உழைப்புச் சந்தையில் சாதியப் பாகுபாடுகள்

உழைப்புச் சந்தையில் சாதியப் பாகுபாடுகள்
Updated on
2 min read

இந்தியாவில் பட்டியல் சாதியினர் மீதான பாகுபாடுகள் பல தளங்களில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அது தொடர்பான விரிவான ஆய்வுகளும் நடைபெறுகின்றன. அந்த வகையில், ‘Scheduled Castes in the Indian Labour Market: Employment Discrimination and Its Impact on Poverty’ (‘இந்திய உழைப்புச் சந்தையில் பட்டியல் சாதி மக்கள்: [அவர்கள்] மீதான வேலைப் பாகுபாடும் வறுமையில் அதன் தாக்கமும்) என்ற நூல் புதிய, முக்கியமான வரவு.

மூன்று ஆசிரியர்கள்: பேராசிரியர்கள் சுகதேவ் தோராத், எஸ்.மாதேஸ்வரன், வாணி இணைந்து எழுதியிருக்கும் இந்நூலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. சுகதேவ், மாதேஸ்வரன் இருவரும் பல ஆண்டுகளாக சாதிக் கொடுமைகளை ஆய்வுக்கு உள்படுத்தி, அதன் வழியாகப் புதிய உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து, சமூக மாற்றத்துக்கான, உறுதியான கொள்கைகளை உருவாக்கப் பரிந்துரை செய்துவருபவர்கள். சுகதேவ் மிகச் சிறந்த பொருளாதார வல்லுநர். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்; பல்கலைக்கழக மானியக் குழு, இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் ஆகியவற்றின் தலைவராகவும் இருந்தவர். மாதேஸ்வரன் தமிழர்; ஈரோட்டைச் சேர்ந்தவர்.

பெங்களூருவில் உள்ள சமூகப் பொருளாதார மாற்றத்துக்கான ஆய்வு நிறுவனத்தில் (Institute for Social and Economic change) பணியாற்றிவருகிறார். கர்நாடக அரசின் மிக உயரிய விருதான கெம்பேகௌடா விருதைப் பெற்றவர். கர்நாடக அரசின் பல கொள்கை ஆக்கங்களில் தனது பங்களிப்பைச் செலுத்தியவர். காத்திரமான ஆய்வுகளுக்காக நன்கு அறியப்பட்ட பொருளியல் வல்லுநர். பேராசிரியர் வாணியும் சமூகப் பொருளாதார மாற்றத்துக்கான ஆய்வு நிறுவனத்தில் பணிபுரிபவர்.

புத்தகம் பேசும் பிரச்சினைகள்: வேலை, வேலைவாய்ப்பு, தொழில், கூலி ஆகியவற்றின்மீது சாதிப் பாகுபாடுகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த பொருளியல் கோட்பாடுகளைப் பற்றி இந்நூல் விரிவாகப் பேசுகிறது. பட்டியல் சாதி மக்களின் மீதான சாதியப் பாகுபாடு, அவர்களின் வறுமையில் எத்தகைய தாக்கத்தை உருவாக்குகிறது என்று விவாதிக்கிறது. வேலை, கூலி, வருவாய் வேறுபாடுகளைக் களைவதற்கு எடுக்கப்பட வேண்டிய உறுதியான கொள்கை உருவாக்கத்தைப் பற்றிப் பேசுகிறது. பொதுத் துறை, தனியார் துறை ஆகிய இரண்டிலும் வருவாய், வேலைவாய்ப்பு, கூலி ஆகியவற்றில் எவ்வாறு சாதியப் பாகுபாடுகள் நிலவுகின்றன என்பதை நிறுவுகிறது. குறைந்த கூலி வேலைகளை எவ்வாறு பட்டியல் சாதி மக்களுக்கானவையாகப் பிரித்து ஒதுக்கி, விளிம்புநிலைக்குத் தள்ளுகிறது என்பதையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இந்த வேறுபாடுகளால் பட்டியல் சாதியினர் மத்தியில் வறுமை அதிகரித்திருப்பதைப் போதிய சமகால ஆதாரங்களுடன் நிரூபணம் செய்கிறது.

புள்ளிவிவரங்கள்: ஆரம்ப நிலை வேலைகளில் பட்டியல் சாதி மக்களே 70%க்கு மேல் பணியாற்றி வருகின்றனர். தரமான வேலைகளில் 29% அளவுக்கு மட்டுமே பட்டியல் சாதி மக்கள் பங்கேற்க முடிகிறது. அதேவேளை, தரமான வேலைகளை முன்னேறிய சமூகத்தினர் 52% பேர் செய்துவருகின்றனர்.

2004-05இல் சாதி அடிப்படையிலான வேலைப் பாகுபாடுகள் 74% ஆக இருந்தது. இது 2017-18இல் வெறும் 1% மட்டுமே குறைந்துள்ளது. இந்த அம்சங்களில் பட்டியல் சாதியினர் தொடர்ந்து பாதிப்புகளை எதிர்கொள்ளும் சூழலில், முன்னேறிய வகுப்பினர் தொடர்ந்து பலன்பெறுவதும் இந்நூலில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, பரவலாக வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய நூல் இது. 

- நா.மணி, பொருளாதாரப் பேராசிரியர், தொடர்புக்கு: tnsfnmani@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in