன் மாட்டிவிட்ட வாய்ப்பு! - ராஜேஷ்குமார்
Updated on
2 min read

படித்துவிட்டு ஒரு நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். நான் எழுத்தாளன் ஆனது உண்மையிலேயே ஒரு விபத்துதான். கோவை அரசுக் கல்லூரியில் நான் இளங்கலை அறிவியல் படித்துவந்த காலத்தில் நிகழ்ந்தது அது. நான் கதைகள் படிக்கிற ஆள் இல்லை. ‘குமுதம்’, ‘விகடன்’கூடப் பார்ப்பேனே தவிர, ஊன்றிப் படித்தது இல்லை. 1968இல் மூன்றாம் ஆண்டு படித்துவந்தபோது கல்லூரி ஆண்டு மலருக்கு மாணவர்களிடம் படைப்புகள் கேட்கப்பட்டன.

அப்போது தமிழ்த் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் மீனாட்சிசுந்தரம், கவிதைகள் பலரும் கொடுத்துவிட்டார்கள். அதனால் யாராவது கதை எழுதிக் கொடுங்கள் எனக் கேட்டார். அப்போது என் அருகிலிருந்த நண்பன் என்னை மாட்டிவிடுவதற்காக “சார், இவன் நல்லா கதை எழுதுவான்” எனச் சொல்லிவிட்டான். அவரும் “நாளை வரும்போது ஒரு கதை எழுதிக் கொண்டுவா” எனச் சொல்லிவிட்டார். எனக்குக் கதை எழுதத் தெரியாது என நான் சொன்னதை அவர் நம்பவில்லை. மறுநாள் கதை இல்லாமல் சென்றபோது, அவர் கோபப்பட்டார். “கதை இல்லாமல் கல்லூரிக்கு வர வேண்டாம்” எனச் சொல்லிவிட்டார்.

வேறு வழியில்லாமல் கோவி. மணிசேகரன், நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன் இவர்களையெல்லாம் வாசித்துப் பார்த்தேன். உண்மையில் அவர்கள் எழுத்து எனக்குப் புரியவில்லை. அந்தக் காலத்துக் கதைகளில் பெரும்பாலும் காதல்தான் மையமாக இருக்கும். நானும் காதல் கதை எழுதலாம் எனத் தீர்மானித்தேன். ஒரு ஊரில் பட்டியல் சாதிப் பெண்ணுக்கும் இடைநிலை சாதியைச் சேர்ந்த ஒரு பையனுக்குமான காதல்தான் கதை. ஊர்க்காரர்களும் பெற்றோரும் கூடிக் காதலர்களை ஒதுக்கிவைக்கிறார்கள். காதலர்களோ இதை எதிர்த்து வாழத் தீர்மானிக்கிறார்கள். எழுதுவதற்கு எவ்விதமான மொழிநடையும் இல்லாமல் எழுதப்பட்ட அந்தக் கதையே கல்லூரியில் பெரிய அளவில் பேசப்பட்டது. இது எனக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்தது.

‘மாலை முரசு’, கோவைப் பதிப்பில் ‘முரசு மலர்’ என்கிற இணைப்பிதழைக் கொண்டுவந்தது. அதில் வாசகர்கள் சிறுகதைகள் எழுத அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது. தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைக்கு ரூ.10 சன்மானம் கொடுக்கப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்தக் காலத்து 10 ரூபாய் என்பது இந்தக் காலத்து 1,000 ரூபாய்க்குச் சமம். நானும் சிறுகதை எழுதி அனுப்பலாம் எனத் தீர்மானித்தேன். அதுதான் என் முதல் க்ரைம் த்ரில்லர் கதை. ‘உன்னை விடமாட்டேன்’ என்கிற தலைப்பில் அந்தக் கதையை எழுதினேன். ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் ‘உன்னை விடமாட்டேன் உண்மையில் நானே’ எனத் தொடங்கும் பாடல் உண்டு. அதில் பானுமதி, கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டுச் சபையில் நிற்கும் எம்ஜிஆரை நோக்கிக் கையில் கத்திவைத்தபடி பாடி ஆடுவார். உண்மையில் எம்ஜிஆரை அந்தக் கத்தியில் குத்துவது மாதிரி இருக்கும். ஆனால், பாடலின் இறுதியில் பானுமதி, எம்ஜிஆரின் கைக்கட்டைத் தன் கத்தியால் அறுத்துவிடுவார். இந்த சஸ்பென்ஸ் எனக்குப் பிடித்திருந்தது. இந்த உத்வேகத்தில் அந்தக் கதையை எழுத நினைத்தேன். அதனால் அதற்கு ‘உன்னை விடமாட்டேன்’ எனத் தலைப்பு வைத்தேன்.

அந்தக் கதையைப் புதுமையாக எழுத நினைத்தேன். பொதுவாக, கதாபாத்திரங்கள் மூலம் கதை சொல்லும் முறையிலிருந்து விலகி, ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தன் கதையைச் சொல்வது மாதிரி அந்தக் கதையின் விவரிப்பு மொழியை அமைத்தேன். நண்பனின் காதலியைப் பாலியல் பலாத்காரம் செய்துவிடுவான் ஒருவன். இதை நண்பன் பார்த்துவிடுகிறான். அதனால் நண்பனைக் கொன்றுவிடுகிறான். தனக்குத் துரோகம் செய்து தன்னையும் கொன்ற அவனை எப்படி ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ பழிவாங்குகிறது என்பதுதான் கதை. கதையை அனுப்பிய அடுத்த வாரமே பிரசுரமானது. ‘மாலை முர’சின் அப்போதைய ஆசிரியர் அந்தக் கதையை வாசித்துவிட்டு “ரொம்பவும் வித்தியாசமாக எழுதியிருக்கிறீர்கள். எழுத்துலகில் முக்கியமான இடத்துக்கு வருவீர்கள்” என வாழ்த்தினார். 

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in