

எனக்கு வான்காவின் ஓவியங்களை மிகவும் பிடிக்கும், நவீன ஓவியத்தின் தனிப்பெரும் கலைஞன் வான்கா. அவரது புகழ்பெற்ற ‘நட்சத்திரங்களுடனான இரவு’ (The StarryNight) என்கிற ஓவியம், தைல வண்ணத்தில் 29x36 அங்குல அளவில் வரையப்பட்டது. அது இன்று நியூயார்க் நவீனக் கலை அருங்காட்சியகத்தில் உள்ளது.
1889ஆம் ஆண்டு இந்த ஓவியத்தை வான்கா வரைந்தபோது, சென்ட் ரெமி என்ற இடத்தில் உள்ள மனநலக் காப்பகம் ஒன்றில் தங்கி சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். அவருக்குத் தீவிரமான மனக்குழப்பங்களும் சஞ்சலங்களும் கடுமையான தனிமையும் மிக்க நாள்கள் அவை. இந்த ஓவியத்தைத் தனது படுக்கை அறையின் ஜன்னல் வழியாகப் பார்த்து வரைந்தார் என்கிறார்கள். ஆனால் ஓவியத்தில் நாம் காண்பது, அவரது நினைவில் எரிந்துகொண்டேயிருக்கும் இரவு ஒன்றின் மிச்சமே. ஓவியத்தைப் பார்க்கும்போது நமக்கு முதலில் தோன்றுவது மயக்கமூட்டும் எவ்வளவு அற்புதமான இரவு என்பதே.
வான்கா காட்டும் நட்சத்திரங்கள் நிரம்பிய இரவு எப்படியிருக்கிறது? ஓவியத்தில் நம்மை முதலில் ஈர்ப்பது அதன் விசித்திரம். குறிப்பாக, நட்சத்திரங்களும் வானமும் பிரதானமாகி அதனடியில் ஊர் சிறியதாக மங்கியிருப்பது. அடுத்தது, ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள மஞ்சளும் அடர்நீலமும் கொண்ட வண்ணத் தேர்வு. ஆரஞ்சு வண்ணம் பொங்கிவழியும் பிறைநிலவு, இரவின் ஏகாந்தமான அழகு, அதனடியில் அமைதியாக உறங்கும் வீடுகள். தனித்த தேவாலயம். வானுயரம் வரை பெரிதாகி உள்ள சைப்ரஸ் மரம். இவை எல்லாம் இயற்கையின் மர்மம் கலையாத வசீகரம்.
பார்வையாளனைக் கூடவே அழைத்துச் செல்லும் அக இயக்கம் இந்த ஓவியத்தினுள் உள்ளது. உற்றுப் பாருங்கள்... ஓர் அலை நம்மை இழுத்துப்போவதுபோல நட்சத்திரங்களின் வழியே நிலவைப் பார்த்து அதிலிருந்து கீழிறங்கி நகர்ந்து, கிராமத்தின் மீது ஒரு பறவைபோல நாம் பறந்து போக முடிகிறது இல்லையா? அதுதான் இந்த ஓவியத்தின் தனித்துவம். குழந்தைப் பருவத்தில் பின்னிரவு எப்படியிருக்கும். நாம் கொண்ட ஏக்கத்தின் புறவடிவம்போலவே இந்த ஓவியம் இருக்கிறது. இவ்வளவு அழகான நட்சத்திரங்களும் அடர்ந்த இருளும் கொண்ட இரவு, தனித்த ஒளிர்வுடன் பேரழகாக உலகை மாற்றியிருப்பதை அறியாது, நாம் உறங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறதா?
வான்காவின் தூரிகை சாமுராயின் கத்தியைப் போலப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எவ்வளவு வலிமையான தீற்றல்கள்; துடிப்பான, சீற்றமான வண்ணங்கள். எனக்கு இந்த ஓவியத்தைப் பார்க்கும்போதெல்லாம் ‘விழித்திருப்பவனுக்கு இரவு நீண்டது’ என்ற புத்தரின் மொழிதான் நினைவுக்கு வருகிறது. ஓவியத்தில் பதினோரு நட்சத்திரங்கள் இருக்கின்றன. இவை ஒன்றுபோல மற்றொன்று இல்லை. அதன் இயக்கம் ஒரு சீற்றம்மிக்க அலைபோல் இருக்கிறது. நட்சத்திரங்கள் என்றதும் ஐந்து முனைகள் கொண்ட பொது வடிவம்தான் நம் நினைவுக்கு வரும். அதை இந்த ஓவியம் கலைத்துப் போடுகிறது. இதில் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு நெருப்புக் கோளம் போலிருக்கிறது. அவை உலகைக் காணவந்த யாத்ரிகர்களைப் போலவே அலைகின்றன. அடர்ந்த நீல நிறத்தில் மஞ்சள் பூக்களைப் போல அந்த நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன. நட்சத்திரங்கள் எவ்வளவுதான் அறிவியல்பூர்வமாக விளக்கப்பட்டாலும் இன்றும் அவை மர்மமாகவே இருக்கின்றன.
இம்பிரெஷனிச ஓவிய வகைபோல இருந்தாலும், வான்கா தீட்டும் முறை தனித்துவமாக இருக்கிறது. வான்கா நிறங்களைப் பயன்படுத்துவதில் தனித்துவம் கொண்டவர். அவரைப் போல மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களைப் பயன்படுத்தியவர் வேறு யாருமில்லை. ஒளியை வான்கா பயன்படுத்தும் முறையைப் பாருங்கள். வாணவெடிகளில் காணப்படுவதுபோல வெளிச்சம் சீறுகிறது. அது இயற்கையில் உருவான வெளிச்சம் போலவும், கதகதப்பு போலவும் இருக்கிறது. வேகம் அதன் எதிர்நிலையான நிதானம்; ஆவேசம் அதன் எதிர்நிலையான சாந்தம்; இருளும் வெளிச்சமும்; மேல் செல்லுதலும் இறங்குதலும்; உறக்கமும் விழிப்பும். இந்த ஓவியத்துக்குள் எத்தனை எத்தனை எதிர்நிலைகள்?
பல்லாயிரம் மனிதர்கள் கடந்து வந்த எண்ணிக்கையற்ற இரவுகளை இந்தஇரவுக் ஓவியத்தின் வழியே வான்கா நினைவுபடுத்துகிறார். எல்லாக் காலத்திலும் விழித்திருக்கும் ஒருவன் தனது தனிமையைக்கடந்து செல்ல இரவிடம் தஞ்சம் அடையவே செய்வான் என்பதை இது நினைவூட்டுகிறது. நட்சத்திரங்கள் நிரம்பிய இரவு வான்காவின் தன்னிகரில்லாத ஓவியச் சாதனை. உலகின் மர்மத்தைப் புரிந்துகொள்ள ஓவியர்கள் வழிகாட்டுகிறார்கள் என்பதற்கான சாட்சி இதுவே.
ஜூன் 18: ‘ஸ்டாரி நைட்' ஓவியம் பூர்த்திசெய்யப்பட்ட நாள்
- எஸ்.ராமகிருஷ்ணன்
எழுத்தாளர்
தொடர்புக்கு: writerramki@gmail.com