எழுத்தாளர் ஆனேன்: நாவலாக விரிந்த சிறுகதை

எழுத்தாளர் ஆனேன்: நாவலாக விரிந்த சிறுகதை
Updated on
2 min read

நான் பிறந்த கற்பகநாதர்குளம் ஒரு கடலோரக் கிராமம். தற்போது திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நெய்தலும் மருதமும் மயங்கும் நில அமைப்பு. எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலெனத் தென்னந்தோப்புகள். இடையே சிறிய குளங்கள். நொச்சிக் குத்தடிகளால் சூழப்பட்ட வீடுகள். படிப்படியாகக் காவிரி பொய்க்க எங்களூர் உழவர்கள் வலையெடுத்து மீன்பிடிக்கத் தொடங்கினார்கள். வேம்பு பூத்த முற்றங்களில் முன்னிரவுப் பொழுதுகளில் தமக்கையரிடம் கதை கேட்டு வளர்ந்தவள் நான். அக்கதைகளில் இருந்தவர்கள் ஆகாயத்திலிருந்து இறங்கிவந்த தேவதைகள் அல்லர். அவை பெரும்பாலும் எங்களூர் பெண்களின் கதைகளாகவே இருந்தன. கொஞ்சம் வளர்ந்தேன். உயர்நிலைப் பள்ளியில் படிக்க வேதாரண்யம் போனேன்.

மேல்நிலைப் பள்ளியில் படிக்கத் திருத்துறைப்பூண்டி போனேன். என் கதை கேட்கும் மனம் மட்டும் மாறவே இல்லை. நூலகங்களில் சாண்டில்யனிடம், சுஜாதாவிடம், பஷீரிடம், அம்பையிடம் கதைகள் கேட்டேன். கதை கேட்டு வளர்ந்தஎன்னைக் கதைகள் துரத்தியபடி இருந்தன. கூடப் படிப்பவர்களிடம் கதைகள் சொல்லத் தொடங்கியிருந்தேன். ஆனாலும் என்னிடம் அவர்கள் கவிதைகளை எதிர்பார்த்தார்கள்.

எதுகை மோனையோடு அவர்களிடம் காதல் கவிதைகளையும் லட்சியக் கவிதைகளையும் படித்துக் காட்டியபோது கைதட்டினார்கள். அந்தக்கைதட்டல் ஓசை எப்போதும் என்னைத் தொடர்ந்துவந்தது. இளம்பருவத்தில் அது எனக்குத் தேவைப்பட்டது.

இந்நிலையில், எனக்குத் திருமணமாகியிருந்தது. என் கணவர் கரிகாலன் ஒரு கவிஞர். அதுவரை நான் கவிதைகளென எழுதியவற்றை நினைத்துப் பார்த்தபோது வேடிக்கையாக இருந்தது. என்னுடைய கணவர் ‘களம்புதிது’ இதழ் நடத்தினார். என்ன நினைத்தாரோ திடீரென்று ஒரு நாள், “நீ ஏன் கவிதைகள் எழுதக் கூடாது?” என்று கேட்டார். எழுதிக் கொடுத்தால் இதழில் பிரசுரிப்பதாகவும் கூறினார்.

எனக்குள்ளிருந்த கதைசொல்லியை யாரோ கட்டவிழ்த்துவிட்டதுபோல் இருந்தது. பள்ளி இடைவேளை நேரம். பாடக்குறிப்பு நோட்டில் எழுதத் தொடங்கிவிட்டேன். என் ஆணிவேர் என் அப்பா. யாரைப் பற்றி எழுதலாம் என்று யோசித்தபோது, அவர் ஆரம்பப் புள்ளியாகத் தென்பட்டார். மனிதர்களை நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ பிரித்துப் பார்ப்பது தவறு. ரூமி கூறுகிறபடி சரி, தவறுகளுக்கிடையே மனிதர்கள் வாழ்கிறார்கள். என் அப்பாவும் அப்படித்தான். என் அண்ணனும் அப்படித்தான். குடும்ப அமைப்பில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான உறவுச் சிக்கல்களை அதன் சூட்சுமங்களைத் தேடத் தொடங்கினேன். மங்கலான ஒரு சித்திரம், என் முன்னால் நிழலாடியது.

<strong>சு.தமிழ்ச்செல்வி</strong>
சு.தமிழ்ச்செல்வி

ஓர் அடைமழை நாள். வீட்டைவிட்டு வெளிவர முடியவில்லை. தொழிலுக்குப் போகாமல் எல்லாரும் முடங்கிக் கிடக்கிறார்கள். ஒரு தந்தையும் மகனும் மட்டும் பாலிதீன் தாள்களைத் தலைக்குப் போட்டுக்கொள்கிறார்கள். தமது மீன்பிடிக் கருவிகளுடன் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகிறார்கள். இக்காட்சியைச் சிறுகதையாக எழுத விரும்பினேன். ‘களம்புதி’தில் என் கதையும் பெயரும் வர வேண்டும் என்னும் ஆசையில் எழுதத் தொடங்கினேன். இந்த ஒரு காட்சியை எழுதி முடித்தபோது, இருபது பக்கங்களைத் தாண்டியிருந்தது. அப்போது, அந்தக் காட்சி மட்டுமே முடிவுக்கு வந்ததுபோல இருந்தது. கதையின் முடிவு அதில் இல்லை. அது எங்கோ தொலைவில் இருப்பதுபோலத் தோன்றியது. அந்த முடிவை எட்ட இன்னும் நிறையப் பக்கங்களை எழுதியாக வேண்டும் என்பதை உணர்ந்தேன். எங்கள் பகுதியைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் வே.சபாநாயகத்திடம் எழுதியவரைக்கும் கொண்டுபோய்க் காட்டினேன்.

படித்து வியந்தார். “எழுதித் தேர்ந்தவருடைய படைப்புபோல் இருக்கிறதே. இதை ஒரு நாவலாக விரித்து எழுதுங்கள்” என்றார். கணவரும் ஊக்கமளித்தார். மனதில் உற்சாகம். ஒரே இரவில் தொண்ணூறு பக்கங்கள் வரை எழுதினேன். இருபத்தேழு நாள்களில் முழு நாவலையும் எழுதி முடித்துப் பதிப்புக்குக் கொடுத்தேன். சிறுகதையாக எழுதத் தொடங்கி நாவலாக உருப்பெற்றது. அதுதான் என் முதல் நாவல் ‘மாணிக்கம்’. நாவலைப் பிழை திருத்தம் செய்து பதிப்புக்குக் கொடுத்தோம்.

அது எப்போது புத்தகமாக வரும் என்றெல்லாம் காத்திருக்கவில்லை. உடனடியாக அடுத்த நாவலை எழுத ஆரம்பித்துவிட்டேன். ‘அளம்’ இரண்டாவது நாவல். மூன்று மாதங்களில் எழுதி முடித்திருந்தேன். ‘மாணிக்கம்’ ஸ்நேகா வெளியீட்டிலும் ‘அளம்’ மருதா பதிப்பக வெளியீட்டிலும் ஒரே நேரத்தில் வெளிவந்தன. முதன்முதலில் எனது எழுத்தைப் புத்தகமாகப் பார்த்தபோது அடைந்த பெருமையையும் மகிழ்வையும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. எங்கோ தூரத்திலிருந்து, என் தோழிகளின் கைதட்டல் ஓசையை, மாலை நேரக் காற்று கொண்டுவந்திருந்தது.

சு.தமிழ்ச்செல்வி, எழுத்தாளர், தொடர்புக்கு: thamizhselvi1971@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in