

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர், முத்துப்பேட்டை, கோடியக்கரை எனப் பரந்த பரப்பில், குரவைக் கூத்துக் கலையில் ஈடுபடும் மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல் ‘குரவை’. எழுத்தாளர் சிவகுமார் முத்தய்யாவின் முதல் நாவல் இது. குடி, காதல், காமம் தொடங்கி கலை வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் இது பேசுகிறது. பறை, தவில், நாகஸ்வரம் இசை குறித்தும் விளக்குகிறது.
நாவலில் வரும் ஆண்களைவிடப் பெண்கள் உறுதியானவர்களாகவும் தெளிவான பார்வை உடையவர்களாகவும் உள்ளனர். இந்தப் புதைச் சூழலில் சிக்கிக்கொண்டி ருந்தாலும், பாலியல் உள்ளிட்ட அவர்களது விருப்பத் தேர்வைப் பெரும்பாலும் அவர்களே முடிவுசெய்கின்றனர். ஆட வரும் எந்தப் பெண்ணுக்கும் ஆண்கள் மீதான பார்வையும் வன்மமும் எச்சரிக்கை உணர்வும் இயல்பிலேயே தொடர்கின்றன. காணிக்காரர் சிங்காரம் பறை – சூலமங்கலம் கதிரேசன் பிள்ளை தவில் போட்டியில் சூழ்ச்சியாக, சிங்காரம் சாராயத்தில் நஞ்சு வைத்துக் கொல்லப்பட, அவரது குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது. சிங்காரத்தின் பெண் செவத்தகன்னி தானே காணியாச்சி பார்க்கப் பறையடித்துக்கொண்டு கிளம்புகிறாள். இறுதியில் அவள் பெண்கள் தப்பாட்டக் குழுவைத் தொடங்கி, வாழ்வுக்கும் கலைக்கும் நம்பிக்கையளிக்கிறாள்.
நாவல் ‘அவனில்’ தொடங்கி ‘அவளில்’ முடிகிறது. அவன் நாகூர், வாஞ்சூரில் தன்னை அழித்துக்கொள்கிறான். இதுவும் ஒரு விடுதலைதான். இருப்பினும், அவளின் விடுதலை தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் புதிய உலகம் காண்பதாகவும் இருக்கிறது.
தற்கொலை முயற்சியிலிருந்து மீண்ட வசந்தாவை மனைவி பாப்பாவுக்குத் தெரியாமல் பார்த்துவரும் தவில் கலியமூர்த்தியிடம், “செய்தி கேள்விப்பட்டியா, காலையில போய் அவளப் பாத்துட்டு வருவோமா” (பக்.197) என்று பாப்பா ஒரு காட்சியில் சொல்கிறாள். நாவலில் இம்மாதிரி மனிதம் துளிர்க்கும் இடங்களும் பெண்கள் பெரிய ஆளுமைகளாக மிளிரும் இடங்களும் உண்டு. பேபி, விஜயா, பாப்பா, கோடியக்கரை சித்ரா, செவத்தகன்னி, மேரி, நித்யா, ரேகா எனப் பல ஆளுமைமிக்க விளிம்புநிலைப் பெண்களின் வாழ்வியல் இங்கு நாவலாக மலர்கிறது. தஞ்சை மண்ணில் நெடிதுயர்ந்த கோபுரங்கள், பரந்து விரிந்துப் பாய்ந்தோடும் காவிரி, அதன் கிளையாறுகள், நெற்களஞ்சியத்தின் ஈர நெல் வாசனை, வெற்றிலை பாக்குத் தாம்பூல வாசனை, பக்தி மணம் கமழும் சாஸ்திரிய சங்கீதம், பசும்பால் காபி கிளப்கள், பண்ணையார்கள், மைனர்கள் எனக் காவிரிக்கரை கலாச்சாரத்தின் மறைக்கப்பட்ட பகுதியாக இந்த விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை அமைந்துள்ளது. ஒடுக்கப்பட்ட இவர்களின் வாழ்வைப் போலக் கலையும் நசுக்கப்பட்ட ஒன்றாக உள்ளது.
மாங்காய் வாசனை மிக்க முத்தங்கள், வியர்வையில் கசிந்துவரும் வெந்தய வாசனை (பக்.11), வெயிலில் சேறு காயும் வாசனை, அவன் மேல் வீசும் புளித்த வாடை (பக்.45), மீன் வாசனையில் மணத்துக் கிடந்த தப்படிச்சான் (பக்.230) என அனைத்து வாசனைகளையும் இந்நாவல் வெளிப்படுத்துகிறது. உள்ளும் புறமுமாக அடித்தட்டு மக்களின் கலைசார்ந்த வாழ்வை மட்டுமல்லாது, அவற்றின் சிடுக்குகளையும் நாவல் பேசுகிறது. நாவலில் முன்னும் பின்னுமாகக் கதை நகர்கிறது. வாத்தியார் மயில்ராவணன் கொலை, அவரது மகன் சந்திரன் நண்பன் குமார் துப்பறிதல் என சஸ்பென்ஸுக்குக்கூடப் பஞ்சமில்லை. பாலியல் வல்லுறவிலிருந்து காப்பாற்றும் போராட்டத்தில் கொலையான மயில்ராவணனுக்காகச் சாட்சி சொல்லும் பேபி, ரேகா, நிறுத்தப்பட்ட திருமணத்தை நடத்த உறுதியாக இருந்த நீலவேணி, மிளகாய்க் கொல்லையில் தவறி நடக்க முயலும் கார்மேகத்தை விரட்டியடிக்கும் செவத்தகன்னி எனப் பல கதாபாத்திரங்கள் நாவலின் போக்கைத் தீர்மானிக்கின்றன. தப்படிச்சானே கதியென்று கிடக்கும் காதர். நாகூர் கருவாட்டுக் கடை, முத்துப்பேட்டையில் திருமணம் என்றாலும் மேரியுடன் ஆட்டத்துக்குப் போகும் காதர், அவளின் பெண் குழந்தைகளை வாரிசாக ஏற்றுக்கொள்வதும் நாவலுக்கு மெருகூட்டுகிறது.
சமூகம் கலை, வாழ்வு எல்லாவற்றையும் புனிதம்/தீட்டு, உயர்வு/தாழ்வு போன்ற முரண்களுக்குள் அடைத்துவிடுகிறது. வாழ்வில் மட்டுமல்லாது கலைகளிலும் தீட்டாகி, இந்த விளிம்புநிலை மக்கள் யாருக்காகக் கலையை வாழவைக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. நித்யாவை மணம்புரிய பபூன் ஆல்பர்ட் படும் அவஸ்தைகள் நாவலில் பதிவு செய்யப்படுகின்றன. இக்கலைஞர்களே விளிம்புநிலையினர் என்றாலும் அவர்களில் பெண்களும் பபூன்களும் கடைக்கோடி விளிம்புகள்.
நாட்டார் கலைகள், பண்பாடு என்றெல்லாம் புனிதப்படுத்துவதும் தேவையில்லாதது. இத்தகைய தேவையற்ற சுமைகளை விளிம்புநிலை மக்கள் தூக்கிச் சுமக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு காலகட்டத்தில் இவற்றின் வடிவங்கள் மாற்றமெடுக்கின்றன. இவை சினிமா ஆடல்-பாடல் என வடிவம் எடுத்தாலும் பெண்கள் மீதான வன்முறை, பாலியல் சுரண்டல் என்ற அடிப்படைகள் என்றும் மாறப்போவதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கலை, பண்பாட்டைப் பேணிக் காக்க யாரையும் பலியிட வேண்டாம் என்ற எச்சரிக்கை தேவைப்படும் தருணமிது. நாவல் அதன் திசைவழியில் பயணிப்பதாகத் தோன்றுகிறது. முதல் முயற்சி என்பதால், இதிலுள்ள குறைகளைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை. யாரும் எழுதத் துணியாத அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் கலையம்சங்களையும் தேட வேண்டியதில்லை.