

“நமது வாழ்க்கையில் நமது தேசத்தை, நமது பூமியை நாம் சரியாகப் புரிந்துகொள்வது இன்றியமையாத மானுடக் கடமையாகும். அவற்றைத் தவறாகப் புரிந்துகொள்ள யாருக்கும் உரிமையில்லை. இதிலுள்ள சிக்கல் என்னவெனில், அவற்றில் தவறுகளும் குறைகளும் இல்லாமல் இல்லை. வரலாறு என்பதே அடுக்கடுக்கான தவறுகளையும் அவற்றை எதிர்த்து இடையறாது நடத்தும் போராட்டமாகவே இன்றுவரை நிகழ்கிறது. அந்தப் போராட்டம் நம்பிக்கையோடு நடத்தப்படுகிறது. நட்பையும் அன்பையும் ஒற்றுமையையும் உருவாக்குவதே அந்தப் போராட்டத்தின் இலக்கு” - என ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறுவதுபோல், தம் எழுத்துலகில் நட்பையும் அன்பையும் ஒற்றுமையையும் தனது படைப்புகளால் நமது தேசத்தை, நமது பூமியைச் சரியாகப் புரிந்துகொண்டு நடைபோட்டவர் இந்திரன்.
இந்திரன் எனது பதின் பருவத்தில் எனது தந்தை புலவர் கோவேந்தன் வழியே எங்கள் தமிழ்க் குடும்பத்தில் ஒருவராகத் தத்துப் பிள்ளையாய் வளர்ந்தவர். இவரது இலக்கியப் பயணம் தேடல்... தேடல்... தேடல். அயராது கற்றல், கேட்டல், வாசித்தல் எனத் தொடங்கி ஓவியர், கவிஞர், கலை-இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளர்; கலை எழுத்துலகில் களப்பணியாளர், ஆய்வு நெறியாளர் என மொழிநடையில் முரண்கள் இல்லாமல் நடைபோட்டவர். இந்திரன் தனிப்பட்ட மனிதராக இருந்தாலும், மற்ற தனிநபர்களைப் போல் இல்லாமல் ஒரு சமூக நிகழ்வாளராக இருக்கிறார்.
‘அசலான தமிழ்ப் பண்பாட்டு அழகியலை இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் விளிம்புநிலை, அடித்தட்டு மக்களிடமே தேட வேண்டும்’ என்று வலியுறுத்தும் இவர், அவர்களுடைய அவலங்களை ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ முதல் ‘இந்திய தலித் இலக்கியம்’, ‘ஆதிவாசி இலக்கியம்’ வரை தமிழுக்குத் தந்து, உலக இலக்கியப் போக்கினை நம் கண்முன் காட்டுகிறார். ‘21ஆம் நூற்றாண்டின் டிஜிட்டல் யுகத்தைச் சேர்ந்த மனிதன் என்கிற வகையில் எனது குரலைப் பதிவுசெய்தே தீர வேண்டும் எனும் கட்டாயத்தின் வெளிப்பாடு’ என இவரது கவிதைகள் ஓங்கி ஒலிக்கின்றன.
ஒருபக்கம் கவிஞராக அடையாளப்படுத்திக் கொண்டாலும் பிறிதொருபுறம் கலை விமர்சகராகவும் பயணித்துத் தமிழகத்து ஓவியர்களை இந்திய அளவில் மட்டுமின்றி, உலக அளவில் விமர்சனக் கண் கொண்டு வெளிச்சமிட்டுக் காட்டினார். குறிப்பாக, பாரிஸ் நகரத்தில் மிக முக்கியமான கலைக்கூடத்தில் ‘தமிழ் ஆர்ட்’ என்ற பெயரில் 20 தமிழ் ஓவியர்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்தி, அந்த ஓவியர்களை உலகம் அறிய வழி ஏற்படுத்தினார். மேலும், சென்ற தலைமுறை முதல் வளரும் தலைமுறை வரையிலான தமிழகத்து ஓவியர்களை உலக ஓவியர்களாகக் கொண்டு சென்றவர் இந்திரன்.
அட்டைப்படம் முதல் உள்ளடக்கம் வரை இவரது நூல்கள் ஒரு கலைஞனின் நுட்பமான நுண்வரைவுடன் தனித்துவமாய் மிளிர்ந்து வாசகனையும் தன்பக்கம் இழுத்து அரவணைத்துக் கொள்ளும்.
என் பெயரில் சமஸ்கிருதம்/ நாவில் ஆங்கிலம்/ மனதில் தமிழ்... எதைத் தொடங்கி/ அதிகம் போனால் என்ன செய்ய முடியும்?’ தீவு மனிதன்’ என்ற பெயரில்/ ஒரு கவிதை.
- இக்கவிதை இவரது சுயவிமர்சனப் பார்வை என்றே சொல்லத் தோன்றுகிறது.
| இந்திரன் 75 விழா தமிழின் குறிப்பிடத்தக்க கலை இலக்கிய விமர்சன ஆளுமையான இந்திரனின் 75ஆவது பிறந்த நாளையொட்டி, ’இந்திரன் 75’ எனும் கலை இலக்கிய விழாவை பல்வேறு இலக்கிய அமைப்புகள், பதிப்பகங்கள் இணைந்து ஜூன் 11 (ஞாயிறு) அன்று முன்னெடுக்கின்றன. சென்னை கோட்டூர்புரத்திலுள்ள தமிழ் இணையக் கல்விக் கழகக் கலையரங்கில் காலை 10 மணிக்குத் தொடங்கும் விழாவில் இலக்கியக் கூடல், இசை நிகழ்வு, கவிதை நாடகம், நூல் வெளியீடு, ஆவணப்படம் திரையிடல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இவ்விழாவில் இந்திரன் எழுதிய நூல்களோடு, இந்திரனின் படைப்புகள் குறித்து எழுதப்பட்டுள்ள நூல்களும் வெளியிடப்படவுள்ளன. |
இலக்கிய உலகம் ஒரு சோலையைப் போன்றது. அங்கு பலவகைப்பட்ட மொழிகள் உண்டு; கலைகள் உண்டு; சிற்பங்கள் உண்டு. ஒவ்வொரு மொழியிலும் உள்ளத்தை அள்ளும் பாட்டும் உரையும் உண்டு. சிறந்த மொழியினின்று பிறந்த மொழிகள், தனி மொழிகளாகத் தழைத்தலும் உண்டு. இவற்றையெல்லாம் கண்டு, கேட்டு, கற்று, ஆய்ந்து ஒவ்வொரு மொழியிலும் அந்த மொழிகளைப் பேசும் மக்களைத் தரிசித்துத் தன் கலை இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்தவர்; தொடர்ந்து வருகிறவர் இந்திரன்.
உதாரணமாக, கன்னடத்துச் சர்வக்ஞ ருக்கும் தமிழ்த் திருவள்ளுவருக்கும் சிலை எழுப்பியபோது, கன்னடக் கவிஞர்கள், ஓவியர்கள் யக் ஷ கானா நிகழ்த்துக்கலை கலைஞர்களைச் சென்னைக்கே அழைத்துவந்து, தமிழ்க் கவிஞர்-ஓவியர் கூட்டுறவைப் பேணும் வண்ணம் உரையாடலை ஏற்படுத்தினார்.
அதேபோல், ஒடிய மொழிக்காரர்கள் 20 பேரைத் தனிப்பட்ட முறையில் சென்னைக்கு அழைத்துவந்து, தமிழ்-ஒரிய கலைஞர்களின் கவிதை வாசிப்பை உருவாக்கித் தமிழ்-ஒரியா-ஆங்கிலம் மொழிகளில் ’கவிதாயனா’ என்ற பெயரில் மும்மொழி நூலையும் வெளியிட்டார்.
தனது கலை-இலக்கியப் பயணத்தில் உலகை நோக்கவும் அந்நாட்டுப் படைப்பாளிகளை அறியும் வகையில் அவர்களைக் கண்டும் அவர்களின் படைப்புகளின் வீச்சைத் தான் கற்று, தமிழ் மக்கள் அறியவும் நூல் வடிவாய்ப் பதிவுசெய்தவர். அதன் வழியே செயலூக்கமுள்ள படைப்பாளியாகத் தமிழுலகில் இன்றுவரை பயணித்துவருகிறார்.
தமிழ் எழுத்துலகம் குழுமனப்பான்மையுடன் செயல்பட்டுவரும் நிலையில், எந்தக் குழுக்களோடும் சிக்காமல் தனக்கென தனிப் பாதை வகுத்து அதன்வழியே பயணிப்பது மட்டும் அல்லாமல் வளரும் தலைமுறைப் படைப்பாளிகளை ஊக்குவித்து அரவணைப்பதால் இவருக்குப் பின்னால் வாசகர் பட்டாளம் பதாகை ஏந்திப் பயணிக்கிறது.
- எழில் முத்து
பத்திரிகையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: ezhilmuthu57@gmail.com