

கனடாவுக்கு அமெரிக்காவிலிருந்து தரைவழியாகச் செல்வதுதான் எளிது. ஆனால், நான் விமானம் மூலம் சென்றேன். நியூயார்க் கென்னடி விமான நிலையத்தில் என்னை தீவிரப் பரிசோதனைக்கு உள்ளாக்கினார்கள். காரணம், என்னுடைய கடவுச்சீட்டில் (பாஸ்போர்ட்) பல இஸ்லாமிய நாடுகளுக்குச் சென்றிருப்பதன் முத்திரைகள் இருந்தமைதான்.
என்னுடைய விரல்களை ஓர் இயந்திரம் மூலம் பரிசோதனை செய்த ஆப்பிரிக்க-அமெரிக்கர் 7 அடி உயரமாவது இருப்பார். குரல், குழந்தையுடையதைப் போல மெல்லியது.
“எதற்காக இந்தப் பரிசோதனை?”
“நீங்கள் ஏதாவது தொடக்கூடாததைத் தொட்டிருந்தால் இது உடனே கண்டுபிடித்துவிடும்.”
தொடக்கூடாதது என்று அவர் குறிப்பிட்டது, வெடி மருந்துப் பொருட்களை என்று எனக்குத் தெரிந்திருந்தது. அவர் மேலும் சொன்னார்:
“காலையில் நீங்கள் என்ன உணவு உண்டிருக்கிறீர்கள் என்பதைக்கூட அது சொல்லிவிடும்.”
“நான் காலையில் ஏதும் உண்ணவில்லை.”
“பார்த்தீர்களா? அதையும் இது என்னிடம் சொல்லி விட்டது. நேரே சென்று இடதுபுறம் திரும்பினால் ‘டங்கிங் டோனட்ஸ்' இருக்கிறது. அதில் நல்ல காலை உணவு கிடைக்கும்.”
“அரசு செலவிலா?”
“நிச்சயமாக. நீங்கள் எங்கள் விருந்தாளியாக இரண்டு மூன்று நாட்கள் தங்கினால், அருமையான இரவு உணவுகூட அரசு செலவில் கிடைக்கும்.”
“மிக்க நன்றி. ஆளை விட்டால் சரி.”
புன்னகையின் அவசியம்
கனடாவின் டொராண்டோ நகரத்துக்குள் நுழை வதற்கு அதிகக் கெடுபிடி இல்லை. ஆனாலும், என்னுடைய கடவுச்சீட்டை சோதனை செய்தவர் இந்தியராகத் தெரிந்தாலும் முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டிருந்தார். எனது நாட்டில் ஏன் நுழைகிறாய் என்பதைக் கேட்காமல் கேட்பதாக எனக்குத் தோன்றியது. உலகம் முழுவதும் ‘வாயில் காப்பாளர்'களுக்குப் புன்னகையின் அவசியத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று நினைக்கிறேன். புன்னகைகூடத் தேவையில்லை, வருகைதருபவர்களின் தோல் நிறம் மட்டுப்பட்டால், கடுகடுப்பு அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது நிச்சயம் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
என்னை வரவேற்ற தமிழ் நண்பர்கள், புன்னகையின் அவசியம் தெரிந்தவர்கள். பூச்செண்டோடு, மலர்ந்த முகங்களுடன் அவர்கள் வரவேற்றது எனக்கும் ஒரு மலர்வை அளித்தது.
டொராண்டோ தமிழர்கள்
கனடா, பரப்பளவில் இந்தியாவைவிட மூன்று மடங்கு பெரியது. ஆனால், மக்கள்தொகை சுமார் 3.5 கோடி மட்டுமே. அண்டாரியோ ஏரிக்கரையில் அமைந்திருக்கும் டொராண்டோ கனடாவின் ஆகப் பெரிய நகரம். எல்லாப் பெரிய நகரங்களின் அடையாளங்களோடு அது இருக்கிறது. மிக உயரமான கட்டிடங்கள். போக்கு வரத்து நெரிசல்கள்.
இந்த நகரத்தில்தான் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று ஒரு தகவல் சொல்கிறது. கனடா அரசின் கணக்குப்படி, சுமார் 2 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். ஆனால், நண்பர்கள் 3 லட்சத்துக்கும் மேல் என்கிறார்கள். ஸ்கார்பரோ, மார்க்கம் போன்ற பகுதிகளில் தமிழ் முகங்கள் அதிகம் தெரிகின்றன.
அன்பும் தமிழும்
‘அன்பினுக்கு அவதி இல்லை, அடைவு என் கொல் அறிதல் தேற்றேன்' என்பது கம்பனின் வாக்கு.
அன்புக்கு எல்லைகள் இல்லை. காரணமே இல்லாமல் ஒருவரிடம் அன்புகொள்ள முடியும். இந்த இயல்புதான் மனிதகுலத்தை மாபெரும் அழிவுகளின் விளிம்புகளிலிருந்து மீட்டுக்கொண்டுவந்திருக்கிறது. இன்று டொராண்டோ நகரில் வாழும் ஈழத் தமிழர்கள் பேரழிவின் விளிம்பு வரை சென்று மீண்டவர்கள். அன்பின் அருமையை முழுமையாக அறிந்தவர்கள். இருந்தாலும், தமிழ் மொழி மீதும் தமிழில் எழுதுபவர்கள் மீதும், பலனேதும் எதிர்பார்க்காமல், பெருநகரக் கலாச்சாரச் சாக்கடைகளில் ஆழ்ந்துவிடாமல், முழு வீரியத்துடன் அவர்கள் காட்டும் அன்பு என்னை அதிசயிக்க வைத்தது. தமிழ் மொழியின் மறந்துபோன அழகுகள் அவர்கள் பேச்சில் மின்னலிடுகின்றன. முழுக்கமுழுக்க ஆங்கிலம் பேசப்படும் நாட்டில், ஆங்கிலச் சொற்களே அநேகமாக இல்லாமல் தமிழ் பேசப்படுகிறது. எனக்கு அவர்களுடன் பேசுவதற்கே வெட்கமாக இருந்தது. ஆழ்ந்த துயரை அனுபவித்தவர்கள்தான் ஆழ்ந்த அன்பைக் காட்ட முடியும் என்பதற்கு ஈழத் தமிழர்கள் சான்று. அவர்களில் எனக்குக் கிடைத்தற்கரிய நண்பராகக் கிடைத்தவர் செல்வம்.
‘காலம்' செல்வம்
செல்வம் கடந்த 24 ஆண்டுகளாக, பல இடை யூறுகளுக்கு இடையில் காலம் என்ற இலக்கியப் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்திக்கொண்டுவருகிறார். இன்று தமிழ் இலக்கிய உலகில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர்கள் எல்லோரும் ‘காலம்' பத்திரிகை யில் எழுதியிருக்கிறார்கள். அவருடன் ஈழப் போராட் டத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது “சூடு அடித்து விளைந்த களம் சுடுகாடாய்ப் போனது” என்று அவர் சொல்லியிருப்பதை நினைவுபடுத்தினேன். அவர் சொன்னது: “காந்திக்கும் பிரபாகரனுக்கும் சின்ன ஒற்றுமைகள் இருந்தன. இருவரும் மிகவும் நேர்மை யானவர்கள், கடுமையானவர்கள். ஒருவரிடம் ஆயுதம் இருந்தது. மற்றவரிடம் அது இல்லை. காந்தி ஆயுதத்தை எடுக்காது விட்டதற்கு, அது வெள்ளை யரை எதிர்ப்பதைவிட தமது மக்களுக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்ற பயத்தில்தான். புலிகளோ ஏனைய இயக்கங்களோ எந்த மக்களுக்காகப் போராட முற்பட்டார்களோ அம்மக்களை நேசிக்கவில்லை. நேசித்திருந்தால் போராட்ட வடிவம் மாறுபட்டிருக்கும். ஆனால், புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே புலி களுக்கு 95 சதவீதத்துக்கும் மேல் ஆதரவு இருக்கும்.”
தமிழ் இலக்கியத் தோட்டம்
தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான அ. முத்து லிங்கம் ‘தமிழ் இலக்கியத் தோட்டம்' என்ற அமைப்பு ஒன்றை நடத்திவருகிறார். தமிழுக்காக வழங்கப்படும் முக்கியமான விருதுகளில் ஒன்றான ‘இயல்' விருது இந்த அமைப்பால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. காய்தல் உவத்தல் இல்லாமல் வழங்கப்படும் மிகச் சில விருதுகளில் இதுவும் ஒன்று. சுந்தர ராமசாமிக்கு 2001-ம் ஆண்டு இந்த விருது முதலாவதாக வழங்கப் பட்டது. 2013-ம் ஆண்டுக்கான விருது தியடோர் பாஸ் கரனுக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது. விழாவில் நானும் பங்கேற்றேன். ஒரு விழா எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக அது அமைந்திருந்தது. ‘இயல்' விருது மட்டுமின்றித் தமிழின் பல்வேறு துறைகளில் முன்னின்றவர்களுக்கும் விருதுகள் வழங்கப் பட்டன. யாரும் 10 நிமிடங்களுக்கு மேல் பேசவில்லை. ‘வானத்து அமரன் வந்தான் காண்' போன்ற மிகைகள் அறவே இல்லை. வந்திருந்த கனடா நாடாளுமன்ற உறுப்பினர்-தமிழர், பெண், கனடா நாடாளுமன்றத்தில் தமிழில் பேசியவர் - அமைதியாக எந்த ஆரவாரமும் இல்லாமல் உட்கார்ந்திருந்தார். கடைசியாகச் சில வார்த்தைகள் பேச வாய்ப்பு கிடைத்ததும் தன்னைப் பற்றிப் பேசாமல், தமிழைப் பற்றியும் தமிழ் இலக்கியத் தோட்டத்தைப் பற்றியும் பேசி விடைபெற்றுக்கொண்டார். இவை எல்லாவற்றையும் விட என்னைக் கவர்ந்தது விருது பெற்றவர்களைத் தமிழில் அறிமுகம் செய்த பள்ளி மாணவிகள்தாம். தமிழுடை அணிந்து, அழகான, தெளிவான உச்சரிப்புடன் அவர்கள் பேசியது எல்லோருக்கும் மிகுந்த நிறைவைத் தந்தது. தமிழ்நாட்டில் இவ்வாறு நடக்குமா என்பது சந்தேகம்தான்.
தமிழுக்கு எல்லைகள் இல்லை என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் எல்லைகள், நமது மனங்களைத்தான் வேலி செய்கின்றன.
- பி.ஏ. கிருஷ்ணன், புலிநகக்கொன்றை, கலங்கிய நதி ஆகிய நாவல்களின் ஆசிரியர், பொதுத்துறை நிறுவனமொன்றின் ஓய்வுபெற்ற அதிகாரி. தொடர்புக்கு: tigerclaw@gmail.com