Published : 05 Oct 2017 08:43 AM
Last Updated : 05 Oct 2017 08:43 AM

அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரம்: ஒரு வரலாற்றுப் பார்வை!

மெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 58 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இதுவரை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலேயே மிக மோசமானது என்று கருதப்படுகிறது. உலகின் மக்கள் தொகையில் அமெரிக்க மக்களின் பங்கு 5%-க்கு சற்றே குறைவு. ஆனால், சொந்தமாக வைத்திருக்கும் துப்பாக்கிகளில் கிட்டத்தட்ட பாதி அமெரிக்கர்கள் கைகளில். கடந்த ஐந்து ஆண்டுகளில் 1,500- க்கும் அதிகமான துப்பாக்கிச் சூட்டு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன; கிட்டத்தட்ட நாளுக்கொன்று ஒரு துப்பாக்கிச் சூடு. ஜெர்மனி, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் துப்பாக்கிச் சூட்டினால் நடக்கும் கொலைகளின் மொத்த எண்ணிக்கையை விட அதிக உயிர்ப் பலிகள் நடப்பது அமெரிக்காவில்தான்.

துப்பாக்கி மீதான கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் குறைவாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படியானால், துப்பாக்கிக் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துவிட வேண்டியதுதானே; ஒரு வல்லரசு தேசத்தால் இதைச் செய்ய முடியாதா எனும் கேள்வி தோன்றலாம். எளிதாகச் செய்ய முடியாது என்பதே உண்மை. அதை அறிந்துகொள்ள அமெரிக்காவின் துப்பாக்கி மீதான காதலின் வரலாற்றைப் பார்க்க வேண்டியது அவசியம்.

ஆயுத உரிமை

18-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை பெறுவதற்கான அமெரிக்க புரட்சிப் போர் நமக்குத் தெரியும். விடுதலைக்காக போராடிய அமெரிக்கத்த் தரப்பு அரசியல் ரீதியாகத் தங்களைக் கட்டமைத்துக்கொள்ள முடிந்தாலும், ஒட்டு மொத்த ராணுவத்தை உருவாக்கி, பேணிக்காக்க முடியவில்லை. எனவே, ‘மிலிஷியா’ எனப்படும் தனியார் ராணுவக் குழுக்களைக் கொண்டே போர் நடத்தப்பட்டது. விடுதலைக்குப் பிறகும் குழுக்கள் தொடர்ந்து அமெரிக்காவின் அங்கமாகவே கருதப்பட்டன. இதற்கு மிக முக்கிய காரணம் உண்டு. அமெரிக்காவின் பிதாமகர்களாகக் கருதப்படும் பலரும் மன்னராட்சியின் கீழ் இருந்தவர்கள். கிறிஸ்தவ மதம் மன்னராட்சிகளை எப்படிக் கட்டுப்படுத்தியது என்பதன் அவலத்தை நன்குணந்தவர்கள். எனவே, அரசு என்பது கட்டுப்பட்டதாகவும், மதத்தை விட்டு பிரிக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்பதையும் முழுமையாக நம்பினார்கள். அதன் அடிப்படையில், தனித்தியங்கும் ராணுவக் குழுக்கள் சமூகத்தின் பாதுகாப்புக்கு அவசியம் என்ற எண்ணம் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவர் களுக்கு இருந்தது. அடிப்படையான அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டு, அதைத் தொடர்ந்து 10 சீர்திருத்த மேம்பாடுகள் கொண்டுவரப்பட்டன. உரிமைகளுக்கான மசோதா என அழைக்கப்படும் இந்த அடிப்படை உரிமைகள் சார்ந்த சீர்திருத்தங்களின் இரண்டாவது இடத்தில் இருப்பது துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமை.

“நன்றாக ஒழுங்கமைக்கப்பட்ட மிலிஷியா, ஒரு சுதந்திர அரசின் பாதுகாப்பிற்கு அவசியம், ஆயுதங்களை மக்கள் வைத்திருப்பதற்கான உரிமை மீறப்படலாகாது” என்கிறது அந்த இரண்டாம் சட்டத் திருத்தம்.

18-ம் நூற்றாண்டின் கடைசியில் எழுதப்பட்ட இந்த அடிப்படை உரிமை இன்று வரை அப்படியே நீடிக்கிறது. அமெரிக்கர்களின் ஊனிலும் உயிரிலும் கலந்திருக்கும் இந்த உரிமை இந்த சமூக ஆன்மாவின் இருளாக மாறிவிட்டது பெரும் சோகம். பெரும்பாலான மாகாணங்களில் சாதாரணப் பொருட்கள் வாங்கும் ‘வால்மார்ட்’ போன்ற வணிகத் தளங்களில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை எளிதாக வாங்க முடியும்.

துப்பாக்கி உரிமையைக் கட்டுப்படுத்தியாக வேண்டும் என்று விரும்புபவர்கள் எடுத்து வைக்கும் கருத்துக்கள் :

1. 150 ஆண்டுகளுக்கு முன்னால் துப்பாக்கி என்ற ஆயுதத்தின் தொழில்நுட்பம் மிகவும் பின்தங்கியிருந்தது. இன்றைய நாட்களில் நொடிக்கு நூறு தோட்டாக்கள் தானாகவே பாயும் தானியங்கும் துப்பாக்கிகள் வந்துவிட்டன. ராணுவத்தினருக்கு இந்த வகை ஆயுதங்கள் தேவையே. ஆனால், பொது மக்களுக்கு இது போன்ற கன ரக ஆயுதங்கள் தேவையேயில்லை.

2. அடிப்படை உரிமை என்பதால் வாங்குபவர் யார், அவரது பின்னணி என்ன, மனச்சிக்கல்/நோய் ஏதேனும் இருக்கிறதா என்பதையெல்லாம் ஆராய்ந்து அறிய முடியவதில்லை. இது முற்றிலும் தவறானது. காரணம், பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடத்தியவர்கள் மனப்பிறழ்வு நோய் உள்ளவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்படிப் பல.

துப்பாக்கி உரிமையில் கை வைக்க யாருக்கும் உரிமையில்லை என்பவர்களின் ஒரே வாதம் - “துப்பாக்கி மனிதர்களைக் கொல்வதில்லை; மனிதர்களே மனிதர்களைக் கொல்கிறார்கள்”. வீடு புகுந்து நடத்தப்படும் கொள்ளைச் சம்பவங்களில் வீட்டு உரிமையாளர் துப்பாக்கியின் உதவியுடன் தங்களைத் தற்காத்துக்கொண்ட சம்பவங்களைத் தங்கள் வாதத்தில் முன்வைக்கிறார்கள் இவர்கள்.

துப்பாக்கி உரிமைக்காகக் குரலெழுப்புவதில் மிக முக்கிய நிறுவனம் ‘தேசிய துப்பாக்கி சங்கம்’ (என்.ஆர்.ஏ.) பண பலம் மிகுந்த இந்த நிறுவனம் தேர்தல்களின்போது, தங்களது கொள்கைகளுக்குச் சாதகமாக இருக்கும் வேட்பாளர்களை ஆதரித்து அவர்களது தேர்தல் பணிக்கு நிதி கொடுக்கிறது. குறிப்பாக, அதிபர் தேர்தலில் இந்த நிறுவனத்தின் சார்பு மிகக் கூர்மையாக உற்றுநோக்கப்படும். சென்ற தேர்தலில், ஹிலாரி கிளிண்டனுக்கு மிகக் கடுமையான எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தது என்.ஆர்.ஏ. வெளியுறவுத் துறைச் செயலாளராக ஹிலாரி பதவி வகித்தபோது துப்பாக்கிக் கட்டுப்பாடுகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததுதான் காரணம்.

இஸ்லாமிய வெறுப்பு

அமெரிக்கா பூகோளரீதியில் ஆசிர்வதிக்கப்பட்ட நாடு. இரு புறமும் நீண்ட கடல்பரப்பு. மேலும், கீழும் நட்புத்தோழமை பாராட்டும் அண்டை நாடுகள் என இயற்கையாகப் பாதுகாக்கப்பட்டிருக்கும் நாடு. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தெரிந்தோ தெரியாமலோ உலகின் சச்சரவுகளில் இடைபட்டுக் கொண்டே இருக்க வேண்டிய நிர்பந்தம் என்பதால், இந்த நாட்டின் எல்லைகளுக்கு வெளியே எதிரிகள் உண்டு. குறிப்பாக, ஐஎஸ் போன்ற அமைப்புகள். “ லாஸ் வேகாஸ் சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது ஒரு இஸ்லாமியராக என்ன நடந்திருக்கும்? அதிபர் ட்ரம்ப் தொடந்து உறுமியபடி இருப்பார்; காங்கிரஸ் கூட்டப்பட்டுத் தீவிர விசாரணைகள் ஆரம்பித்திருக்கும். இஸ்லாமிய சமூகம் மீது வெறுப்புச் சம்பவங்கள்கூட நடந்திருக்கும்” என்று தாமஸ் எல். ஃப்ரீட்மேன் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் எழுதியிருக்கிறார். ஆனால், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர் ஸ்டீபன் பேடாக் என்ற சராசரி கிறிஸதவ வெள்ளையின அமெரிக்கர். “சம்பவம் துயரமளிக்கிறது” என்ற ‘ட்வீட்’டோடு முடித்துக்கொண்டுவிட்டார் ட்ரம்ப்.

ஆக, மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு. மீண்டும் ஒரு துர் மரணக் கொலை வைபவம். இரண்டு நாட்கள் ஊடகங்களும் மக்களும் பரபரப்பாகப் பேசுவார்கள். பின்னர் கலைந்து சென்றுவிடுவார்கள். அதிபரே சம்பிரதாயத் துக்கத்தை ட்விட்டரில் அனுப்பி கால்ஃப் விளையாடச் சென்றுவிட்டார். மீண்டும் இது போன்றே சம்பவம் ஒன்று நடக்கும். மீண்டும் பேசுவார்கள்; கலைவார்கள். இஸ்லாமியர் ஒருவர் சம்பந்தப்படாதவரை அதிபரும் நாடாளுமன்றமும் சம்பிரதாய துக்கங்களை ஒற்றை வரிகளில் சொல்லி தங்கள் வேலைகளில் மூழ்குவார்கள். இது அமெரிக்காவின் சமகால வரலாறு!

- அண்டன் பிரகாஷ், எழுத்தாளர், தகவல் தொழில்நுட்ப வல்லுநர், தொடர்புக்கு: anton.prakash@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x