

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான (MBBS) அங்கீகாரம் தேசிய மருத்துவ ஆணையத்தால் (National Medical Commission) ரத்துசெய்யப்பட்ட விவகாரம் சமீபத்தில் பேசுபொருளானது. கண்காணிப்புக் கேமராக்கள் செயல்படவில்லை, ஆதாருடன் கைவிரல் ரேகைப் பதிவு பின்பற்றப்படவில்லை போன்றவையெல்லாம் அதற்குக் காரணங்களாகச் சொல்லப்பட்டன. தமிழ்நாடு அரசு அந்தக் குறைகளையெல்லாம் உடனடியாக நிவர்த்தி செய்து ஸ்டான்லி, தருமபுரி கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறது.
விளக்கம் கேட்டு, அந்தக் குறைகளை நிவர்த்தி செய்யச் சொல்லியிருந்தாலே போதும். இந்தச் சின்ன விஷயத்துக்காக, மிகச் சிறந்த கட்டமைப்பைக் கொண்ட தமிழ்நாட்டின் ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட மூன்று மருத்துவமனைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அளவுக்குத் தேசிய மருத்துவ ஆணையம் சென்றது ஏற்றுக்கொள்ள முடியாதது. ரத்து உறுதிசெய்யப்பட்டிருந்தால், அரசு ஒதுக்கீட்டில் கிட்டத்தட்ட 500 இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களைத் தமிழ்நாடு ஒருவேளை இழந்திருக்கும். அப்படி நடந்திருந்தால், அரசு இடங்களை நம்பியுள்ள ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்து மாணவர்கள்தான் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
மத்திய அரசின் தலையீடு: கடந்த பத்தாண்டுகளில் மருத்துவக் கல்வியில் பெருமளவு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. சுகாதாரம், மாநில அரசின் பொறுப்பில் இருந்தாலும், மத்திய அரசு மருத்துவக் கல்வியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டது என்றே சொல்லலாம். அதற்காகவே தேசிய மருத்துவ ஆணையத்தை நிறுவி, பல்வேறு மாற்றங்களைச் செய்துவருகிறது.
குறிப்பாக, ஒரு பேராசிரியரின் கீழ் இரண்டு முதுநிலை இடங்களை மட்டுமே வைத்துக்கொள்ளலாம் என்ற விதியை நான்கு இடங்கள்வரை வைத்துக்கொள்ளலாம் என்று தளர்த்தியது. இதன் விளைவாகத் தனியார் மருத்துவக் கல்லூரிகள் குறைந்த அளவு பேராசிரியர்களை வைத்துக்கொண்டு, அதிக எண்ணிக்கையிலான மருத்துவ இடங்களைப் பெற்றன.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் அது சாத்தியமில்லை. ஏனென்றால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிக அதிகம். தேசிய மருத்துவ ஆணையம் குறிப்பிடும் குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவர்களைக் கொண்டு அரசு மருத்துவமனைகளை நடத்த முடியாது.
இருந்தும் தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் இந்த விதியைப் பயன்படுத்திக்கொண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றிய ஏராளமான பேராசிரியர்களும் உதவிப் பேராசிரியர்களும் கட்டாய இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தொடராத மறுஆய்வு: அப்போதே தமிழ்நாடு சுகாதாரத் துறையின் இந்தச் செயலை எதிர்த்து அரசு மருத்துவர் சங்கங்கள் போராடின. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தேசிய மருத்துவ ஆணையம் நிர்ணயித்த பேராசிரியர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கையை மட்டும் கணக்கில் கொள்ளாமல், மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று அன்று மருத்துவர்கள் போராடியதை அன்றைய எதிர்க்கட்சியான திமுக ஆதரிக்கவும்கூடச் செய்தது.
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி, இந்தப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டே, நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்து தேவையான பணியிடங்கள் இருக்க வேண்டும் என்ற அரசாணை 354-ஐ 2009இல் கொண்டுவந்தார். மேலும், காலத்துக்கு ஏற்றவாறு இந்தப் பணியிடங்களை உயர்த்திக்கொள்ள ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்யவும் வழிவகை செய்துகொடுத்தார். ஆனால், அதற்குப் பிறகு இன்றுவரை அந்த மறுஆய்வு நடக்கவில்லை.
கூடுதல் சுமை: தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களைக் கண்காணிக்கப் பல்வேறு விதிமுறைகளை வகுத்திருக்கிறது. அதில் ஒன்றுதான் ஆதார் எண்ணுடன் இணைந்த கைவிரல் ரேகைப் பதிவு. மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் மருத்துவர்கள் காலையும் மாலையும் இந்தக் கைவிரல் பதிவை வைக்க வேண்டும்.
வரையறுக்கப்பட்ட செய்யப்பட்ட பணி நேரம் என்றால் இது சாத்தியம். ஆனால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு வரையறுக்கப்பட்ட பணி நேரம் என்பதே கிடையாது. மேலும், மருத்துவமனைப் பணிகள் தவிர நீதிமன்றப் பணி, பல்வேறு முகாம்களை மேலாண்மை செய்வது, மக்கள் திட்டங்கள், காப்பீடு தொடர்பான இலக்குகளை அடைவது போன்ற ஏராளமான பணிகள் இருக்கின்றன.
போதாக்குறைக்குக் காலை, மாலை கைரேகைப் பதிவு வைப்பதில் நடைமுறைச் சிக்கல்களும் இருக்கின்றன. இதையெல்லாம் பரிசீலனை செய்ய தேசிய மருத்துவமனை ஆணையம் தயாராக இல்லாதபட்சத்தில், தமிழ்நாடு அரசு இதையெல்லாம் ஒழுங்கு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்கள் எதிர்கொண்டிருக்கும் இந்த நெருக்கடிகளுக்கு ஏற்றவாறு அவர்களின் பணியை வரையறை செய்ய வேண்டும்.
அரசின் நிலைப்பாடு என்ன? - சுகாதாரத்தில் மத்திய அரசின் தலையீட்டைக் கண்டிக்கும் தமிழ்நாடு அரசு, கடந்த சில ஆண்டுகளாக மருத்துவம், மருத்துவம் சார்ந்த பணியிடங்களைத் தேசியச் சுகாதார இயக்கம் (National Health Mission) வழியாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதை ஏன் ஆதரிக்கிறது? மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் மிகக் குறைவான சம்பளத்தில், ஒப்பந்த அடிப்படையில், எந்த இடஒதுக்கீடும் பின்பற்றப்படாமல் நிரப்பப்பட்டு வருவதைத் தமிழ்நாடு அரசு ஏன் தடுக்கவில்லை?
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏராளமான பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர்களுக்கான இடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை; ஏராளமான மருத்துவர்களுக்குப் பணி உயர்வு வழங்கப்படவில்லை என்பது குறித்து மருத்துவ சங்கங்கள் அறிக்கைகள் வெளியிட்டிருக்கின்றன. மேலும், நோயாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியிடங்களை நிர்ணயிக்கும் அரசாணை 354-ஐ உடனடியாகக் கொண்டுவரவும் சில மருத்துவ சங்கங்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றன. ஆனால், இதையெல்லாம் அரசு கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.
அடுக்கடுக்கான புகார்கள்: அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டின் வழி சிகிச்சை அளிப்பதை அரசு தொடர்ந்து நிர்ப்பந்தித்து வருவதாகவும், காப்பீடு இல்லாமல் எந்த உயர் சிகிச்சையும் இல்லையெனச் சொல்லும் அளவுக்கு மருத்துவர்களுக்கு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் அரசு மருத்துவர்கள் தொடர்ந்து முறையிட்டு வருகிறார்கள்.
மேலும், மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஒவ்வொரு துறையைச் சேர்ந்த மருத்துவர்களுக்கும் இந்தக் காப்பீடுகளைப் பெறுவதிலும், அதற்கான நடைமுறைகளைக் கவனிப்பதிலுமே நேரம் சரியாக இருக்கிறது, இதன் விளைவாக மாணவர்களுக்குப் பாடம் எடுப்பதில் சிரமத்தை எதிர்கொள்வதாகவும், தேசிய மருத்துவ ஆணையம் சொல்லும் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற முடியாமல் போவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
கடந்த பத்தாண்டுகளாக அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டில் தற்போது 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. இதில் முறையான பணியிடங்களை உருவாக்குவது, போதுமான பேராசிரியர்கள், இணை, உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது, மருத்துவக் கல்வியைக் கவனிப்பது, தேசிய மருத்துவ ஆணையம் அறிவிக்கும் புதுப் புது வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது, மருத்துவ ஆராய்ச்சி, நோயாளிகளின் சேவை என இவை அனைத்தையும் ஒரே ஒரு இயக்குநரகம் மட்டுமே நிர்வகிப்பது நிச்சயம் சிரமமானது.
மருத்துவக் கல்விக்கென்று தனி அமைச்சகத்தை உருவாக்கி, அதன்கீழ் அரசு மருத்துவக் கல்லூரிகளை எல்லாம் கொண்டுவந்தால்தான் அந்தந்த மருத்துவக் கல்லூரிகளின் போதாமைகளை, மருத்துவர் காலிப் பணியிடங்களை, அவர்களுக்கான பணி உயர்வை, வருகைப்பதிவை, தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய வழிகாட்டுதல்களுக்கு ஏற்றவாறு நிறைவேற்ற முடியும். அப்படிச் செய்வதன் வழியாகவே இந்தியாவிலேயே மிக அதிகமான அரசு மருத்துவக் கல்லூரிகளை வைத்திருக்கும் தமிழ்நாட்டின் அரசு மருத்துவக் கல்லூரிகளைக் காப்பாற்ற முடியும்.
தொடர்புக்கு: sivabalanela@gmail.com