பதிப்புலகின் புதிய வாசல்

கண்ணன்
கண்ணன்
Updated on
2 min read

காலச்சுவடு கண்ணன் 2002 முதல் 2022 வரை எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. பதிப்புத் துறை தொடர்பான நூல்கள் தமிழில் அதிகமாக இல்லாத நிலையில், கண்ணனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு மிகப்பெரிய திறப்பை அளிக்கிறது. ஓரிரு ஆண்டுகளாகப் பதிப்புத் துறையை எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கு இந்நூல் பெரிய வாயிலைத் திறந்திருக்கிறது.

கட்டுரைகளில் பெரும்பாலானவை புத்தகத் திருவிழாக்களில் கலந்துகொண்ட அனுபவத்தையும் அவதானிப்புகளையும் பதிவுசெய்பவை. சில, நூல்கள் கருத்தரங்கத்திலோ வேறு நிகழ்ச்சியிலோ ஆற்றிய உரையாக அமைந்தவை. இதனால் இத்தொகுப்பின் பெரும்பகுதி கண்ணனின் பதிப்புலக அனுபவத்தின் சாரமாக இருக்கிறது. இருபது ஆண்டுகளில் அவர் பெற்றிருக்கும் பரந்துபட்ட அனுபவத்துக்குப் பின்புலமாக இருந்திருப்பவை, அவரது திட்டவட்டமான நோக்கமும் அதற்காக அவர் மேற்கொண்ட திட்டமிட்ட தயாரிப்பும்தான். இதனை கட்டுரைகளில் ஆங்காங்கே உள்ள குறிப்புகள் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. இப்பதிவுகள் தமிழ்ப் பதிப்புத் துறையில் இயங்கும் எவருக்கும் முக்கியமானவை.

இந்நூலில் சில கட்டுரைகள் காப்புரிமை பற்றிப் பேசுபவை. அவற்றில் எழுத்தாளர்களின் அடிப்படை உரிமையான காப்புரிமை விழுங்கப்படும் விதம் பற்றிக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. தமிழ்ப் படைப்புகளைப் பிற மொழிகளில் வெளியிடவும் பிறமொழிப் படைப்புகளைத் தமிழில் கொண்டுவரவும் உள்ள காப்புரிமை நெறிமுறைகள் பற்றியும் எழுதியிருக்கிறார். அருந்ததி ராயின் நாவல் தமிழுக்கு வந்த / வராமல்போன கதையைக் கூறும் கட்டுரை காப்புரிமை ஒப்பந்தங்கள் தொடர்பான நடைமுறைகளை விளக்குகிறது. இத்தொகுப்பில் எனக்கு முக்கியமானதாகத் தோன்றும் கட்டுரை இது. மற்றொரு கட்டுரையில் புதுமைப்பித்தன் வெவ்வேறு இதழ்களில் எழுதிய படைப்புகளின் உரிமை அவரையே சாரும் என்றும் டி.எஸ்.சொக்கலிங்கம் எழுதிக்கொடுத்த கடிதத்தைத் தந்திருக்கிறார். காப்புரிமை தொடர்பான இக்கட்டுரைகள் இன்றைய எழுத்தாளர்கள் மனதில் கொள்ள வேண்டியவை.

புத்தகங்களின் உரிமையை விற்றும் பெற்றும் வருவதற்கும் புத்தகங்களின் தரமான தயாரிப்புக்கும் தேவையான உழைப்பு பற்றி விரிக்கும் கட்டுரைகளாகச் சிலவற்றைக் கூறலாம். இந்தக் கட்டுரைகளில் சொல்லப்படுபவை எல்லாம் தமிழ்ப் பதிப்பாளர்களால் பின்பற்றப்பட வேண்டும். தயாரிப்பில் மட்டும் இன்றைய பல பதிப்பகங்கள் வெகுவாக முன்னேறிவிட்டன. ‘சர்வதேசத் தரத்’தில் தயாரிக்கப்பட்டவை எனச் சொல்லும் அளவுக்குக்கூடப் புத்தகங்கள் வருகின்றன. நூல்களின் உள்ளடக்கத் தரத்தை உறுதிசெய்யப் பின்பற்றும் வழிமுறைகள் பற்றி ‘மாற்றுப் பதிப்பகம்’ என்ற கட்டுரையில் எழுதியிருக்கிறார். கண்ணன் ஒரு கட்டுரையில் குறிப்பிடுவதைப் போல உள்ளடக்கத் தரத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் நீண்ட காலமாகச் செயல்பட்டுவரும் தமிழ்ப் பதிப்பகங்கள் சில உள்ளன. ஆனால், அந்தப் பதிப்பகங்களின் நூல்கள் தங்கள் பயணத்தைத் தமிழ் உலகத்துடன் முடித்துக்கொள்கின்றன.

தமிழ்ப் பதிப்புலக வளர்ச்சியை அறிந்துகொள்ள இந்நூலை அனைத்து வாசகர்களும் படிக்கலாம். பல கட்டுரைகள் புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற அனுபவங்களை முன்வைத்தே எழுதப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் புத்தகத் திருவிழாக்களின் வளர்ச்சிப் போக்கையும் பார்க்க முடியும். ஆனால், நூலில் கட்டுரைகளைத் தலைகீழ் காலவரிசையில் அடுக்கியிருப்பது அதற்கு இசைவாக இல்லை. மேலும், அவ்வப்போது எழுதப்பட்ட அதிகமும் அனுபவப் பதிவுகள், உரைகளின் தொகுப்பாக இருப்பதால் இன்னும் எழுதாமல் விட்ட பகுதிகளும் தென்படுகின்றன.

பழ.அதியமானின் ‘கிடைத்தவரை லாபம்’ நூலில் உள்ள தலைப்புக் கட்டுரை காப்புரிமை பற்றிய அடிப்படை அறிமுகத்தைத் தருவது, அதே நூலில் உள்ள செம்மையாக்கம் என்ற கட்டுரையும் முக்கியமானது. பெருமாள்முருகனின் ‘பதிப்புகள் மறுபதிப்புகள்’ நூலில் உள்ள பல கட்டுரைகள் இந்த ரகத்தைச் சேர்ந்தவை. அவற்றைப் போன்ற கட்டுரைகளை இந்நூலில் எதிர்பார்த்து ஏமாந்தேன். காப்புரிமை பற்றிக் கூறும் இடங்களில் புதுமைப்பித்தன் படைப்புகள் தொடர்பாக எழுந்த சர்ச்சை சுட்டப்படுகிறது. ஆனால், அதைப் பற்றிப் போதிய பதிவுகள் இல்லை. அந்த வரலாறு எழுதப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் பாரதி படைப்புகள் நாட்டுடைமையான வரலாற்றை எழுதிய சலபதி அதை ‘எழுதக் கூடாது’ எனவும் பெருமாள்முருகன் கூறுகிறார். ஆனால், கண்ணனின் காப்புரிமை பற்றிய கட்டுரைகளை வாசித்தது, எழுதப்படாத அந்த நூல் பற்றிய ஏக்கத்தைத் தருகிறது.

‘நூல் எரிக்கும் உரிமை!’ என்று ஒரு கட்டுரை இந்நூலில் இருக்கிறது. எரிக்க முடியாத மின்னூல்களைப் பற்றியும் சமீபத்தில் எழுதிய கட்டுரைகளில் கொஞ்சம் கூறுகிறார். அதில் ஒரு செய்தியை மட்டும் மறுக்க வேண்டும் என்று உறுத்திக்கொண்டே இருக்கிறது. நாம் வாங்கிய ஒரு மின்னூல் தடைசெய்யப்பட்டோ வேறு காரணத்தாலோ விற்பனை செய்யப்படும் தளத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்டால், நம்மிடம் இருக்கும் மின்னூல் பிரதியும் மறைந்துவிடும் என்று சொல்கிறார். அப்படி நேராது. ஒரு நூல் மின்னூலாக வெளியாகிவிட்டால் அது முற்றிலும் அழிந்துபோவது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லை. நாம் வாங்கிய மின்னூல் வாங்கப்பட்ட தளத்திலிருந்து நீக்கப்பட்டாலும் நம்மிடம் உள்ள பிரதி நாமே அழித்தால் ஒழிய, அழியாது.

தனது கனவுகள் நனவாகத் தொடங்கியிருக்கும் காலத்தில், இந்நூல் வெளியாவதாக முன்னுரையில் சொல்கிறார். தமிழக அரசின் செயல்பாட்டில் அதன் தடயங்களைக் காண முடிகிறது. அதில் ஒன்று, அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா நடத்துவது. மற்றொன்று, சென்ற ஆண்டில் அறிவிக்கப்பட்ட மாவட்டம் தோறும் புத்தகப் பூங்கா அமைக்கும் திட்டம். இது செயல்பாட்டுக்கு வர வேண்டும். இன்னும் வெகு காலத்துக்கு இதுபோன்ற மற்றொரு நூலைத் தமிழில் வேறு யாரும் எழுதப்போவதில்லை.

- அழிசி ஸ்ரீநிவாசன், பதிப்பாளர் | தொடர்புக்கு: sharetosrini@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in