Last Updated : 27 Oct, 2017 09:31 AM

Published : 27 Oct 2017 09:31 AM
Last Updated : 27 Oct 2017 09:31 AM

பாரம்பரிய மருத்துவம்: சீனா வழிகாட்டுகிறது!

பா

ரம்பரிய மருத்துவத்துக்கு எதிர்ப்பாகவும் ஆதரவாகவும் நேரெதிராக இரு தரப்புகளின் விவாதங்களும் சூடாக நிகழ்ந்துகொண்டிக்கின்றன. இந்தத் தருணத்தில் சீனாவில் பாரம்பரிய மருத்துவத்துக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைப் பற்றிப் பார்ப்பது நம் புரிதலைத் தெளிவுபடுத்திக்கொள்ள உதவும்.

1965-70-களில் உலகெங்கும் இருந்த மிகக் கடுமையான தொற்று மலேரியா. குறிப்பாக, சீனா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளிலும் கொத்துக் கொத்தாக மக்கள் செத்து மடிந்துகொண்டிருந்தனர். மலேரியாவுக்கு அப்போதிருந்த ஒரே மருந்து கொய்னைன் என்பதுதான். கொய்னா மரத்தின் வேர்ப்பட்டைதான் அது. அதைத்தான் சீன மக்கள் பயன்படுத்திவந்தார்கள். ஆனால், பிற்பாடு கொய்னைனுக்கு எதிராக மலேரியா கிருமி எதிர்ப்புத்தன்மையை வளர்த்துக்கொண்டதால் கொய்னைனும்கூட வேலை செய்யாமல் போய்விட்டது.

அதே காலகட்டத்தில் வியட்நாம் போரினால் ஏராளமான போர்வீரர்கள் மலேரியா காய்ச்சலில் இறந்து போனார்கள். அப்போது சீனாவின் ராணுவத் துறை மலேரியாவைக் கட்டுப்படுத்த தன் பாதுகாப்புத் துறையின் கீழ் ஆய்வை முடுக்கிவிட்டது. பெரும்பாலான மக்கள், மலேரியாவால் காய்ச்சல், குளிர் ஜூரம் வந்தாலே பாரம்பரிய சீன மருந்துக் கஷாயத்தில் பலன் பெற்றதை உன்னிப்பாகக் கவனித்த அரசு, பாரம்பரிய சீன மருத்துவத்தை ஆய்வு செய்யச் சொல்லி அறிவியலாளர்களை முடுக்கிவிட்டது. நவீன மருத்துவர்களுக்கும் நவீன ஆய்வாளர்களுக்கும் சீன மருத்துவத்தில் 2 ஆண்டு காலப் பயிற்சியை சீன அரசு கட்டாயமாக்கியது. அதேபோல், பாரம்பரிய சீன மருத்துவர்களுக்கும், அடிப்படை நவீன அறிவியல் கற்றுக்கொடுக்கப்பட்டது. இச்சூழலில்தான், மருந்தியல் பட்டதாரியான யூயூ டு என்ற பெண் ‘மலேரியா கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி’க்கு அதிகாரியாக வருகிறார்.

கூட்டு முயற்சி

மலேரியாவுக்காக மக்கள் அதிகமாக எடுத்துக்கொள்ளும் மூலிகைக் கஷாயங்களை எல்லாம் யூயூவின் குழு சேகரித்தது. கி.மு. 700-லிருந்து கி.பி. 1000 வரையிலான பல நூறு சீன மருத்துவ நூல்களில் உள்ள தகவல்களை வைத்து அந்தக் கஷாயங்களில் எவை பயன் தரக்கூடியவை என்று சீனப் பாரம்பரிய மருத்துவர்களுடன் கலந்தாலோசித்து, சில மருந்துகளைத் தேர்ந்தெடுத்தார்கள். தேர்ந்தெடுத்த கஷாயங்களை, பாரம்பரிய சீன மருத்துவத் துறை, மருந்தியல் துறை, நவீன மருத்துவர்கள் துறை ஆகிய மூன்று துறையினரும் கூட்டாக இணைந்து 1970-களிலிருந்து ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். 1990 வரை இந்த ஆய்வுகள் நீடிக்கின்றன. இந்த ஆய்வில் ‘க்யுங்ஹோ’ (Qinghao) என்கிற தாவரத்துக்கு ‘எண்: 190’ என்று மறைமுகப் பெயர் இடுகிறார்கள். இதன் கஷாயம் பெரிய அளவில் பயன்படக்கூடியது என்று அவர்கள் கண்டறிகிறார்கள். அதன் மூலம் பலர் குணமடைவதையும் கண்கூடாகப் பார்க்கவும் செய்கிறார்கள்.

ஆனால், சாறு எடுத்து அதில் உள்ள சத்துக்களை அறிவியல் முறையில் பிரித்தெடுத்தால் வேலை செய்யவில்லை. ‘கஷாயமாக வேலை செய்யும்போது ஏன் நவீன மருத்துவமாக வேலை செய்யவில்லை?’ என்ற கேள்வியுடன் பாரம்பரிய சீன மருத்துவர்களிடம் திரும்பவும் செல்கிறார்கள். ‘இதர கஷாயங்களைத் தண்ணீரில் கொதிக்க வைத்துத் தயாரிக்க வேண்டும்; ஆனால் இதைத் தண்ணீரில் ஊற வைத்து, அலசி, அதைப் பிழிந்து எடுக்க வேண்டும்,’ என்று சீன மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்தக் கஷாயத்தைச் சூடு செய்தால், அந்தத் தாவர வேதிப்பொருள் வலுவிழக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு பாரம்பரிய சீன மருத்துவத்தில் எப்படி தயாரித்தார்களோ அதே முறையில் ஊறவைத்து அந்த வேதிப்பொருளைப் பிரித்தெடுக்கிறார்கள். அந்த தாவர வேதிப்பொருள் (எண்:190) மலேரியாவுக்கு எதிராக 100% எதிர்ப்பைத் தருவதைக் கண்டறிகிறார்கள்.

அடுத்து நோயாளிகளிடம் பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால், அப்படிக் கண்டறியப்பட்ட சத்து சில நச்சுத்தன்மைகளையும் தருவதை ஆய்வாளர்கள் கண்டறிகிறார்கள். யூயூவுக்கு இது பெரும் கவலையையும் பின்னடைவையும் தருகிறது. அடுத்த மழைப் பருவத்துக்குள் (மலேரியா அப்போதுதான் வரும்) நச்சு இருக்கிறதா இல்லையா என்பதை ஆய்ந்தறிய வேண்டும். யூயூவின் குழு, ‘இத்தனை ஆயிரம் ஆண்டு காலம் பயன்பட்ட பொருள் எப்படி நச்சைத் தரும்? நாமே இந்த மருந்தை எடுத்துக்கொண்டு சோதித்துக்கொள்ளலாம்’ என முடிவு செய்து அவரும் அவரோடு பணியாற்றிய விஞ்ஞானிகளுமே அம்மருந்தை எடுத்துக்கொண்டார்கள்.

மருந்து எடுக்கும் முன்னர் அவர்கள் உடல் நிலை, ரத்தத்தின் பல்வேறு அளவுகள், உடலின் நொதிகள் போன்றவை குறிப்பெடுக்கப்படுகின்றன. ‘எண் 190’ மருந்தை எடுத்துக்கொண்ட பின்னர், என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதைப் பதிவுசெய்தனர். தங்களையே சோதனைக் களமாக்கி, அந்த ஆய்வு முடிவில் அந்த மருந்து 100% பாதுகாப்பு என்பது திட்டவட்டமாக அறியப்படுகிறது.

பின்னர், முதல்கட்டமாக 20 மலேரியா நோயாளிகளுக்கு அந்த மருந்து கொடுக்கப்படுகிறது. 100% பயன் இருப்பதை அறிந்துகொண்ட பின் ஆய்வறிக்கையை உலக அரங்கில் வெளியிடுகிறார்கள். அந்த மருந்துக்கு அர்டிமிசினின் (Artemisinin) எனும் பெயர் இடப்படுகிறது. அதன்பின் 2.5 கோடி ஆப்பிரிக்க, சீன மக்களை அந்த மருந்து உயிர் பிழைக்க வைத்தது.

நோபல் பரிசைப் பெற்றுத்தந்த மருந்து

இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் இந்த இருபது வருட ஆராய்ச்சியில், ஒரு பக்கம் சீனப் பாரம்பரிய மருத்துவர்கள் மலேரியாவுக்கு க்யுங்ஹோவைக் கஷாயமாக மக்களுக்குக் கொடுத்துக்கொண்டுவந்தார்கள்; இன்னொரு பக்கம் நவீன மருத்துவர்கள், சீனப் பாரம்பரிய மருத்துவர்கள், மருந்தியல் ஆய்வாளர்களின் கூட்டு ஆய்வும் தொடர்ச்சியாக நடைபெற்றுவந்தது. இந்த ஆராய்ச்சி நடந்துகொண்டிருந்தபோது ‘இது நச்சுத்தன்மையைக் கொடுக்கும், பலனளிக்காது` என்றும் பல சர்ச்சைகள் எழுந்தன. அவற்றையெல்லாம் தாண்டி சீன அரசின் அணுகுமுறையாலும், ஆராய்ச்சியாளர்களின் கூட்டு முயற்சியாலும் ‘அர்டிமிசினின்` கண்டறியப்பட்டு உலகுக்குக் கிடைத்தது. அந்த மருந்து, 2015-ன் நோபல் பரிசை யூயூவுக்குப் பெற்றுத்தந்தது.

மா சேதுங்கும் பாரம்பரிய மருத்துவமும்

புதிய சீனாவைப் படைத்த மா சேதுங் இப்படிச் சொல்கிறார்: “எனக்குப் பழமைவாதத்தின் மீது நம்பிக்கை கிடையாது. புதிய சீனாவை பழமையின் பிடியிலிருந்து வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்களின் முதல் வாதமே. ஆனால், சீனாவில் பெருவாரியான மக்கள் இந்தப் பாரம்பரிய மருந்தால் குணமடைந்துவருவதாலும், என் மக்களுக்கு இத்துறையில் அதீத நம்பிக்கை இருப்பதாலும் இந்தச் சீனப் பாரம்பரிய மருத்துவத்துக்கு என் அரசு முன்னுரிமை கொடுத்து அதைப் பயன்பாட்டுக்கும் ஆய்வுக்கும் எடுத்துக்கொள்ளும்.” அன்று அவர் எடுத்த முடிவுதான் மருத்துவத் துறையில் சீனாவுக்கு நோபல் பரிசைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது; உலகின் முக்கியமான பாரம்பரிய மருத்துவமாக சீன மருத்துவத்தை இன்று அறிய வைத்திருக்கிறது.

இங்கும் நிலவேம்புக் கஷாயம் உள்ளிட்ட எளிய மருந்துகள், சித்த, ஆயுர்வேத மருந்துகளில் ஏராளமாய் உள்ளன. அர்டிமிசினின் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தை விட மருத்துவ ஆய்வு முறைகள் தற்போது பல மடங்கு உச்சத்தில் உள்ளன. நாம் என்ன செய்யப்போகிறோம்? இப்படியே, ‘பாரம்பரிய மருந்துகளே பலனளிக்காது; நச்சுத்தன்மை கொடுக்கக் கூடும்’ என்று குறை மட்டும் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோமா அல்லது யூயூ டுவை முன்னோடியாகக் கொண்டு அத்தனை மருத்துவத் துறையினரும் ஆய்வறிஞர்களும் கூட்டாகப் பணியாற்றப்போகிறோமா என்பதே நம் முன்னாள் தற்போது உள்ள கேள்வி.

- கு. சிவராமன், சித்த மருத்துவர்,

சித்த மருத்துவ நூல்களின் ஆசிரியர்,

தொடர்புக்கு: herbsiddha@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x