Last Updated : 07 Jun, 2023 06:18 AM

 

Published : 07 Jun 2023 06:18 AM
Last Updated : 07 Jun 2023 06:18 AM

என்று தணியும் காவிரியின் தாகம்?

நதிநீர் வரலாற்றில் தொன்மையாகக் கூறப்படுவது ரோஹிணி நதிப் பிரச்சினையாகும். பொ.ஆ.மு. (கி.மு.) 580-களில் கபிலவஸ்துவுக்கும் ராம்காமுக்கும் இடையில் எல்லையாக ரோஹிணி நதி இருந்தது. பயன்பாட்டு உரிமை குறித்து இரு பகுதி மக்களுக்கும் இடையில் பிரச்சினை வெடித்தது. இந்தப் பிரச்சினையில் கௌதம புத்தர் தலையிட்டார்.

இது குறித்த அதிருப்தியில் புத்தர் கபிலவஸ்துவிலிருந்து வெளியேறியதாகவும் கூறுவர். நவீன இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு இடையில் நதிநீர்ப் பங்கீடு தொடர்பான பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றில், மிகுந்த சர்ச்சைக்குள்ளாவது கர்நாடகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான காவிரி நதிநீர்ப் பங்கீடுதான்.

புதிய கண்ணி வெடி: சில காலம் பெரிய சர்ச்சைகள் எழுந்திராத நிலையில், கர்நாடகத்தில் புதிய அமைச்சரவை சமீபத்தில் பொறுப்பேற்றது. டி.கே.சிவகுமார் துணை முதல்வராகவும் நீர்ப்பாசனத் துறை அமைச்சராகவும் பதவியேற்றார். அதே கையோடு, காவிரிப் பிரச்சினையில் ஒரு புதிய கண்ணி வெடியை அவர் புதைத்துள்ளார்.

“… நாம் சண்டை போட்டு நீதிமன்றத்துக்கு அலைந்து திரிந்தது போதும். தமிழ்நாடு மீது எங்களுக்கு விரோதம் இல்லை. போரிடும் நோக்கமும் இல்லை. அங்கு இருப்பவர்கள் எங்கள் அண்ணன் - தம்பிகள்... மேகேதாட்டு எங்கள் திட்டம். இதனால் தமிழகத்துக்குப் பயன் ஏற்படும்” என்று மே 30 அன்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அவர் பேசியுள்ளார். அத்துடன் மேகேதாட்டு அணைத் திட்டத்தை முன்னெடுக்க தம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

காவிரி வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயின் ஒருமுறை கூறினார். “கீழ் மாநிலங்களுக்குத் தண்ணீர் வழங்கும் இடத்தில் கர்நாடகத்தைக் கடவுள் வைத்துள்ளார். கர்நாடகமோ பெரியண்ணனாக நடந்துகொள்கிறது” என்று. கர்நாடகத்தின் இந்நிலைப்பாட்டால், தமிழ்நாடு பல பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகிறது.

புதிய அணை தேவையா? - காவிரி நீரை ஈராயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்துகிறது தமிழ்நாடு. சாகுபடிக்கென்று கர்நாடகம் சுமார் இருநூறு ஆண்டுகளாகவே பயன்படுத்திவருகிறது. தமிழ்நாட்டின் சுமார் 20 மாவட்டங்கள், 1.50 கோடி மக்களின் குடிநீர்த் தேவையையும் பல தலைமுறைகளாகக் காவிரி நிறைவுசெய்கிறது.

தமிழ்நாட்டின் 28 லட்சம் ஏக்கர் நிலத்தின் சாகுபடிக்கும் சுமார் 40 லட்சம் விவசாயக் கூலிகளின் வேலைவாய்ப்புக்கும் காவிரிதான் தலைமுறைகளாக வழிவகுக்கிறது. புனல் பெருக்கெடுத்த காவிரி ஏற்படுத்திய சீற்றங்களை, பேரிடர்களைத் தமிழ்நிலம் சந்தித்திருக்கிறது. எண்ணற்ற பயிர்ச் சேதங்களையும் உயிர்ச் சேதங்களையும் எதிர்கொண்டிருக்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சியிலும் காவிரிப் பிரச்சினை தொடர்ந்தது. விடுதலைக்குப் பிறகு 02.06.1990 அன்று காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 04.02.2007 அன்று அது இறுதித் தீர்ப்பை வழங்கியது. 19.09.2013 அன்று தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. 16.02.2018 அன்று உச்ச நீதிமன்றம் நடுவர் மன்றத் தீர்ப்பின் மீதான மேல் முறையீட்டு வழக்கை முடித்துவைத்தது. தமிழ்நாட்டுக்கான நீர்ப் பங்கீடு 192 டி.எம்.சியிலிருந்து 177.25 டி.எம்.சி. ஆகக் குறைக்கப்பட்டது. நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்க 17 ஆண்டுகள், 568 வாய்தாக்களை இழுத்துக்கொண்டது. பிறகு, கர்நாடகம் மேகேதாட்டு பிரச்சினையைத் தொடங்கியுள்ளது.

பெங்களூருவின் குடிநீர்த் தேவை 4.75 டி.எம்.சி. முந்தைய கணக்கீடுகளில் பெங்களூருவின் தேவை கணக்கிடப்பட்டதில்லை. நடுவர் மன்றமும் உச்ச நீதிமன்றமும் கூறியிருப்பதால் அதை ஏற்கலாம். ஆனால்67.14 டி.எம்.சி. நீரை 4,996 ஹெக்டேரில் தேக்கி, ரூ.9,000 கோடி செலவில் மேகேதாட்டு அணையைக் கட்டுமாறு அவை கூறவில்லை. பெங்களூருவின் குடிநீர் தேவையைக் கர்நாடக அரசு மிகைப்படுத்துகிறது.

தமிழ்நாட்டுக்கு முன்பாகவே இத்திட்டத்துக்கு முதல் எதிர்ப்பைக் கர்நாடகத்தின் பழங்குடியினரும் பட்டியல் சாதியினரும் தெரிவித்தனர். சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் 5 கிராமங்களிலிருந்து வெளியேறும் அவலம் ஏற்பட்டது. சூழலியலாளர் மேதா பட்கர் இத்திட்டத்தை எதிர்த்து கர்நாடகத்துக்கே சென்று குரல் கொடுத்தார். சர்வதேச நிறுவனங்களின் மெகா திட்டங்களுக்கு உதவுவதுதான் இவர்களின் நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.

வனப் பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு விதிமுறைகளின்படி எந்த அனுமதியும் பெறாமல் கர்நாடகம் மேகேதாட்டுவில் கட்டுமானப் பொருள்களைக் குவித்தது. பொறுக்க முடியாமல் தென் மண்டலப் பசுமைத் தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வு 26.05.2021 அன்று விசாரணையைச் சுயமாகத் தொடங்கியது. எனினும் பசுமைத் தீர்ப்பாயத்தின் டெல்லி அமர்வு தனக்கு அதிகாரம் இல்லாமலேயே சென்னை அமர்வின் விசாரணையைத் தடுத்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய, மாநில அரசுகளின் சுணக்கம்: ஆளும் கட்சிகள் மாறினாலும் காவிரி விஷயத்தில் கர்நாடகத்தை ஆள்வோரின் நிலைப்பாடு மாறுவதில்லை. முந்தைய பாஜக அரசின் முதல்வர் பசவராஜ் பொம்மை, மேகேதாட்டு திட்டத்தை நிறைவேற்ற ஒற்றைக் காலில் நின்றார். நிதிநிலை அறிக்கையில் திட்டத்துக்கென நிதி ஒதுக்கீடும் செய்தார்.

மத்திய அரசின் நீர்வளத் துறையின் அனுமதியைப் பெற்று 22.12.2021 அன்று கர்நாடக சட்டமன்றத்தில் தகவலை அறிவித்தார். மத்தியில் ஆளும் கட்சிகளும் காவிரிப் பிரச்சினையை நடுநிலையோடு அணுகுவதில்லை. 1892 காவிரி ஒப்பந்தப்படி மேகேதாட்டு திட்டத்துக்குத் தமிழ்நாடு அரசு அனுமதி மறுக்க முடியாது என மத்திய அரசின் நீர் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தெரிவித்தார்.

காவிரி இறுதித் தீர்ப்புகளுக்குப் பின் தமிழ்நாடு 15.87 லட்சம் ஹெக்டேர் நிலத்தின் சாகுபடியைப் பறிகொடுத்தது. கர்நாடகமோ தனது சாகுபடிப் பரப்பை 9.96 லட்சம் ஹெக்டேரில் இருந்து 38.25 லட்சம் ஹெக்டேராக உயர்த்தியது.

இப்போது, ‘கர்நாடகம் மின் உற்பத்தித் திட்டத்தைத் தொடங்குவதால், தமிழ்நாடு அரசுக்கு என்ன தொந்தரவு?’ எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாக டி.கே.சிவகுமார் கூறுகிறார். இந்த வாதம் காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு விரோதமானது. பாசனத் தேவைகளைப் புறந்தள்ளி மின்சாரத் திட்டங்களுக்கு அனுமதி தரக் கூடாது என்பதுதான் நீதிமன்றத்தின் கருத்து.

கூட்டாட்சி அமைப்புக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் விரோதமாக நடந்துகொள்ளும் கர்நாடக அரசின் போக்கை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழ்நாடு அரசோ காவிரிப் பிரச்சினையை அரைத் தூக்க நிலையில் அணுகுகிறது. 1968 முதல் 1990 வரை காவிரிப் பிரச்சினையில் 26 முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரும் 1992இல் இப்பிரச்சினை சார்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்; பலன் இல்லை. தமிழ்நாடு அரசோ மீண்டும் டி.கே.சிவகுமாருடன் பேசப்போவதாகக் கூறுகிறது. இந்த அணுகுமுறை காவிரிப் பிரச்சினையை நீர்த்துப் போகவைக்கும்.

பதில் மரியாதை: 16.02.2018 அன்று மேகேதாட்டு திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அதே போல் உயர் அதிகாரிகள்மீது தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர்ந்துள்ளது. தான் போட்ட வழக்கைத் தீவிரப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், சி.டி.ரவிகுமார், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பரிகாரம் கோரி பசுமைத் தீர்ப்பாயத்தை அணுக முடியும். நீதித் துறையை அணுகுவதிலும் மத்திய அரசை அரசியல்ரீதியில் நிர்ப்பந்தப்படுத்துவதிலும் தமிழ்நாடு அரசின் கவனம் தேவை. கடந்த சில ஆண்டுகளாக வான்மழைதான் தமிழ்நாடு அரசின் நீர்த் தேவையை நிறைவுசெய்துவருகிறது. உதாரணமாக, 2021இல் தமிழ்நாடு பெற்ற நீர் 4,563.9 டி.எம்.சி.; இதில் மழையாகக் கிடைத்தது 4,314.9 டி.எம்.சி.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு கர்நாடகத்தின் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோருக்குத் தமிழ்நாட்டில் பூமாரி பொழிந்தவர்கள் ஏராளம். பதிலுக்கு அவர்கள் கல்மாரி பொழியலாமா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x