

த
மிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் ஆர்.நல்லகண்ணு மீது, அம்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முதல் குற்றவாளி அவர். இரண்டாம் குற்றவாளி நான். மொத்தம் 11 பேர் மீது வழக்கு.
மரணத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் விவசாயத்தையும் விவசாயிகளையும் உயிர் பிழைக்க வைக்க கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்.நல்லகண்ணு முன்வைத்திருந்தார். விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அமைப்புரீதியாகத் திரண்ட போராட்டத்தில் பங்கேற்றார். இதை தேச விரோதம் என்றும், பொதுமக்களுக்கு இடையூறு செய்துவிட்டார் என்றும் வழக்குப் போடப்பட்டுள்ளது. ஒரு மூத்த அரசியல் தலைவரின் மீது, 93 வயது பெரியவர் மீது இப்படி ஒரு வழக்கு போடுவது எத்தகைய மோசடித்தனமானது! பல லட்சம் பேரின் தற்கொலைக்குக் காரணமான பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கி, நமது விவசாயிகளை அழித்து, அந்நிய பெருநிறுவனங்களுக்குப் பாதுகாப்பு செய்வதைவிட தேச துரோகம், வேறு ஏதாவது இருக்க முடியுமா?
தமிழக அரசியல் தலைவர்களில் நல்லகண்ணு முற்றிலும் வேறுபட்டவர். மாணவப் பருவத்திலேயே அவரது போராட்ட வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது. 1948-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நள்ளிரவில், நாங்குனேரி தாலுக்காவில் புலியூர்குறிச்சி என்னும் கிராமத்தில், பல நாட்கள் அவர் பாதுகாப்புடன் தங்கியிருந்த தலித் மக்களின் குடியிருப்பில் கைதுசெய்யப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு முன் தலைமறைவு வாழ்க்கை. நெல்லை சதி வழக்கில் இவர் சேர்க்கப்பட்டு, தூக்கு தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கைதுசெய்தபோது வெடிகுண்டுகளை வைத்திருந்தார் என்பதற்காக ஆயுள் தண்டனையோடு சேர்த்து மேலும் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறைச்சாலைக்கு செல்லும்போது அவருக்கு வயது 22. சிறையில் அவர் எதிர்கொண்ட சித்ரவதைகளை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு, மீசையை நெருப்பால் பொசுக்கியது காவல் துறை. அப்படியான அடக்குமுறைக்கும் அஞ்சாதவர்மீது, வழக்குப்போட்டு அடக்கிவிடலாம் என்ற தமிழக அரசின் செயல்பாடு நமக்கு வேடிக்கை காட்டுவது போல இருக்கிறது.
மூத்த தலைவர் நல்லகண்ணு மீது வழக்குப் போடுவதற்கு முன் ஜனநாயக போராட்டங்களில் பங்கேற்ற இளைய சமுதாயத்தை பயமுறுத்திவைக்க, தமிழக அரசு கொடிய வழக்குகளைப் போட்டது. யாரெல்லாம் தமிழக மக்கள் உரிமைக்காகப் போராடுகிறார்களோ அவர்களில் இளைஞர்களாகப் பார்த்து, குறிவைத்தது காவல் துறை. பயங்கரவாதம் என்னும் சொல்லை ஒரு கொள்கையாகவே மத்திய அரசு உருவாக்கி வைத்துள்ளது. எந்தப் போராட்டம் நடந்தாலும் அவர்கள் மீது பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறது. தமிழக அரசும் போராடும் தமிழக இளைஞர்களின் கழுத்தில் பயங்கரவாதிகள் அட்டையை மாட்டிக்கொண்டிருக்கிறது.
தைப் புரட்சி என்று பெருமையுடன் கூறப்பட்ட, ஜல்லிக்கட்டு உரிமைக்கான போராட்டம் சென்னை மெரினாவில் நடைபெற்றது. லட்சக்கணக்கில், நாள்கணக்கில் இளைஞர்கள் அங்கு கூடியிருந்தார்கள். பெருங்கூட்டத்தில் எங்கும் ஒரு குழப்பம் இல்லை. இவ்வாறு ஒரு போராட்டத்தை நடத்த முடியுமா என்று உலகமே வியந்து திரும்பி பார்த்த நேரத்தில்தான் ஆட்டோவுக்கும் கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. பயங்கரவாதிகள் கூட்டத்தில் புகுந்துவிட்டதாக செய்திகள் பரப்பப் பட்டன. இந்தக் கொள்ளியை வைத்தவர்கள் காவல் துறையின் கறுப்பாடுகள் என்பதை ஊடகங்கள் அப்போதே அம்பலப்படுத்தின.
இதன் பின்னர் நெடுவாசல், கதிராமங்கலம் என்று நடைபெற்ற போராட்டங்களை எதிர்கொள்ள முடியாத அரசு, தேச துரோகிகளின் போராட்டம் என்றது. கண்மூடித்தனமாக, வழக்குகளைப் போடுவதற்கு இந்த தேச துரோகம் என்னும் சொல் இவர்களுக்குப் பெரிதும் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையில் இவ்வாறு வழக்குப் போடுகிறவர்கள் தான், அரசியல் சட்டத்திற்கு துரோகம் செய்கிறார்கள்.
அதிகாரம் என்பது அமைச்சரவை, நாடாளுமன்றம், சட்ட மன்றங்கள் ஆகியவற்றில் மட்டும்தான் இருக்கிறது என்ற தவறான நம்பிக்கைகள் மக்களிடம் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன. இது மர்மக் குகைகளில் குவிக்கப்பட்ட வெளிப்படைத்தன்மை இல்லாத அதிகாரம். இந்த வட்டத்திற்கு வெளியே உள்ள பல கோடி மக்களிடம்தான் உண்மையான அதிகாரம் இருக்கிறது. மக்களிடம் உள்ள இந்த அதிகாரம் போராட்டங்களின் மூலம், அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளை சுட்டிக்காட்டுகிறது. அதை மாற்றி அமைக்கப் போராடுகிறது. இவை எல்லாம் சட்டத்திற்குப் புறம்பானது என்று கூற முடியுமா? அரசாங்கத்தின் தவறான கொள்கைகளை எதிர்த்துக் கேள்வியெழுப்புவது, ஒவ் வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்ட அடிப்படை உரிமையாகும். இதனைத் தடுக்கும் எந்த அரசாங்கமும் ஜனநாயக விரோத அரசாங்கமாகவே கருதப்பட வேண்டும்.
தமிழகக் காவல் துறைக்கு இன்று ஒரு புதிய நெருக்கடி எழுந்துள்ளது. நமது காவல் துறை பல்வேறு தியாகங்களை அர்ப்பணிப்புடன் செய்து, தனித்துவமான சுயமரியாதையும், சுயகௌரவத்தையும் உருவாக்கி வைத்திருந்தது. மத்திய அரசின் மறைமுகக் கட்டுப்பாட்டுக்கு, இது எந்தக் காலத்திலும் அடிபணிந்தது இல்லை. உறுதியுடன் போராடி வெற்றிபெற்ற பாரம்பரியம் இதற்கு உண்டு. இன்று தமிழக ஆட்சியாளர்களே தமிழகத்தின் சுயமரியாதையைப் பற்றி கவலைப்படாதபோது, காவல் துறையால் என்ன செய்துவிட முடியும்?
போராடுகிறவர்களின் மீது, கொடிய வழக்குகளைப் பதிவு செய்துள்ள தமிழக அரசு, தனக்குத் தெரியாமலேயே புதிய கதவு ஒன்றையும் திறந்துவிட்டது. உரிமை வேட்கை கொண்ட தமிழக மக்களை ஒருங்கிணைக்கும் போராட்டப் பெருவெளி ஒன்று கதவுக்கு வெளியே தெரிகிறது. ஒன்றிணைந்து நின்றால், தொலைநோக்கு கொண்ட மக்களால் ஒரு மாற்று அரசியலைத் தமிழகத்தில் கட்டி அமைக்க முடியும்.
- சி.மகேந்திரன், ஆசிரியர்,
தாமரை இலக்கிய இதழ்,
தொடர்புக்கு:
singaram.mahendran@gmail.com